புனித கஃபவில் மண்டியிட்டு பிரார்த்திக்கவுள்ளேன்: ஏறாவூர் ஆசியா உம்மா ஏன் அழுகின்றார்? » Sri Lanka Muslim

புனித கஃபவில் மண்டியிட்டு பிரார்த்திக்கவுள்ளேன்: ஏறாவூர் ஆசியா உம்மா ஏன் அழுகின்றார்?

625.0.560.320.160.600.053.800.700.160.90

Contributors
author image

Editorial Team

வீட்டுப் பணிப் பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்று கடந்த 11 வருடங்களுக்கு மேலாக எனது மகள் திரும்பி வரவே இல்லை. இதனால் புனித கஃபவில் மண்டியிட்டு பிரார்த்திக்கவுள்ளேன் என காணாமல் போன யுவதியின் தாய் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

11 வருடங்களுக்கும் மேலாக மகளிடமிருந்து எதுவித தொடர்புகளும் இல்லை. எனது மகளை மீட்டுத் தருமாறு ஜனாதிபதி தொடக்கம் அனைத்து தரப்பிடமும் கெஞ்சினேன். பயன் எதும் இல்லாததால் மக்கா சென்று புனித கஃபா ஆலயத்தில் மண்டியிட்டு பிரார்த்திக்கவுள்ளேன்.

ஏறாவூர் காயர் வீதியைச் சேர்ந்த முஹம்மது ஹனீபா பிர்தௌஸியா (வயது 35) என்ற யுவதி கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 02ஆம் திகதி, கொழும்பிலுள்ள ஹஸ்னா மேன்பவர் முகவரினூடாக வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியா சென்றார்.

ஆனால், 11 வருடங்களாகியுள்ள போதிலும் தனது மகள் நாடு திரும்பவே இல்லை என்று யுவதியின் தாயான சின்னலெப்பை ஆசியா உம்மா (வயது 74) தெரிவித்தார்.

அதேவேளை தனது மகளிடமிருந்து கடந்த 6 வருடங்களாக தொடர்பு நின்று விட்டதோடு அவர் காணாமல் போயிருப்பதாகவும் தாய் தனது முறைப்பாடுகளில் தெரிவித்துள்ளார்.

இது விடயமாக கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நல்லிணக்கப் பிரிவுக்கு 2013 ஜனவரி 16ஆம் திகதி முறைப்பாடு செய்தபோது “அடுத்த வினாடியிலிருந்தே தமது பணியகம் நடவடிக்கை எடுக்கும்” என்று பத்திரம் ஒன்று தரப்பட்டது.

ஆனால் இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டு 5 வருடங்கள் கழிந்து விட்ட போதிலும் தனது மகளின் விடயமாக எதுவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என்று யுவதியின் தாய் கூறினார்.

தனது மகளின் நிலைமை தொடர்பாக கண்டறியுமாறும் தனது மகளை மீட்டுத் தருமாறு கோரியும் ஜனாதிபதி, மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை ஆணைக்குழு பிரதேச செயலக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பிரிவு என்பனவற்றுக்கு அறிவிக்கப்பட்ட போதும் இதுவரை எந்தவொரு நம்பிக்கை தரும் தகவலும் தனக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எனது மகளை என்னிடம் இறைவன் சேர்ப்பிக்க வேண்டும் என்ற மனச்சாந்தியில் நிர்க்கதியான நான் புனித மக்கமா நகர் சென்று பிரார்த்திக்கவுள்ளேன்.

என் மரணம் அங்கு சம்பவித்தாலும், எனது மகள் சென்ற நாட்டில் இடம்பெற்றால் அது எனக்கு நிம்மதியையும் நிறைவையும் தரும்’ என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90 625.0.560.320.160.600.053.800.700.160.9055

Web Design by The Design Lanka