பொதுபலசேனா அமைப்பை தடை செய்ய சிங்கள பௌத்த மக்கள் இடமளிக்கமாட்டார்கள். - Sri Lanka Muslim

பொதுபலசேனா அமைப்பை தடை செய்ய சிங்கள பௌத்த மக்கள் இடமளிக்கமாட்டார்கள்.

Contributors

இராஜதுரை ஹஷான்)

பொதுபலசேனா அமைப்பை தடை செய்ய சிங்கள பௌத்த மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு குறிப்பாக சிங்கள பௌத்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் சிறந்த முறையில் செயற்படுத்த வேண்டும். அதனை விடுத்து தேவையற்ற விடயங்களில் அவதானம் செலுத்தினால் மக்களால் புறக்கணிக்க நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்தார்.

களனி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை குறுகிய காலத்தில் தண்டிப்பதாக குறிப்பிட்டே தற்போதைய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது. முஸ்லிம் விவாக சட்டம் நீக்கம், மத்ரஸா பாடசாலை நீக்கம் ஆகிய விடயங்கள் குறித்து அரசாங்கம் நாட்டு மக்களுக்கு குறிப்பாக பௌத்த சிங்கள மக்களுக்கு வாக்குறுதி வழங்கியது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே பலமான தலைமைத்தவத்தின் கீழ் அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என தீர்மானித்து நாட்டு மக்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபித்தார்கள். பௌத்த சிங்கள மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளதா என்பது தற்போது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தை தேர்தல் பிரசாரமாக்கி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கும், குண்டுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என குறிப்பிடுவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் நம்பிக்கை துரோகமாகவே கருதப்படும்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் தோற்றம் பெற பொதுபலசேனா அமைப்பு காரணம் ஆகையால் அவ்வமைப்பை தடை செய்ய வேண்டும் என ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானதாகும்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால் பௌத்த அமைப்புக்கள் பொதுத் தன்மையில் எதிர்ப்பை வெளிப்படுத்த நேரிட்டிருக்காது.

பொதுபலசேனா அமைப்பின் காரணமாகவே மறைமுகமாக செயற்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பல விடயங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன. ஆகவே பௌத்த அமைப்புக்கள் ஒருபோதும் பிற இனங்கள் மீது அடிப்படைவாதத்தையும், வன்முறைகளையும் கட்டவிழ்த்து விடவில்லை.

பொதுபலசேனா அமைப்பினை தடை செய்ய பௌத்த சிங்கள மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் முறையாக செயற்படுத்த வேண்டும்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கை வேறும் வாய்ச் சொல்லாக மாத்திரம் காணப்படுகிறது. தேவையற்ற விடயங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கினால் நாட்டு மக்கள் அரசாங்கத்தை முழுமையாக புறக்கணிப்பார்கள் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team