பொது நிறுவனங்கள் தொடர்பான நிறைவேற்றுக் குழுவின் 9ஆவது கூட்டத் தொடரின் முதலாவது அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு - Sri Lanka Muslim

பொது நிறுவனங்கள் தொடர்பான நிறைவேற்றுக் குழுவின் 9ஆவது கூட்டத் தொடரின் முதலாவது அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

Contributors

பொது நிறுவனங்கள் தொடர்பான நிறைவேற்றுக் குழுவின் 9 ஆவது கூட்டத் தொடரின் முதலாவது அறிக்கையை அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித்த ஹேரத் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இதில் இந்த நிறைவேற்றுக் குழு விசாரித்த கணக்காய்வாளரின் ஆறு விசேட அறிக்கைகளும் உள்ளடங்குகின்றன.

2009ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்திற்காக வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி நிறுவனம் வழங்கிய நிலக்கரி தொடர்பில் பாராளுமன்றத்தின் எரிசக்தி தொடர்பான உப கண்காணிப்புக் குழுவின் கோரிக்கைக்கு அமைய கணக்காய்வாளர் முன்வைக்கும் விசேட அறிக்கையும் இதில் உள்ளடங்கின்றது.

அதேபோல் மத்திய அதிவேகப் பாதை செயற்றிட்டத்தின் பரீட்சார்த்த ஆய்வு மற்றும் திட்டமிடல் தொடர்பான விசேட கணக்காய்வு உள்ளிட்ட பல அறிக்கைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, வரி மற்றும் தண்டப் பண சேகரிப்பின் முன்னேற்றம் குறித்து விசாரிப்பதற்காக வருமான வரித் திணைக்களம் இன்று மீண்டும் அரச கணக்கீடுகள் தொடர்பான நிறைவேற்றுக் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக வரி செலுத்தாத நிறுவனங்களின் பட்டியல் எதிர்காலத்தில் ஊடகங்கள் மூலம் பகிரங்கப்படுத்தப்படும் என்றும் அவ்வாறு வரி செலுத்தாத நிறுவனங்களின் பட்டியலை இரண்டு மாதங்களுக்குள் நிறைவேற்றுக் குழுவிற்கு வழங்குமாறும் அதன் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, வரி சேகரிப்புத் தொடர்பில் திணைக்களம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து இன்று விசாரிக்கப்படவுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team