புல்மோட்டை அன்வருடனான நேர்காணல் (வீடியோ) » Sri Lanka Muslim

புல்மோட்டை அன்வருடனான நேர்காணல் (வீடியோ)

anvar

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

(video)


உண்மையில் கிழக்கு மாகாணதில் அதிலும் முக்கியமாக அம்பாறை மாவட்டத்தில் உருவெடுத்துள்ள கிழக்கின் எழுச்சி எனும் பெயரிலே முன்னெடுக்கப்படுகின்ற எழுச்சியினை பொருத்தமட்டில் முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கு எதிராக அரசியல் ஈடுபட்டு அதில் தோல்வியுற்ற நிலையில் இருக்கின்ற எல்லோரையும் ஒன்று சேர்த்து எழுச்சி பெறும் நோக்கத்தில் அல்லது தங்களுடைய அரசியல் இருப்புக்களை எதிர் காலத்தில் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாகவே இந்த எழுச்சியானது முற்றிலும் பார்க்கப்படுகின்றது.

அதே நேரத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற அரசியல் உச்ச பீட உறுப்பினர்கள், போராளிகள் எல்லாம் தடுமாறால் நிலையான வைப்பிலே நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே முஸ்லிம் காங்கிரசின் நிலையான வைப்பென்பது ஒரு பொழுதும் சரிந்து விழுவதற்கு வாய்ப்பே இல்லை. குறிப்பாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் மீண்டும் தனது அரசியல் எனும் கதிரையினை சூடாக்கி கொள்வதற்கான சவாரி செய்யும் வாகனம்தான் கிழக்கின் எழுச்சியாகும். மக்களால் கடந்த காலங்களில் அரசியல் முகவரி இழக்கச்செய்யப்பட்ட இவ்வாறான சந்தர்ப்ப அரசியல்வாதிகளினால் முன்னெடுக்கப்படுகின்ற எந்த எழுச்சியினாலும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையினை அசைக்க முடியாது என ஆணித்தரமாக மேற்கண்டவாறு கூறினார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான புல்மோட்டை அன்வர்.

மேலும் அன்வருடனான நேர்காணலின் பொழுது கேற்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த விரிவான பதில்கள் வருமாறு…

கேள்வி:- தற்பொழுது திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கின் எழுச்சியானது எந்த நிலையில் இருகின்றது?

புல்மோட்டை அன்வர்:– எழுச்சி எனும் தொணிப்பொருளிலே முஸ்லிம்களை தவறான வழியில் கொண்டு செல்லபடுகின்ற பாங்காகத்தான் என்னால் பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இந்த எழுச்சியினை கொண்டு செல்கின்றவர்கள் தனித்தனியாகவோ அல்லது தாங்கள் அரசியலில் எதிர்பார்த்த திட்டங்களை நிறை வேற்றிக்கொள்ள முடியாத நிலைக்கே தள்ளப்பட்டுள்ளதன் விளைவாகவே எழுச்சி என்ற போர்வைக்குள் நின்று கொண்டு அரசியல் செய்ய முற்பட்டுள்ளார்கள். முஸ்லிம் காங்கிரசின் மீதும் அதன் தலைமைத்துவத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். ஆகவே இந்த எழுச்சியினால் கட்சியையோ அல்லது தலைமையையோ ஒன்றும் செய்து விட முடியாது.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் உருவெடுத்துள்ள இந்த எழுச்சியின் ஒரு அங்காமாக அங்கமாக கடந்த கிழமை மூதூரில் எழுச்சி மாநாடு எனும் தொணிப்பொருளில் நடாத்தப்பட்ட கூட்டதில் கதிரைகள் எல்லாம் வெறுச்சோடிக் காணப்பட்டதனை பார்க்கின்ற பொழுது எழுச்சியை மாற்றியமைக்கப்பட்ட வேண்டும் அல்லது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உள்ளார்ந்தமாக திருகோணமலை மக்கள் இந்த எழுச்சிக்கு பின்னால் செல்வதற்கு ஒரு பொழுதும் தயார் இல்லை என்பதை உணர்த்தியது. ஆகவே அரசியலில் விழுந்திருப்பவர்கள் மீண்டும் எழுந்து நிற்பதற்கு ஒரு தளமாக எழுச்சியினை பயண்படுத்துகின்றார்கள் திருகோணமலை மக்கள் நன்கறிந்தவர்களாக இருக்கின்ற படியினால் இந்த கிழக்கின் எழுச்சியானது திகோணமலையில் எந்த நிலையிலும் வாலாட்ட முடியாது என்பதே எனது கருத்தாகும்.

