பொத்துவில் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு..! » Sri Lanka Muslim

பொத்துவில் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு..!

Contributors
author image

Editorial Team

பொத்துவில் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவானது, தவிசாளர் எம்.எஸ் அப்துல் வாசித் அவர்களினால் சபையில் இன்று (18) புதன் கிழமை சமர்பிக்கப்பட்டது.

வரவு செலவு திட்டதின் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றதன் பின்னர் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. வாக்களிப்பின் போது 10 உறுப்பினர்கள் ஆதரித்தும், 11 உறுப்பினர்கள் எதிர்த்தும் வாக்களித்தனர். எதிர்த்து அளிக்கப்பட மேலதிக ஒரு வாக்கினால் வரவு செலவு திட்டம் தோல்வி அடைந்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களான தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸீத், கியாஸ், சபூரா உம்மா, ஜுனைதா வஹாப்தீன், TNA கட்சியின் உறுப்பினர்களான பிரதித் தவிசாளர் பார்த்தீபன், சுபோஹரன், துரைரத்தினம், SLFP கட்சியின் உறுப்பினர்களான அப்துல் மஜீத், கைரூன் நிஷா, தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஜமாகிம் ஆகியோரே ஆதரவாக வாக்களித்தவர்களாவர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களான, முன்னாள் தவிசாளர் மர்சூக், ரஹீம், ACMC கட்சியின் உறுப்பினர்களான N.H முனாஸ், சதக்கத்துள்ளா, தாஜுதீன், ஆயிஷா, JVP கட்சியின் உறுப்பினர் ஆதம் சலீம், SLFP கட்சியின் உறுப்பினர்களான அன்வர் சதாத், ஜுனைதா உம்மா, சுயேட்சை குழு உறுப்பினர் பக்குருடீன் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர்.

பொத்துவில் பிரதேச சபையின் ஆட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டில் உள்ள போதிலும் அக்கட்சியின் இரு உறுப்பினர்கள் பாதீட்டை எதிர்த்து வாக்களித்துள்ளனர். அதே நேரம் SLFP கட்சியின் ஒரு குழுவினர் ஆதரவு வழங்கிய போதிலும் பிறிதொரு குழுவினர் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

“தாம் தவிசளரின் மீது கொண்ட நம்பிகையின் காரணத்தினால், அவரால் கொண்டு வரப்பட்ட முதலாவது வரவு செலவு திட்டத்தை எதிர்ப்புகள் இன்றி ஆதரித்தோம். ஆனால் நாம் அவர் மீது வைத்த நம்பிக்கையை பாதுகாக்க தவறி விட்டார். சபையின் நடவடிக்கைகளின் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. இதன் காரணமகவே ஒரு கட்சியாக இருந்தும் கூட எதிர்த்து வாக்களித்தோம். வரவு செலவு திட்டதை, இரண்டாம் வாசிப்பிலும் தோற்கடிக்க உள்ளோம். இதன் மூலம் நல்லதொரு தவிசாளரை தேர்வு செய்து, ஊரின் அபிவிருத்தியை சிறந்த முறையில் மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்” என்கின்றனர் பாதீட்டை எதிர்த்த தரப்பினர். தவிசாளர் கொண்டுவரும் வரவு செலவு திட்டம் அதன் முதலாம், இரண்டாம் வாசிப்புகளில் தோல்வியுறுமாயின், தவிசாளர் பதவி விலக வேண்டியேற்படும் நிலை தோன்றும்.

Web Design by Srilanka Muslims Web Team