புல்மோட்டை – கொக்குலாய் மீனவர்கள் தொடர்பில் ஹக்கீம் அமைச்சர் ராஜிதவுடன் பேச்சு - Sri Lanka Muslim

புல்மோட்டை – கொக்குலாய் மீனவர்கள் தொடர்பில் ஹக்கீம் அமைச்சர் ராஜிதவுடன் பேச்சு

Contributors

-FM via ஊடகச் செயலாளர்-

புல்மோட்டை, கொக்குலாய் களப்பில் சிறுகடல் மீனவர் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினை தொடர்பில் சுமூகமான தீர்வை காண்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக மீன்பிடி கடற்றொழில் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன, தம்மைச் சந்தித்து கலந்துரையாடிய நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் ஆகியோரிடம் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், வியாழக்கிழமை (02) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பொறுப்பான மீன்பிடி திணைக்கள உதவிப் பணிப்பாளர்  சுதாகரனை சந்தித்து கலந்துரையாடி, இணக்கப்பாட்டின் அடிப்படையில் அப் பிரதேச மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகளையும் பின்னர் அழைத்து ஒற்றுமையாக சுமூகமான முறையில் கடற்றொழிலை மேற்கொள்வதற்கு உரிய அதிகாரியை அமைச்சர் உடனடியாகவே தொடர்பு கொண்டு பணிப்புரை விடுத்தார்.

யுத்தம் முடிவடைந்த சூழ்நிலையில் புல்மோட்டை, கொக்குலாய் சிறுகடல் பரப்பில் அங்கு வசிக்கும் மூவின மக்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு தமது அன்றாட பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்து வந்தனர்.

இவ்வாறிருக்க புல்மோட்டை பிரதேச மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கையாண்டு வருவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பொறுப்பான மீன்பிடி திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், பொலிஸாரின் உதவியுடன் பல தடவை அங்கு சுற்றிவளைப்பில் ஈடுபட்டு அவர்களுக்குச் சொந்தமான வலைகள் மற்றும் படகுகள் என்பவற்றை கைப்பற்றி நீதிமன்றம் வரை கொண்டு சென்றனர். இதனால் அன்றாடம் காய்ச்சிகளான வறிய மீனவர்கள் பாரிய துன்பத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இந்த விடயம் இப் பிரதேசத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வரால் அமைச்சர் ஹக்கீமின் நேரடி கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, புதன்கிழமை (01) நண்பகல் மீன்பிடி கடற்றொழில் அமைச்சரும் ராஜித சேனாரத்னவை இருவரும் அவரது அமைச்சில் சந்தித்து நீண்ட நேரம் இதுபற்றி விரிவாக கலந்துரையாடினர்.

அதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, புல்மோட்டை பெருங்கடல் பரப்பில் தடைசெய்யப்பட்ட டிஸ்கோ வலைகள் உள்ளடங்களாக மின்னொளியைப் பாய்ச்சியும் சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் மீன்பிடி முறைகளை அனுமதிக்க முடியாதென்றும், ஆயினும் குறிப்பிட்ட கொக்கிலாய் களப்பில் பாரம்பரியமாக கையாளப்படும் மீன்பிடி தொழில் முயற்சியில் வறிய மக்களே அதிகமாக ஈடுபடுவதால் அதுபற்றி தமக்கு பெரியளவிலான ஆட்சேபனை  எதுவுமில்லையென்று கூறினார். ஆயினும் புல்மோட்டை பிரதேச மீனவர்கள் எல்லை கடந்து வேறு பிரதேசத்திற்குள் பிரவேசித்து கடற்றொழில் மேற்கொள்வதாலேயே பிரச்சினைகள் தலைதூக்குவதாகவும், அதன் காரணமாகவே முறைப்பாட்டின் பேரில் அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

பிரதேச சபை அரசியல்வாதியொருவர் தமது பட்டாளங்களுடன் கொக்குளாய் சென்று அங்கு வசிக்கும் மக்கள் மத்தியில் அமைதியின்மையை தோற்றுவித்ததன் காரணமாகவே நிலைமை சிக்கலடைந்ததாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சர் ஹக்கீமிடம் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் ஹக்கீம் விடுத்த அழைப்பை ஏற்று புல்மோட்டை பிரதேசத்திற்கு தாம் விரைவில் சென்று நிலைமையை நேரில் அவதானிப்பதோடு பிரதேச மக்களுடன் கலந்துரையாடி இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வொன்றை காண்பதாகவும் கூறினார்.

இது விடயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு. ஆர். சம்பந்தன் அவர்களும் தமக்கு எத்திவைத்ததாகவும் அமைச்சர் ராஜித மேலும்  தெரிவித்தார்.

hakeem

Web Design by Srilanka Muslims Web Team