கேள்வி:- கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலையில் சரிவினை சந்தித்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிலைமை அல்லது அதற்கு இருக்கும் ஆதரவு தற்பொழுது எவ்வாறு இருக்கின்றது?

புல்மோட்டை அன்வர்:- உண்மையிலே கடந்த பொது தேர்தலின் பொழுது பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தினை இழந்தமை உண்மையான விடயமாகும். ஆனால் அதற்கு முந்திய பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த வாக்குகளை விடவும் மூவாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் பெற்றிருந்தது. அரசாங்கம் மாற்றப்பட்ட கையோடு நால்லட்சி உறுவாக்கப்பட்டு பிரதமர் ரணில் விகரமசிங்கவின் வழிகாட்டலில் எதிர் கொண்ட முதலாவது பொதுத்தேர்தல் என்ற படியினாலும், யானைச்சின்னத்திலே எல்லோரும் போட்டியிட்டார்கள் என்ற காரணதினாலும், கடந்த காலங்களில் மனச்சோர்விலே இருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் ஐக்கியதேசியக் கட்சிக்கு ஒருமித்து வாக்களித்தினாலும் அப்துல்லா மஃரூஃப் மற்றும் இன்றான் மஃரூஃப் போன்றவர்களுக்கு அந்த தேர்தலின் கதிர் வீச்சானது பக்கபலாமாக அமையப்பெற்றிருந்தது.

முஸ்லிம் காங்கிரசினுடைய வாக்கு வங்கியினை வைத்து நாங்கள் பெற்ற வாக்குகளில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டவர்களுக்கும் பெருமளவிலான விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. அத்தோடு தற்பொழுது மாகாண சபையில் இருக்கின்ற அருன் போன்றவர்கள் தாங்கள் மாகாண சபையில் அங்கம் வகிக்க வேண்டும் என்பதற்கான மகாண சபையில் அங்கத்தவர்களாக இருந்து போட்டியிட்ட இம்ரான் மஃரூஃப் போன்றவர்களுக்கு வாக்களித்திருந்தார்கள். இதனால்தான் திருகோணமலையில் எமது ஆசனமான எம்.எஸ்.தெளபீக்கினுடைய ஆசனத்தினை சென்ற முறை இழப்பதற்கு பிரதான காரணமாக அமைந்தது. ஆனால் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு திருகோணமலையில் இருந்த ஆதரவு ஒரு பொழுதும் குறையவில்லை என்பது நிதர்சனமான விடயமாகும். அத்தோடு திருகோணமலைக்கு தேசியப்பட்டியல் எம்.எஸ்.தெளபீக்கிற்கு வழங்கப்பட்டதற்கு பிற்பாடு கட்சிக்கு இருந்த ஆதரவு மேலும் அதிகரித்துள்ளது என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

கேள்வி:- மாகாண சபை உறுப்பினராக இருக்கின்ற நீங்கள் கட்சியின் உயர் பீட உறுப்பினராகவும் இருக்கின்றீர்கள். ஆகவே கடந்த உயர் பீட கூட்டத்தின் பொழுது கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தினை பேச விடாது தடுத்தமை சம்பந்தமாக நீங்கள் கட்சியின் தலைமையின் பக்கமா? அல்லது தவிசாளரின் பக்கமா?

