புனித அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தை பிரித்து யூதர்களுக்கான வழிபாட்டு தலம் ஒன்றை அமைக்க இஸ்ரேல் திட்டம்த - Sri Lanka Muslim

புனித அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தை பிரித்து யூதர்களுக்கான வழிபாட்டு தலம் ஒன்றை அமைக்க இஸ்ரேல் திட்டம்த

Contributors

புனித அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தை பிரித்து யூதர்களுக்கான வழிபாட்டு தலம் ஒன்றை அமைக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இது குறித்த சட்டமூலம் இஸ்ரேல் பாராளுமன்றமான நெஸட்டில் முன்வைக்கப்படவுள்ளது. “அல் அக்ஸா பள்ளிவாசலில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றி அங்கு தமது ‘டெம்பல் மவுன்ட்’ தேவாலயத்தை அமைக்க இஸ்ரேல் முயற்சிக்கிறது” என ஜெரூசலம் முப்தி மொஹமத் ஹுஸைன் அனடொலு செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார். மத விவகாரம் தொடர்பான இஸ்ரேல் துணை அமைச்சர் எலி பென் டஹான் கொண்டு வந்திருக்கும் இந்த சட்டமூலம் இஸ்ரேல் பாராளுமன்ற உள்துறை மற்றும் சூழல் குழுவினால் நேற்று விவாதிக்கப்பட்டது. அல் அக்ஸா வளாகத்தில் யூதர்கள் வழிபாடு நடத்துவதற்கு குறிப்பிட்ட பகுதி மற்றும் காலத்தை ஒதுக்குவதற்கு இந்த சட்டமூலத்தில் பரிந்துரைக் கப்பட்டுள்ளது.

எனினும் இந்த சட்டமூலத்திற்கு இஸ்ரேல் பாராளுமன்ற உள்துறை குழுவில் இருக்கும் பலஸ்தீனர் எதிர்ப்பு வெளியிட்டதால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும் யூதர்களுக்கு வழிபாடு நடத்த இடம் கிடைக்காத பட்சத்தில் அது குறித்து சட்ட உதவியைப் பெற தமது அமைச்சு திட்டமிட்டிருப்பதாக மதவிவகார துணை அமைச்சர் எலி பென் டஹான் எச்சரித்துள்ளார்.
எனினும் அல் அக்ஸாவில் யூதர்களுக்கு அனுமதி அளிப்பது மூன்றாவது ‘இன்திபாழா’ அல்லது பலஸ்தீன எழுச்சிக்கு வழிவகுக்கும் என இஸ்ரேல் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் பலஸ்தீனர்கள் எச்சரித்துள்ளனர்.

எனினும் மேற்படி பாராளுமன்ற குழுவின் தலைவரான ஆளும் வலதுசாரி லுகுட் கட்சியின் மிரி ரிகெவ், யூதர்கள் தமக்கு தேவையான தலத்தில் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட வேண்டும் என வாதிடுகிறார். இஸ்ரேலினால் யூதமயமாக்கப்படும் அக்ஸா பள்ளிவாசலை பாதுகாக்கும்படி பலஸ்தீன நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் ரியாத் அல் மலிக்கி முஸ்லிம் உலகத்திடம் வேண்டுகோள் விடுத்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அரபு வெளியுறவு அமைச்சர்களின் அவசர கூட்டத்திலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார்.

புனித அல் அக்ஸா பள்ளிவாசல் இருக்கும் கிழக்கு ஜெரூசலத்தை இஸ்ரேல் 1967 மத்திய கிழக்கு யுத்தத்தின் போது ஆக்கிரமித்தது. பின்னர் அது ஒன்றிணைக்கப்பட்ட தலை நகரின் ஒரு பகுதி என இஸ்ரேல் பிரகடனம் செய்தது. எனினும் அதனை ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை.-TC

Web Design by Srilanka Muslims Web Team