பேருவளை நகரசபையின் வெற்றியினூடாக முஸ்லிம்களும் மகிந்தவின் வெற்றியில் பங்காளிகளாகியுள்ளது நிரூபனமாகியுள்ளது - மசூர் மௌலானா » Sri Lanka Muslim

பேருவளை நகரசபையின் வெற்றியினூடாக முஸ்லிம்களும் மகிந்தவின் வெற்றியில் பங்காளிகளாகியுள்ளது நிரூபனமாகியுள்ளது – மசூர் மௌலானா

mashoor

Contributors
author image

M.Y.அமீர்

நடந்து முடிந்துள்ள உள்ளுராட்சிசபைத் தேர்தலின் கீழ் வெளிவந்துள்ள  பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய ரீதியில் இலங்கைத் திருநாட்டை சுபிட்சபாதைக்கு இட்டுச்சென்ற யுக புருஷன், மகிந்த ராஜபக்ச அவர்கள் அமோக வெற்றியடைந்துள்ள நிலையில், அந்த வெற்றியில் முஸ்லிம்களும் பங்காளிகளாக மாறியுள்ளார்கள் என்பதை பறைசாற்றுவதுபோல் பேருவளை நகரசபையினை மகிந்த சார்பான சுயச்சைக்குழு கைப்பற்றியுள்ளது நிரூபனமாக்கியுள்ளதாக மகிந்த ராஜபக்ச அவர்களின் ஆலோசகரும் கிழக்குமாகாண இணைப்பாளரும் இன நல்லுறவுக்கான வேலைத்திட்டத்தின் தலைவரும் சமூக சிந்தனையாளருமான அஷ்செய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்துள்ள உள்ளுராட்சிசபைத் தேர்தலினூடாக மக்கள், அரசுக்கும் ஏனைய மக்களுக்கும் சிறந்த செய்தி ஒன்றை கூறியுள்ளதாகவும் அந்த செய்தியை, தங்களது பொன்னான வாக்கினூடாக வெளிப்படுத்திய, மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நாட்டை நேசிக்கின்ற அனைவரும், வரலாற்று நாயகன் மகிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையின் கீழ் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ள மௌலானா, நாட்டு மக்கள் என்ற அடிப்படையில், நாட்டுக்கு கெளரவமளித்தவர்களை மதிக்க வேண்டியது அவசியம் என்றும் அந்த வகையில் அல்லோல கல்லோலப்பட்டிருந்த நாட்டை சுபிட்சப்பாதைக்கு இட்டுச்சென்ற மகிந்த ராஜபக்ச அவர்களின் கரங்களை இன்னும் இன்னும் பலப்படுத்துவதனூடாகவே, நம் தாய்த்திரு நாட்டை இன்னும் இன்னும் வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்கள் ஒன்று பட்டுள்ள இன்றைய நிலையில் சிறு பான்மை மக்களும் அதனோடு இணைந்து வருவது மகிழ்ச்சியான விடயம் என்றும் இனவாதம், மதவாதம், மற்றும் பிரதேசவாதம் போன்றவை களையப்பட்டு ஒரே நாட்டுமக்கள் என்ற உணர்வுடன் ஒன்றிணையுமாறும் அறைகூவல் விடுத்துள்ளார்.

இனவாதத்தை மையாமாகக் கொண்டும், குழப்பம் விளைவித்தவர்களை கைது செய்வோம் என்றும் ஆட்சிக்கு வந்தவர்களின் நிலை தற்போது ஆட்டம்கண்டுள்ளதாகவும் அவர்களையும் அவர்களது செயற்பாடுகளையும் மக்கள் நன்கு உணர்ந்ததன் வெளிப்பாடே தேர்தலில் மக்களை நியாயத்தின் பக்கம் வாக்களிக்க தூண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ள மௌலானா, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் ஆட்சிக்காலத்தில் புரையோடிப்போயிருந்த கொடூர யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதன் விளைவாக, குண்டுகள் வெடிக்காத விரைவாக அபிவிருத்தி கண்டுவரும் நாடாக இலங்கை திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

சுயநலன்களுக்காக கட்சிகளை மாற்றிக்கொள்ளும் அரசியல் தலைவர்களின் வலையில் வீழ்ந்துவிடாது, இனியும் இனவாதத்தை நோக்கி நகர்வதைத் தவிர்த்து பெரும்பான்மை சமூகத்துக்கு சவால் விடும் தூரநோக்கற்ற சிந்தனைகளில் இருந்து விடுபட்டு ஒரே நாடு ஒரே மக்கள் என்ற கொள்கையின்கீழ் பணம் மற்றும் சலுகைகளுக்கு அடிபணிந்து விடாது ஓரணியில் ஒன்று பட்டு நாட்டை கட்டியெழுப்ப முன்வருமாறு கேட்டுள்ள மௌலானா, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையில் இன நல்லுறவை கட்டியெழுப்ப முன்வருமாறும் கேட்டுள்ளார்.

வடக்கில் இருந்து உடுத்த உடையுடன் வந்த முஸ்லிம் மக்களுக்கு ஆதரவளித்த மகிந்த அவர்களை சில சுயநல முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தங்களது சுயநல அரசியலுக்காக புறம்தள்ளி வெற்றியீட்டிய போதிலும் அதனூடாக முஸ்லிம் சமூகம் பெரும்பான்மை சமூகத்தின் சந்தேக பார்வைக்குள் சிக்கியதேதவிர பெரிதாக ஒன்றையும் அடையவில்லை என்றும்

கடந்த கால கசப்பான சில அனுபவங்கள் எங்களுக்கு அநேக பாடங்களை கற்றுத்தந்தன என்றும் அவைகளை மறந்து,  வைராக்கியம் எங்களது ஒற்றுமையை குலைத்துவிடும் என்பதை மனதில் கொண்டும் அது எங்களை தனிமைப்படுத்தியும் விடும் என்பதயும் நினைவில் கொண்டும்  கட்சிகள் மதமும் அல்ல. என்ற எடுகோளின் கீழ் தூரநோக்கே அவசியமான ஒன்று என்ற எண்ணத்துடன் கணிப்பீடுகள்,தப்பான அபிப்பிராயங்கள் அனைத்தும் களைந்து ஒன்றுபடுவோம் என்றும் கேட்டுள்ள மௌலானா, அமோக வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிப் பூக்களை காணிக்கையாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை முஸ்லிம்களும் நியாயத்தின் பக்கம் இருப்பதை தேசத்துக்கு பறைசாற்றும் வகையில் பேருவளை நகரசபையினை கைப்பற்றுவதற்கு முன்னின்று உழைத்த அல் ஹாஜ் மர்ஜான் கலீல், நில்பர் கபூர் மற்றும் மஷாகிம் ஹாஜியார்  போன்றோருக்கு உளப்பூர்வமான நன்றிகளை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள மௌலானா, ஏனைய பிரதேசங்களில் இருந்தும் மகிந்த ராஜபக்ச அவர்களின் வெற்றிக்காக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் விசேடமாக முஸ்லிம் மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சார்பில் நன்றிகளை தெரிவிப்பதாகவும் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

 

Web Design by The Design Lanka