புல்மோட்டை அன்வர்:- உண்மையிலே நான் கட்சியின் தலைமையின் பக்கமா? அல்லது தவிசாளரின் பக்கமா? என்பது ஒரு புறமிருக்க, என்றும் நான் முஸ்லிம் காங்கிரசின் போராளியாகவும் முஸ்லிம் காங்கிரசில் இருந்து அரசியல் முகவரி பெற்று கொண்ட ஒருவராகவும் இருக்கின்ற படியினால் தலைமைத்துவத்தின் பக்கம் என்பதனை விடவும் எங்களுடைய தலைமைத்துவம் பல அரசியல் பிரதி நிதிகளை கட்டுக்கோப்புடன் நடாத்திவருக்கின்ற தலைமை என்ற படியினால் தலைமைத்துவத்தின் நடவடிக்கைகளில் எங்களால் பிழைகள் கண்டுபிடிக்க முடியாது என்பதே எனது கருத்தாகும். ஆனால் எங்களுடைய தவிசாளர் பசீர் சேகுதாவூத் கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்த நிலையியே கடந்த உயர் பீட கூட்டத்தில் உரையாற்ற முற்பட்ட முற்பட்ட பொழுது அவருடைய உரையானது நிறுத்தப்பட்டமை என்பது என்னை பொறுத்த மட்டில் பொறுத்தமற்ற விடயமாகவே நான் கருதுகின்றேன்.

ஏன் என்றால் தவிசாளர் பேச எத்தனித்த வேலையில் அவர் யாருக்கு எதிராக உரையாற விளைகின்றார்? அல்லது எவ்வாறான பிரச்சனைகளை முன்வைக்க போகின்றார்? அவருடைய நியாயப்பாடுகள் என்ன? என்பது சமபந்தமாக அவருக்கு உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கியிருந்தால் அதில் தெளி பெற்றிருக்க வாய்ப்பிருந்திருக்கும். எனவே கட்சியிலே இருந்து கொண்டு கட்சிக்கு எதிராக செயற்படுகின்றார் என்பது பற்றிய விமர்சனங்களை அறிவதற்கு அன்று ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அவருடைய உரை தடுக்கப்பட்டமையானது பொறுத்தமற்ற விடயமாகவே நான் பார்க்கின்றேன். அவருடைய கருத்துக்களை உள்வாங்கி அதற்கான தீர்வுகளை உயர் பீட கூட்டத்தில் வழங்கி இருக்கலாம். தலைவர் கூட அவருக்கு உரையாற்ற சந்தர்ப்பம் வாழங்குமாறே உயர் பீட உறுப்பினர்களை கோறியிருந்தார். வெளியில் அவர் கட்சிக்கு எதிராக விடுகின்ற அறிக்கைகளுக்கும் அன்று தெரிவிக்க வந்த கருத்துகளிலும் வித்தியாசம் காணப்பட்டிருந்தால் அன்று தலைவர் உட்பட ஏனைய அரசியல் பிரதி நிதிகள் தீர்க்கமான முடிவினை எடுத்திருக்கலாம் என்பதே எனது கருத்தாகும்.

கேள்வி:-அரசியல் பரவலாக்கள் சம்பந்தமாகவும் வடகிழக்கு இணைப்பு பற்றி பேசப்படுவதையும் நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

புல்மோட்டை அன்வர்:- கடந்த காலங்களில் திருகோணமலை மாவட்டத்திலே முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அசம்பாவிதங்கள், முஸ்லிம்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விடயங்கள், முஸ்லிம்களினுடைய நிருவாக அலகுகள், அதிகாரகார பரவலாக்கம், சம்பந்தமாக பார்க்கின்ற பொழுது குறிப்பாக வடகிழக்கு இணைப்பு என்பது மீண்டும் ஏற்படும் என்பதில் நான் நம்பிக்கை அற்றவனாகவே இருக்கின்றேன். அவ்வாறு வடகிழக்கு இணைப்பு ஏற்பட வேண்டும் என்றால் முஸ்லிம்களுக்கான சகல அதிகார பூர்வமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அதிலே குறிப்பாக அம்பாறை மாவட்டத்திற்கு மாத்திரம் அதிகாரம் வழங்கப்படுகின்ற நிலையில் மிகுதியாக இருக்கின்ற மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வாழுகின்ற முஸ்லிம்களினுடைய நிலைமைகளை பற்றி நாங்கள் சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.

