புத்தகயா: பயங்கரவாதிகள் வைத்த 13 குண்டுகளில் 10 வெடிப்பு - முஜாஹிதீன் அமைப்பே சூத்திரதாரிகள் - Sri Lanka Muslim

புத்தகயா: பயங்கரவாதிகள் வைத்த 13 குண்டுகளில் 10 வெடிப்பு – முஜாஹிதீன் அமைப்பே சூத்திரதாரிகள்

Contributors

பொலிஸ் விசாரணையில் தகவல்

* முஜாஹிதீன் அமைப்பே சூத்திரதாரிகள்

* இதுவரை எவரும் உரிமைகோரவில்லை

* புத்த பிக்குகள் கொல்கத்தாவில் ஆர்ப்பாட்டம்

பிகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள மகா போதியில் பயங்கரவாதிகள் 13 குண்டுகளை வைத்துள்ளனர். அதில் 10 குண்டுகள் வெடித்துள்ளதாக மாநில காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குண்டு வெடிப்பு மற்றும் அது தொடர்பான விசாரணை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிகார் டிஜிபி அபயானந்த், கோவிலில் 10 குண்டுகள் வெடித்துள்ளன. வெடிக்காத நிலையில் 3 குண்டுகளை காவல்துறை கைப்பற்றியுள்ளது.

கோயிலைச் சுற்றி இருந்த சிசிடிவி கமராக்கள் நல்ல முறையில் இயங்கி வருகின்றன. அவை இயங்காமல் இருப்பதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் அமோனியம் நைட்ரேட் மற்றும் சல்பர், பொட்டாசியம் ஆகியவை கலந்து செய்யப்பட்டுள்ளன. மேலும் நேரத்தை பதிவு செய்து அதன்படி குண்டுகள் வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன என்று டிஜிபி கூறினார்.

இதற்கிடையே மேற்கு வங்க மாநிலம் நடியா மாவட்டத்தில் அன்வர் உசேன் என்பவனை நேற்று முன்தினம் மாலை பொலிஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவனிடம் ரூ. 2 இலட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள் இருந்தது.

அவன் புத்தர் கோவில் குண்டு வெடிப்புக்கு உதவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு புனே ஜேர்மன் பேக்கரி குண்டு வெடிப்புக்கு இவன் தான் வெடி பொருட்கள் விநியோகித்ததாக கூறப்பட்டது. அவனையும் பொலிஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

குற்றவாளிகளை கண்டு பிடிக்க தேசிய புலனாய்வு அமைப்பும், தேசிய பாதுகாப்புப் படையினரும் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆனால் நேற்று காலை குண்டு வெடித்த நிலையில் அவர்கள் நேற்றிரவுதான் விசாரணையை தொடங்கினார்கள். சுமார் 12 மணி நேரம் தாமதமாக தேசிய பாதுகாப்புப் படை செயல் பட தொடங்கி இருப்பதற்கு பா.ஐ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் எப்படி நடத்த வேண்டும் என்று பாகிஸ்தானில் இருந்து செயல்படும் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் நிறுவனர் ரியாஸ் பக்தல் உத்தரவிட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளதாக இந்திய உளவுத்துறை கூறுகிறது.

ரியாஸ் பக்தல் உத்தரவு படி கடந்த பெப்ரவரி மாதம் ஐதராபாத்தில் குண்டு வெடித்தது. அடுத்து புத்தர் கோவிலிலும் குண்டுகள் வெடித்து விட்டது. எனவே முஜாகிதீன்களின் அடுத்த குறி டில்லி, மும்பையாக இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ளூர் பொலிஸார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் சந்தேகப்படும்படி ஒரு நபர் பிடிபட்டார். அந்த நபரிடம் இருந்து ஏராளமான ஆவணங்களும் வரைபடங்களும் சிக்கின.

அவர் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து பீகார் மாநில பொலிஸார் அவரை இரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் இந்த சம்பவத்தில் இந்தியன் முஜாகிதீன்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று விசாரணை குழுவினர் முடிவுக்கு வந்துள்ளனர்.

பெளத்த மதத்தினர் அதிகமாக உள்ள மியான்மர் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக அடக்கு முறைகள் நடந்து வருகிறது.

இதற்கு இந்தியா உதவுவதாக பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் குற்றம்சாட்டின. எனவே இந்தியாவை பழி வாங்கும் நோக்கத்தில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளை பயன்படுத்தி பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக கருதப் படுகிறது.thinakaran

Web Design by Srilanka Muslims Web Team