புர்கா ஆடை அணிவதில் எனக்கும் உடன்பாடில்லை -நீதியமைச்சர் அலி சப்ரி..! - Sri Lanka Muslim

புர்கா ஆடை அணிவதில் எனக்கும் உடன்பாடில்லை -நீதியமைச்சர் அலி சப்ரி..!

Contributors

புர்கா ஆடை அணிவதில் தனக்கும் உடன்பாடில்லை என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்த அவர், இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

புர்கா ஆடை என்பது அராபிய கலாசாரம். இதனை சமுகம் என்றவகையில் முஸ்லிம் சமுகமே சிந்தித்து புர்கா அணிவதை நிறுத்த வேண்டும். புர்காவை நானும் எதிர்க்கிறேன். இதனைக் கடந்த பத்து வருடங்களாகவே கூறிவருகிறேன்.

புர்காவுக்கு தடை விதிப்பதற்கு அப்பால் புர்கா அணியக் கூடாது. தனது மதத்தை மற்றொருவருக்குக் கொண்டு செல்வது முஸ்லிம்களுக்கு முக்கியமான ஒன்று. எனவே, இதற்கு ஏனையோருடன் முதலில் கலந்துரையாட வேண்டும். இதனை விடுத்து முகத்தை மூடிக்கொண்டு இருப்பது பயனற்றது.

கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றும்போது, அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருந்தது. எனினும் அனைவரது கருத்துகளையும் கேட்டு நடுநிலைமையாகவே இதன்போது அரசாங்கம் செயற்பட்டது என்றார்.

இச்சட்டமூல வாக்கெடுப்பின்போது தனது வாக்கையும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத்தின் வாக்கும் கணக்கில் எடுக்கப்படாது தவற விடப்பட்டுள்ளது என்றார். தற்போதைய அரசாங்கம் புர்காவுக்கு தடை விதிக்கவில்லை.

முஸ்லிம் சமுகம் ஏனைய சமுகங்களிடமிருந்து பிரிவதற்கு புர்காவும் ஒரு காரணமென கடந்த அரசாங்கம் கூறியது. கடந்த அரசாங்கத்தின் பரிந்துரையே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team