கேள்வி:- இந்த நிலையிலே அண்மையில் உங்களுடைய கட்சியின் தலைமையானது யாழ்பாணத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் சேதராம் இல்லாமல் வடகிழக்கு இணைப்பு பற்றி பேசுவதற்கு தயார் என்று கூறியுள்ளதே?

புல்மோட்டை அன்வர்:- சேதாரம் இல்லாமல் வடகிழக்கு இணைப்பினை பற்றி பேசலாம் என்றுதான் எங்களுடைய தலைமை கூறியதே தவிர அதுதான் தீர்வு என ஒரு பொழுதும் எமது தலைமை அறிவிக்கவில்லை. பேசலாம் என்பதனுடைய நோக்கம் அதனுடைய சாதக, பாதக தன்மைகளை பற்றி ஆராயப்பட வேண்டும் என்பதே ஆகும். ஆகவே முஸ்லிம் சமூகத்திற்குறிய பாதகமான முடிவுகளை எமது தலைமை எடுக்காது என்பதில் நாங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கின்றோம். எங்களினுடைய தலைமையினை பொறுத்தமட்டிலே இன்று வடகிழக்கில் வாழுகின்ற முஸ்லிம் தமிழ், சிங்கள மக்களினுடைய உறவுகளை அண்ணியொன்னியமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக செயற்பட்டு வருக்கின்ற அதே நேரத்தில் தமிழ் மக்களையும் சேர்த்து தங்களினுடைய விடயங்கள் பேசப்பட வேண்டும் என்ற தொணிப்பொருளிலே தலைமை உரையாற்றிய விடயத்தினை கிழக்கின் எழுச்சி எனும் பெயரிலே அரசியல் நாடகமாடும் குழுவினர் தங்களினுடைய அரசியல் ஆயுதமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக தூக்கி பிடித்துள்ளார்கள் என்பதனை நான் மீண்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கேள்வி:- அண்மையில் சேகு இஸ்ஸதீனுடைய அறிக்கையில் 1956 திருமலை ஒப்பந்தத்தின் படியும் 1977 தமிழரசு கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு இனங்கவும் இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கான சமஷ்ட்டி அதிகாரம் கொடுக்கப்படுமென்றால் அதனை தாங்கள் ஏற்க தயார் என்ற வகையில் குறிப்பிட்டிருந்தனை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

புல்மோட்டை அன்வர்:- கிழக்கின் எழுச்சி என்று உறுவாக்கட்டுள்ள இந்த கட்டத்திலே முன்னாள் தவிசாளர் சேகு இஸ்ஸடீனும் முக்கிய பங்காற்றிவருகின்றார். வஃபா பாரூக் அதன் தலைவராக இருக்கின்ற அதே நேரத்தில் இஸ்ஸடீனுடைய மகந்தான் அதன் செயலாளராகவும் இருக்கின்றார். அவர் குறிப்பிட்டது போன்று தமிழரசு கட்சி 1956ம் இணைந்த வடகிழக்கிலே முஸ்லிம்களுக்கு தனியான சமஷ்ட்டி அதிகாரம் கொடுக்கலாம் என்று கூறிய நேரத்திலே முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களோ அல்லது காணி சம்பந்தமான பிரச்சனைகளோ இருக்கவில்லை.

ஆனால் இன்று நிலை முற்றிலும் வேறுபட்டு காணப்படுகின்றது. அதற்கு பிற்பாடு 1977ம் தமிழரசு கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலே இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கான தனியான சமஷ்ட்டி அதிகாராம் வழங்கப்படும் என்பதற்கமைய இன்று தருவதாக இருந்தால் வடகிழக்கு இணைப்பிற்கு நாங்கள் ஆதரவு தர தயாராக இருக்கின்றோம் என முன்னாள் தவிசாளர் சேகு இஸ்ஸடீன் பத்திரிகைகளுக்கு முழு பக்க அறிக்கை விட்டுள்ளதனை பார்க்கின்ற பொழுது விழுந்த பக்கத்தில் குறி சுடுவதினை போன்றும் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடுவதனை போலவே சேகு இஸ்ஸடீன் அறிக்கை இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் ஏதும் பின்புல சக்திகளின் பணத்தினை பெற்றுக்கொண்டு வடகிழக்கு இணைப்பதற்கு பிரதானமாக இருப்பவர்களே எழுச்சி அணியினர் என்பதனையே சேகு இஸ்ஸடீன் அறிக்கையானது வெளிச்சம் போட்டு காட்டுவதாக தெரிகின்றது என்பது எனது முக்கிய கருத்தாக இங்கே கூறிக்கொள்ள விரும்புக்கின்றேன்.

