பொதுபல சேனாவினால் கொலை அச்சுறுத்தல்... விஜித தேரருக்கு பொலிஸ் பாதுகாப்பு! - Sri Lanka Muslim

பொதுபல சேனாவினால் கொலை அச்சுறுத்தல்… விஜித தேரருக்கு பொலிஸ் பாதுகாப்பு!

Contributors

பொதுபல சேனா அமைப்பினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுவதால் மகியங்கன பிரதேச சபையின் ஆளுங்கட்சி உறுப்பினரும் மகாவலி மகா விகாரை தேரருமான வட்டரெக விஜித தேரருக்கு, இன்று நடைபெறவுள்ள பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் ஊவா பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவுக்கு ஆணையிட்டிருக்கின்றார்.

சென்ற ஆகஸ்ற் மாதம் 08 ஆம் திகதி பதுளை முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு தேரர் செய்த உபந்நியாசம் பொதுபல சேனாவினால் மரண அச்சுறுத்தல் விடுவதற்குக் காரணமாக அமைந்ததனால், அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக ஒழிந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ள தேரர், பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளார். அவ்வேண்டுகோளுக்கு பொலிஸ் மா அதிபர் இந்நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.

சென்ற செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கொழும்பிலிருந்து பயணித்தபோது, மகியங்கனை நகரில் கறுப்புக் கொடிகள் தூக்கப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டு ஒலிபெருக்கிகள் மூலம் “விஜித தேரரை விரட்டுவோம்“ என பொதுபல சேனா அமைப்பினர் எதிர்ப்பார்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர் எனவும் தேரர் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முடியாது போனால், தனது பதவி மூன்று முறை தொடர்ந்து வருகை தராத காரணத்தினால் பறிபோவதற்கு இடமுள்ளது எனவும் தேரர் அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

(கலைமகன் பைரூஸ்)

Web Design by Srilanka Muslims Web Team