பொதுப் பிரச்சினையும் பொதுவான நடைமுறையும் - கவிதை » Sri Lanka Muslim

பொதுப் பிரச்சினையும் பொதுவான நடைமுறையும் – கவிதை

pen

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


விஷமுள்ள பாம்பு ஒன்று
வீதியிலே ஊர்ந்து வர
விஷயம் கேள்விப்பட்டு
விரைந்தார்கள் இடத்துக்கு

அரசியல் வாதி ஒருவர்
அவ்விடம் ஓடி வந்தார்
வருகின்ற வருடம் முதல்
தெருவிலே பாம்பை தடுக்க
தருகிறேன் லட்சம் என்றார்.
தண்ட பாட்டில் சென்றார்.

இயக்க வாதி ஒருவர்
இறங்கினார் பாதையிலே
பாம்புக்குப் பக்கத்திலே
படுக்கின்ற பல்லியினை
ஆராய்ந்து பார்த்தார்
ஆகா இது விஷமென்றார்
ஊர் மக்கள் பல்லி தொடர்பாய்
உசாராக வேண்டுமென்றார்.

அப்புறம் மீடியாவால்
அடுக்கடுக்காய் வந்தார்கள்
குப்புறப் படுத்துக்கொண்டு
குளோசப்பில் படமெடுத்தார்
இப்ப இப்பாம்பு
எழும்புமா கொத்துமாண்ணு
செப்பினார் நேரலையில்
சென்றார் அத்தோடு.

மூச்சிரைக்க ஓடி வந்தார்
முக நூல் போராளி
ஆச்சரியமாய் அவர் மட்டும்
அப்பாம்பை நோக்கிச் சென்றார்
பாம்பு படம் எடுக்க
பக்கத்தில் குந்திக் கொண்டு
வீம்பாய் படமெடுத்தார்
விண்ணுலகம் அப்லோட் ஆனார்.

ஊர்த் தலைவர்கள்
உடனடியாய் கூட்டம் போட்டார்
யாரின் தலைமையிலே
இதை அடித்தல் நலம் என்று
ஆராய்ந்து பார்த்ததில்
அபிப்பிராய பேதம் வர
சமுசாவை தின்று விட்டு
சத்தமின்றி கலைந்து சென்றார்.

அடிக்காது விட்டால்
அனைவருக்கும் கேடென்று
துடித்து எழுந்தார்
துணிந்த சில பொது மக்கள்
முடிக்க முடிவெடுத்தார்.
முழுவதும் முடிந்த பின்
நடித்தவர் எல்லோரும்
நாம்தான் முடித்தோமென்பார்

Web Design by The Design Lanka