கேள்வி:- திருகோணமலையில் உங்களை விடவும் சிரேஸ்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் இருந்தும் அண்மைக்காலமாக முஸ்லிம்களினுடைய அடிப்படை உரிமைகளுக்காக நீங்கள் அதிகம் குரல் கொடுப்பது ஏன்?

புல்மோட்டை அன்வர்:– பொதுவாக இந்த நாட்டிலே இருக்கின்ற சிங்கள, தமிழ் சமூகங்களோடு இணைந்து ஜனநாயக நீரோட்டத்திலே அரசியலினை கொண்டு செல்வதற்கே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும் நங்களும் விரும்புக்கின்றோம். ஆனால் எங்களினுடைய சமூகத்திற்கு எதிராக எவராவது ஜனநாயகத்திற்கு முரண்பட்டு கிளர்ந்தெழுவார்களானால் அவர்களக்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்க தயாராகவே இருக்கின்றோம். நாங்கள் யாருக்காவும் அஞ்சிக்கொண்டு அரசியல் செய்வதும் இல்லை செய்ய போவதுமில்லை. கடந்த காலங்களில் புல்மோட்டை பிரதேசமானது மிகவும் கடுமையான முறையிலே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டும் பயங்கரவாதத்திற்குள்ளே முடக்கப்பட்டும் காணப்பட்டது. அதனோடு சேர்த்து எண்ணிலடங்காத வகையிலே உடமைகள் அழிக்கப்பட்டு, உயிர்கள் அழிக்கப்பட்ட பிரதேசமாக திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை இருந்து வருகின்றது.

ஆகவே நாங்கள் சிறு வயதிலே அனுபவித்த துன்பங்கள் இன்றும் எங்களினுடைய மனதினை விட்டு நீங்கவில்லை. எங்கள் மக்களினுடைய அபிலாசைகள், இருப்புக்கள் என்பனவற்றை பாதுக்காக்க வேண்டிய பொறுப்பு அரசியல் பிரதி நிதி என்ற வகையிலே எனக்கு அதிகம் இருக்கின்றது. அதன் நம்பிக்கையின் அடிப்படையில்தான் எனக்கு இப்பிரதேச மக்கள் வாக்களித்துள்ளனர். அது எந்த சமூகமாக இருந்தாலும் சமூகத்தின் மீது ஏற்படுகின்ற அதிகார துஸ்பிரயோகங்களுக்கு எதிராகவும், அநியாயங்களுக்கு எதிராகவும் என்னால் முடிந்தவரை உயிருள்ள வரைக்கு குரல் கொடுக்க தவரமாட்டேன் என்பதில் நான் முழு நம்பிக்கையுடன் இருந்து எனது அரசியலினை முன்னெடுத்து வருக்கின்றேன்.

கேள்வி:- கிழக்கு மாகாணத்தில் முக்கியமாக பேசப்படும் விடயமாக இருக்கின்ற அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சானது புல்மோட்டையினை சேர்ந்த உங்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது என்பதின் உண்மை நிலை என்ன?

