பூஸாவில் தடுத்து வைக்கப்பட் பாகிஸ்தான் பிரஜைகள் 56 பேர் விடுவிப்பு - Sri Lanka Muslim

பூஸாவில் தடுத்து வைக்கப்பட் பாகிஸ்தான் பிரஜைகள் 56 பேர் விடுவிப்பு

Contributors
author image

Editorial Team

இலங்கையில் தங்கியிருந்து அகதிகளுக்கான ஐ.நா.வின் ஆணையகத்தின் ஊடாக  புகலிடம் கோரிய நிலையில்  கடந்த ஜுன் மாதம் 9ஆம் திகதி முதல் கைது செய்யப்பட்டு பூஸாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 56 பாகிஸ்தானியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

 

குடியவரவு குடியகல்வு அதிகாரிகள், மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், நீர்கொழும்பு  பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசல் பூமியில் வைத்து 56 பாகிஸ்தானியர்களையும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களில் 43 பேர் அஹ்மதி முஸ்லிம்களாவர், 13 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்த கிறிஸ்தவர்களாவர்.

 

இன்று அதிகாலை 1.45க்கு ஆரம்பிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை ஒப்படைக்கும் பணி அதிகாலை 4.30 மணிவரை நீடித்ததாக விடுவிக்கப்பட்ட பாகிஸ்தானியர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

இதேவேளை, இலங்கையில் தங்கியுள்ள பாகிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்களை, நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு , கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நேற்று திங்கட்கிழமை நீக்கப்பட்டது.

 

இலங்கையில் அடைக்கலம் கோரியுள்ள பாகிஸ்தானிய பெண்ணான அனீலா இம்ரான் தாக்கல் செய்திருந்த மனுமீதான வாதப்பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், இந்த மனு மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

 

அகதிகளுக்கான ஐ.நா. வின் ஆணையகத்தின் ஆட்சேபங்களையும் பொருட்படுத்தாது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் புகலிட கோரிக்கையாளர்கள் மீது அரசாங்கம் கடுமையாக நடந்துகொண்டதாகவும் 200 க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியதை தொடர்ந்து இவர், இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

 

இதேவேளை, சுமார் 1300 இற்கும் மேற்பட்ட புகலிடக்  கோரிக்கையாளர்களான பாகிஸ்தானியர்கள் தற்போது இலங்கையில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(tm)

Web Design by Srilanka Muslims Web Team