பொதுபல சேனா மீண்டும் பிரச்சினையை கிளப்ப முயற்சிக்கிறது - பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் - Sri Lanka Muslim

பொதுபல சேனா மீண்டும் பிரச்சினையை கிளப்ப முயற்சிக்கிறது – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம்

Contributors

(Tn) பொதுநலவாய மாநாடுகளின் உச்சிமாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளதால் சமாதானம் அமைதியை கட்டியெழுப்பவும் இனங்களுக்கிடையில் நல்லுறவை வலுப்படுத்தவும் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் பொது பலசேனா அமைப்பு ஹலால் பிரச்சினையை பூதாகரமாக்கி அதன் மூலம் வேறு நோக்கங்களை அடையும் வகையில் செயற்பட்டமை கவலைக்குரியது என தெரிவித்த அமைச்சர் முஸ்லிம் மக்களின் கலாசார மத நியதிகளை புரிந்து கொண்டு தாங்கள் செயற்பட்ட விதம் மோசமானது எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று பெளத்த தள நிலையங்கள் திருத்த சட்ட மூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, சில சக்திகள் எமது நாட்டில் சமாதானத்தையும், இன ஐக்கியத்தையும் சீர்குலைக்கும் வகையில் செயற்படுகின்றன. குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டு இனங்களுக்கிடையில் விரிசல் ஏற்படும் வகையில் நடந்து கொள்கின்றனர்.

முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் அரசாங்கங்களுடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டார்கள். ஸ்ரீ தலதா மாளிகையின் செயற்பாடுகளிலும் கடந்த காலங்களிலும் உறுதியாக செயற்பட்டார்கள் என்பதனை மறக்கலாகாது. பொதுபலசேனா அமைப்பு ஹலால் பிரச்சினையை கொண்டு முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட முயற்சிக்கிறது இது விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர்கள் தலையிட்டு பிரச்சினையை சுமுகமாக்கினர்.

இந்த அமைப்பு முஸ்லிம்களை இழிவுபடுத்துவதுடன் மீண்டும் பிரச்சினைகளை கிளப்புவதற்கு முயற்சிக்கின்றனர் என அமைச்சர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team