புல்மோட்டை அன்வர்:- தேசியப்பட்டியல் எனும் விடயமானது பல ஊடகங்களிலே பேசப்பட்டு வருகின்ற விடயமாகும். எங்களினுடைய தலைமைக்கு இந்த விடயமானது பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளது. அண்மைகாலமாகவே எமது தலைமை சில பிரதேசங்களுக்கு வாக்குறுதியினை வழங்கியுள்ளது. சில பிரதேசங்களின் அரசியல் வீழ்ச்சியினை மையப்படுத்தி அப்பிரதேசங்களில் எழுச்சியினை ஏற்படுத்தும் வகையிலே அப்பிரதேசங்களுக்கு தேசியப்பட்டியலை வழங்க வேண்டிய நிலைமையும் இருக்கின்றது. அதன் முதற்கட்டமாகவே திருகோணமலைக்கு வழங்கப்பட்டது. அட்டாளைச்சேனைக்கு வழங்கப்பட்ட வேண்டும் என்பது தலைவரினுடைய கருத்தாக இருக்கின்றது. குறிப்பாக தேசியப்பட்டியல் அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படுமிடத்து அதனை யாருக்கும் கொடுத்தாலும் தலைமைத்துவம் எடுக்கின்ற முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்படவே செய்வோம்.

என்னை பொறுத்தமட்டிலே சுகாதாரா அமைச்சு எனக்கு கிடைக்கும் இடத்தில் அதனை ஏற்றுக்கொள்ளும் அவா என்னிடத்தில் இருக்கின்றது. தலைமைத்துவம் அதனை தந்தால் இன்ஷா அல்லாஹ் அதனை ஏற்றுக்கொள்வேன். தவறும் பட்ச்சத்தில் என்னுடைய அரசியல் பயணத்தில் எவ்விதமான குறைவும் எதிர்காலத்தில் ஏற்பட போவதில்லை. அவ்வாறு தேசியப்பட்டியலினை அம்பாறை மாவட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்குவதாக இருந்தாலும் சரி தற்போதைய சுகாதார அமைச்சர் நசீருக்கு வழங்குவதாக இருந்தாலும் சரி இருக்கின்ற கிழக்கு மாகாண சுகாதரா அமைச்சு திருகோணமலைக்கு வருவதன் ஊடாக எங்களினுடைய அபிலாசைகளை நிறைவேற்றி கொள்ளவதில் அது பெரும் பங்கினை வகிக்கும். இன்று அம்பாறை மாவட்டத்தினை எடுத்து கொண்டால் போதியளவு அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் இருக்கின்றார்கள். அதே போன்று மட்டக்களப்பிற்கும் குறைவில்லை. திருகோணமலையை பொறுத்தமட்டிலே தேசிய பட்டியல் ஒன்றும் இரு மாகாண சபை உறுப்பினர்களுமே இருக்கின்றார்கள். எனவே மாகாண சுகாதார அமைச்சினை திருகோணமலைக்கு கொடுக்கப்படுமிடத்தில் மக்களினுடைய தாகம் குறைக்கப்படும். இருந்தும் நாங்கள் தலைமைத்துவம் எடுக்க போகின்ற சரியான முடிவுகளை நாங்கள் வர வேற்று அதனை அமுல்படுத்த தயாராக இருக்கின்றோம்.

கேள்வி:- யுத்தகாலத்தில் பெரிதும் பாதிப்பிற்குள்ளான புல்மோட்டை பிரதேசமானது உங்களினுடைய அரசியல் வருகைக்கு பிற்பாடு கல்வி மற்றும் பொருளாதரம் என்பவற்றில் எவ்வகையான அபிவிருத்திகளை கண்டுள்ளது?

புல்மோட்டை அன்வர்:– எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கென்றே கூற வேண்டும். எந்த விடயமாக இருந்தாலும் அவன் இன்றி அணுவும் அசையாது என்பார்கள். அந்த வகையிலே அவனுடைய நாட்டப்படி எங்களுடைய பிரதேசத்திற்கு அரசியல் அதிகாரம் கிடைத்தற்கு பிற்பாடே எங்களுடைய காணிகள் மற்றும் இருப்புகள் என்பது கேள்வி குறியில் இருந்து தப்பி இன்று மக்கள் நிம்மதியான சுதந்திரமான சுவாசகாற்றினை சுவாசிக்கின்ற நிலைமை உருவாகியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாக பார்க்கின்ற பொழுது வீதிகள், பாடசலைகள், ஏனைய பொதுக்கட்டங்கள், ஏனைய தேவைகள் என்பன வளர்ச்சி அடைந்தே காணப்படுகின்றது.

