புத்த சாசனத்தின் மேம்பாட்டுக்காக 395 கோடி ரூபா செலவு! -பிரதமர் - Sri Lanka Muslim

புத்த சாசனத்தின் மேம்பாட்டுக்காக 395 கோடி ரூபா செலவு! -பிரதமர்

Contributors
author image

Editorial Team

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு எமது அரசாங்கம் விஹாரைகள் மற்றும் பிக்குமார்களின் மேம்பாட்டுக்காக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.புத்த சாசனத்தின் மேம்பாட்டுக்காக புத்த சாசன அமைச்சினால் 395 கோடி ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தி.மு. ஜயரத்ன தெரிவித்தார்.

 

மாப்பாகட ஸ்ரீ சுதர்ஷனாராம விஹாரையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் தி.மு. ஜயரத்ன இதனை தெரிவித்தார்.

 

மஹியங்கனை ரஜ மஹா விஹாரைக்குச் சென்ற பிரதமர், மஹியங்கனை பிரதேசத்தில் அமைந்திருக்கும் விஹாரைகளுக்குச் சென்று குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

 

பிரதமர் கலாநிதி தி.மு.ஜயரத்ன அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,’ அரசாங்கம் விஹாரைகள் மற்றும் பிக்குமார்களின் மேம்பாட்டுக்காக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.புத்த சாசனத்தின் மேம்பாட்டுக்காக புத்த சாசன அமைச்சினால் 395 கோடி ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. விசேடமாக மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள விஹாரைகளுக்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும்.

 

ஏனெனில் மஹிந்த தேரர் இலங்கைக்கு பெளத்த மதத்தைக் கொண்டு வருவதற்கு முன்னர் புத்த பெருமான் இந்த மஹியங்கனைக்கு வந்து பெளத்த மதத்திற்கு வித்திட்டமையினாலாகும். அதனால் இப்பிரதேசத்தில் வசிக்கும் பிக்குமார்கள் உட்பட பொது மக்கள் இதற்காகப் பெருமைப்படல்வேண்டும் எனவும் கூறினார்.

 

பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் பக்க பலமாக விளங்கியவர்கள் இந்த நாட்டின் மகா சங்கத்தினராவர். இந்த நாட்டிற்கு ஆபத்து ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் அவற்றுக்கு முகங்கொடுப்பதற்கு முன்வந்தவர்கள் மகா சங்கத்தினராவர். எமது வரலாற்றில் அதற்கான உதாரணங்கள் ஏராளம் உண்டு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

ரம்பகென் ரஜ மஹா விஹாரையின் தலைமை தேரர் சங்கைக்குரிய கணுகொல்லே ரதனஜோத்தி தேரரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டார்.

Web Design by Srilanka Muslims Web Team