பெகஸுஸ் மென்பொருளை பயன்படுத்தி அரசாங்கம் சகலரையும் கண்காணிக்கின்றது - ஹரின் பெர்னாண்டோ - Sri Lanka Muslim

பெகஸுஸ் மென்பொருளை பயன்படுத்தி அரசாங்கம் சகலரையும் கண்காணிக்கின்றது – ஹரின் பெர்னாண்டோ

Contributors

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கம் பெகஸுஸ் எனும் மென்பொருளை பயன்படுத்தி சகலரையும் கண்காணித்து வருவதாகவும், அவர்களின் தனிப்பட்ட விடயங்களை கண்காணிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றம் சுமத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், பெகஸுஸ் (Pegasus) எனும் மென்பொருள் ஒன்று அரசாங்கத்தினால் கையாளப்படுகின்றது, இந்த மென்பொருள் மிக ஆபத்தானது. இந்த மென்பொருளை பயன்படுத்தி உங்களின் கமராவில் உள்ள வீடியோவை கையாள முடியும். நீங்கள் எங்கு உள்ளீர்கள் என கண்டறிய முடியும். எனவே அரசாங்கம் எதிர்க்கட்சியை ஆராய்வதை விடவும் ஆளும் கட்சிக்குள் என்ன நடக்கின்றது என்பதையே ஆராய்கின்றது என்ற விடயத்தை நான் பொறுப்புடன் கூறுகின்றேன்.

தொலைத்தொடர்பு ஆணைக்குழு, ஏனைய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒன்றை கூருகின்றேன். இவ்வாறான மோசமான செயல்களில் நீங்கள் சம்பந்தப்பட்டால் என்றாவது ஒருநாள் இந்த அரசாங்கம் கவிழும் அப்போது நீங்கள் பதில் கூறியாக வேண்டும்.

மக்களிடையே தனிப்பட்ட செயற்பாடுகள் இருக்க வேண்டும், அனைவருக்கும் அரசியல் நிலைப்பாடு என ஒன்று இருக்க வேண்டும். ஊடகவியலாளர்களுக்கு சுயமாக கருத்து தெரிவிக்கும் உரிமை இருக்க வேண்டும். இவ்வாறு மக்களை கட்டுப்படுத்த வெட்கமில்லையா என்றே அரசாங்கத்தை கேட்கிறேன்.

களவு, பொய், ஊழல் இல்லையென்றால் எதற்காக இவ்வாறான கீழ் மட்டமான செயல்களில் அரசாங்கம் ஈடுபடுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் இங்குள்ள உறுப்பினர்கள் உரையாற்ற 8,10 நிமிடங்களே வழங்கப்படுகின்றன. ஆனால் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்ற 60 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அவர் அந்த தாக்குதலில் தனக்கு தொடர்பில்லையென்று கூறி தன்னை சுத்தப்படுத்தவே அரச தரப்பால் இந்த 60 நிமிடங்களும் அவருக்கு வழங்கப்பட்டன என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team