இருந்தாலும் கல்வி துறையினை பொருத்த மட்டிலே கடந்த காலங்களை விட சாதரணதர பரீட்ச்சையிலே பத்து ஏ சித்திகளையும், உயர்தரத்தில் உள்ள வர்த்தகம், கலை மற்றும் விஞ்ஞானம், கணிதம் போன்றவற்றில் கல்வி கற்கின்ற மாணவர்கள் புல்மோட்டையில் இருந்து வெளி மாவட்டங்கள், மற்றும் வெளி ஊர்களுக்கு செல்லாமல் அதிகமான அக்கரையுடன் புல்மோட்டை பிரதேசத்தில் உள்ள பாடசாலையிலே சிறந்த பெருபேறுகளை அடைய கூடியவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே தற்பொழுது புல்மோட்டை பிரதேசத்தின் பாடசாலை கல்வி மட்டமானது நகர்புற பாடசாலைகளின் கல்வி தகமைகளுக்கு ஒப்பானதாக வளர்ச்சி அடைந்து வருகின்றது.

கேள்வி:- உங்களினுடைய முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கிழக்கு மாகாணத்திலே கட்டங்கள் திறப்பது சம்பந்தமாக எதிர் நோக்கும் பிரச்சனைகளை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

புல்மோட்டை அன்வர்:- ஹாபிஸ் நசீர் அஹமட் உண்மையான முதலமைச்சராக இருக்கின்ற படியினாலேயே அவர் இவ்வாறான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றார் என முதலில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். கடந்த காலங்களில் இருந்த முதலமைச்சர்கள் மஹிந்தராஜ பக்ஸவினுடைய பொம்மைகளாக இருந்தார்கள். அதனால் அவர்களுக்கு இவ்வாறான பிரச்சனைகள் வருவதும் இல்லை. அதற்கு முகம் கொடுக்கும் துணிச்சல் அவர்களுக்கு இருக்கவுமில்லை. ஆனால் தற்போதைய முதலமைச்சர் தனது கடமைகளை சரியான முறையில் செய்து கொண்டு போகின்ற வேலையில் ஏனைய அரசியல்வாதிகளினால் அதனை தாங்கிகொள்ள முடிவதில்லை. முதலமைச்சர் அவருடைய அதிகாரத்தின் கீழ் உள்ள கட்டங்களை திறக்க முற்படுவது என்பது நியாய பூர்வமான விடயமாகும். ஆகவே அவ்வாறன கட்டங்களை முதலமைச்சரை திறக்க விடாமல் மத்திய அரசாங்கத்தினுடைய அமைச்சர்களோ அல்லது பிரதி அமைச்சர்களோ திறப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறான விடயங்களில்தான் முதலமைச்சர் நியாய பூர்வமான முறையிலும் அரசியல் அதிகாரங்களுக்கு உட்பட்ட வகையிலும் கட்டங்களை திறந்து வைக்கின்றார்.

