பேச்சுவார்த்தை 6 வாரத்தில் முடிக்கப்பட வேண்டும்' -இரா. சம்பந்தன் - Sri Lanka Muslim

பேச்சுவார்த்தை 6 வாரத்தில் முடிக்கப்பட வேண்டும்’ -இரா. சம்பந்தன்

Contributors
author image

BBC

இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகள் ஆறு வாரத்துக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 
ஞாயிறன்று முடிவடைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இறுதி நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இந்த நிபந்தனையை விதித்துள்ளார்.
அப்படியான பேச்சுவார்த்தையின் போது ஒரு சர்வதேச பிரசன்னமும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுபற்றி அவரிடம் விபரம் கேட்டபோது, ”பல அரசாங்கங்களுடனும் 60 வருடங்களாகப் பேசியிருக்கின்றோம். இனிமேல் பேசுவதற்குப் பெரிதாக ஒன்றுமில்லை. பேசப்பட்டவையெல்லாம் எழுத்தில் இருக்கின்றன. ஆகவே நீண்ட காலம் பேச்சுக்களை நடத்தவேண்டிய அவசியமில்லை. சுருக்கமாகப் பேசி பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். பேச்சுக்கள் நடத்துகின்றோம் என்று உலகத்திற்குக் காட்டுவதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் எமக்கு அவசியமில்லை. ஆக்கபூர்வமாகப் பேச வேண்டும். எமது நிலைப்பாட்டின்படி, ஆறு வாரத்திற்குள் பேச்சுக்களை நடத்தி தீர்வு காண வேண்டும்” என சம்பந்தன் கூறினார்.

 

பத்து வருடங்களாகப் பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி, அனைத்துக் கட்சிகளையும் கூட்டிப் பேசி நிபுணர்களையும் அழைத்துப் பேசியிருக்கின்றார், அப்போது அவர் முற்போக்கான கருத்துக்களை வெளியிட்டிருந்தார் என்றும் கூறிய சம்பந்தர் அதன் அடிப்படையில் ஒரு தீர்வைக் காண்பதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகளின் போது என்ன நடந்திருக்கின்றது என்பதை தமிழ் மக்களும் உலகமும் அறிந்து கொள்வதற்காக, பேச்சுவார்த்தைகளின் போது ஒரு சர்வதேச பிரசன்னம் இருக்க வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார்.

 

”அரசாங்கம் சில சர்வதேச தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்தத் தொடர்புகளின் மூலம், அவ்விதமான கருத்துக்கள் அரசாங்கத்துடன் பரிமாறப்பட்டிருக்கின்றன. எனவே, பேச்சுவார்த்தைகளில் ஒரு சர்வதேச பிரசன்னம் இருக்க வேண்டியது அவசியமாகும்” என்றார் அவர்.

 

அறுபது வருடங்களாப் பேசியும் தீர்வு காண முடியாத பிரச்சினைக்கு ஆறு வாரத்தினுள் பேசி தீர்வு காண முடியும் என்று நம்பலாமா என கேட்டதற்கு, அங்கு பேசுவதற்கு ஒன்றுமில்லை. எல்லாம் அங்கே தெளிவாக இருக்கின்றன. விரும்பினால் இரண்டு பகுதியும் ஆறு வாரத்திற்குள் பேசி முடிக்கலாம் என்றார் சம்பந்தன்.

 

அதேவேளை குறிப்பிட்ட ஒரு காலக் கெடுவுக்குள் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியதற்கு பதிலளிக்கும் வகையில் ஊடகங்களிடம் பேசிய இலங்கை அரசாங்க அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ”அரசாங்கத்தை எவரும் பயமுறுத்தி அடிபணிய வைக்க முடியாது, இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமாகவே பேச்சுக்கள் நடத்தப்படும், தனியே தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்கள் நடத்தப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார்.

 

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ள கருத்து குறித்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கேட்டபோது, அவருடைய கூற்று அர்த்தமற்றது என்று நிராகரித்தார்

Web Design by Srilanka Muslims Web Team