பெண்கள் வேலைக்காக வெளிநாடு செல்லும் போது குடும்பப் பின்னணியை சமர்ப்பிக்க வேண்டும் - டிலான் பெரேரா - Sri Lanka Muslim

பெண்கள் வேலைக்காக வெளிநாடு செல்லும் போது குடும்பப் பின்னணியை சமர்ப்பிக்க வேண்டும் – டிலான் பெரேரா

Contributors

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக பெண்களை அனுப்பும் போது அவர்களது குடும்ப பின்னணி சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் எக்காரணம் கொண்டும் வாபஸ் பெறப்பட மாட்டாது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் செல்வதற்கு முன்னர் 5 வயதுக்கு குறைந்த குழந்தைகள் உள்ளனவா? என்பது உள்ளிட்ட சகல குடும்ப விபரங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். சமர்ப்பிக்கப்படுகின்ற விபரங்கள் தொடர்பில் பணியகம் திருப்தியடைந்தால் மட்டுமே அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியும்.

இச்சட்டத்திற்கு எதிராக சிலர் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார்கள். ஆனால் அந்தச் சட்டம் எக்காரணம் கொண்டும் வாபஸ் பெறப்படமாட்டாது. உச்ச நீதிமன்றமும் இதற்கு சாதகமான தீர்ப்பையே வழங்கியிருக்கிறது.

இதன் காரணமாக 50 வீதத்திலிருந்து 37 வீதமாக பெண்கள் வெளிநாடு செல்வது குறைவடைந்துள்ளது.

தாய்மார் வெளிநாடு செல்வதாலேயே சிறுவர், சிறுமியர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவதாகவும் பதிவாகியுள்ளது என்றும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க கேட்ட வாய்மொழி மூல விடைக்கான கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி முதல் நவம்பர் 3 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் சவூதி அரசு பொதுமன்னிப்பு காலம் வழங்கியது.

இதனை பயன்படுத்தி பெருந்தொகையானோர் நாடு திரும்பினர். அத்துடன் சுமார் 5,500 பேர் வரையில் தமது விசா முறைகளை சரிசெய்துகொண்டு சட்டப்படி அந்த நாட்டில் தொடர்ந்தும் தங்கியுள்ளனர்.

2012 இல் ரியாத்திலிருந்து 960 பேரை திருப்பி அழைப்பதற்காக 29.1 மில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளோம்.

2013 இல் ஜுலை வரையில் ரியாத்திலிருந்து 540 பேரை அழைப்பதற்காக 12 மில்லியன் ரூபாவையும் ஜித்தாவிலிருந்து 65 பேரை அழைப்பதற்காக 2 மில்லியன் ரூபாவையும் செலவு செய்துள்ளோம்.

இதேபோன்று சவூதியில் ‘ஒலாயா’ தடுப்பு முகாமில் சுமார் 140 பேர் வரையில் இருப்பதாகவே எமக்கு பதிவாகியுள்ளன. அவர்கள் திருப்பி அழைக்கப்படவுள்ளனர்.

சவூதியில் புதிதாக இலங்கை தூதுவராக பதவியேற்றிருக்கும் வீ. கிருஷ்ணமூர்த்தி மிகவும் பொறுப்புடன் இலங்கையர் தொடர்பான தரவுகளை எமக்கு அடிக்கடி தருகிறார். நாம் அவருடன் தொடர்புகொண்டு தேவையான தரவுகளை தினமும் பெற்றுக்கொண்டுள்ளோம்.

எமது தூதரகத்துடன் இணைந்து அங்கு தங்கியுள்ள இலங்கையரை திருப்பி அழைப்பதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம்.

அந்நாட்டிலிருந்து கிடைக்கப்பட்ட தரவுகளின் படி ஜித்தா பாலத்துக்கு கீழ் இலங்கையர் எவரும் இல்லை என்றும் அமைச்சர் டிலான் தெரிவித்தார்.(thina)

Web Design by Srilanka Muslims Web Team