இன்று பார்க்க போனால் மாகாணத்தில் இருக்கின்ற அதிகாரம் என்பது முதலமைச்சர் ஊடாக பெறப்பட்டிருக்கின்றது. கடந்த காலங்களில் சாம்பூரில் கடற்படை அதிகாரிக்கும் முதலமைச்சருக்கும் ஏற்பட்ட விடயமானது தனிபட்ட முதலமைச்சரினுடைய பிரச்சனை கிடையாது. முதலமைச்சர் அன்று கடற்படை அதிகாரியுடன் போராடியது அங்கிருக்கின்ற சக மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அந்த உரிமை பெறப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயாகும். இன்று கிழக்கு மாகாணத்திலே சுயாதீனமான முறையில் ஆட்சி இடம் பெற்று கொண்டிருக்கின்றது. அதற்கு முதலமைச்சரினுடைய தைரியமும் செயற்பாடும் பிரதான காரணமாகும். ஆகவே இதனை தாங்கி கொள்ள முடியாதவர்கள் இவ்வாறான முட்டுக்கட்டைகளை போட்டு அபிவிருத்திகளையும், அவருடைய பதவிக்கு ஏற்ற தன்மைகளையும் முடக்குவதன் ஊடாக தாங்கள் நினைத்த அரசியல் கலாச்சாரத்தினை உறுவாக்கலாம் என்பதற்காவே முதலமைச்சர் மீது கல்லெறிகளும் திட்டமிட்ட அவதூறுகளும் பல கோணங்களில் இருந்து தொடுக்க முற்படுகின்றனர். ஆகவே அடுத்த மாகாண சபை தேர்தலை சந்திக்க இருக்கின்ற நாங்கள் அத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று இன்ஷா அல்லாஹ் மீண்டும் ஹாபிஸ் நசீர் அஹமட் முதலமைச்சராக கதிரையில் உட்கார்வார் என்பதனை இங்கே உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கேள்வி:- கடைசியாக புல்மோட்டை பிரதேசமானது உங்களுடைய தேர்தல் கோட்டையாக இருக்கும் அதே நேரத்தில் புல்மோட்டைக்கு வெளியில் உங்களுடைய அரசியல் செல்வாக்கு எவ்வாறு இருக்கின்றது?. அல்லது பராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஏதும் என்னங்கள் இருக்கின்றதா?

புல்மோட்டை அன்வர்:- தேர்தல் என்று கதைக்கின்ற பொழுது மாகாண சபை தேதலானது இன்னும் சொற்ப காலத்தில் இடம் பெற இருக்கின்றது. அந்த வகையிலே பாரளுமன்ற தேர்தலில் பொட்டியிடும் என்னங்கள் ஏதும் எனக்கில்லை. மாகாண சபை தேர்தலே எனக்கு போதுமானதாக இருக்கின்ற அதே நேரத்தில் பெரியளவிலான ஆசைகளும் எனக்கில்லை. குறிப்பாக மாகாண சபையினூடாக மக்களுக்கு எதை செய்ய முடியுமோ அதனை சரிவர செய்ய வேண்டும் என்பதே எனது முக்கிய குறிக்கோளாக இருக்கின்றது. எனது அரசியல் பயணத்திலே புல்மோட்டையில் இருந்து ஒரு மாகாண சபை உறுப்பினர் வருவதென்பது மிக கடிணமான விடயமாகவே இருந்தது. இன்னும் பத்து அல்லது இருபது வருடங்கள் செல்ல வேண்டும் என்பதனையே அன்று நான் தேர்தல் களத்தில் இறங்கிய பொழுது எனக்கு உணர்த்தியது.

இருந்தாலும் ஒரு மாகாண சபை உறுப்பினர் வருவெதென்றால் மூதூர் பிரதேசம், கின்னியா பிரதேசம் போன்ற அதி கூடிய வாக்கு வங்கிகள் உள்ள பிரதேசங்களில் இருந்தான் வருவார்கள். இருந்தும் எனது பிரதேசமான புல்மோட்டை பிரதேசத்திலிருந்து எனக்கு தொன்னூறு விகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருந்தன. அதே போன்று எனது பிரதேசத்திற்கு அப்பாற்பட்டு கின்னியா, மூதூர், முள்ளிப்பொத்தானை,கந்தளாய், தம்பளகாமம்,தோப்பூர் போன்ற பிரதேசங்களில் இருந்து சுமாராக ஒன்பது ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தேன். ஆகவே அவ்வாறான தேர்தல் வெற்றிக்கு பிற்பாடு இன,மத பேதமின்றி மக்களுக்காக குரல் கொடுத்து வருவதோடு, பல அபிவிருத்தி பணிகளையும் மேற்கொண்டுளேன்.எனவே புல்மோட்டைக்கு வெளியில் எனக்குள்ள ஆதரவானது இன்னும் அதிகரித்தே காணப்படுகின்றது என்பதில் அல்லாஹ் முந்தி அடுத்தாக எனக்கு பாரிய நம்பிக்கை இருக்கின்றது.

Web Design by The Design Lanka