பொரல்ல கனத்த (கவிதை) » Sri Lanka Muslim

பொரல்ல கனத்த (கவிதை)

ccc

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


கனத்த இதயங்களுடன்
காலங்க கழித்த பலர்
இந்தக்
‘கனத்த’யில்
கண் மூடிக் கிடக்கிறார்கள்

வாழ்க்கை
சில்லறைத் தனமானது
என்பது
இந்தக்
கல்லறைகளைக்
காணும் போதெல்லாம்
கவலையுடன் தோன்றும் மனதில்.

பெயர்
பிறந்த திகதி
பிரிந்த திகதி
பெரிதாகப் பொறிக்கப்பட்டுள்ளன.
ஒரு நூற்றாண்டு வாழ்ந்த
உயிர்
உதிர்ந்து போன பின்
உலகில் மிஞ்சியது
இவ்வளவே.
அதைப் பார்க்கக் கூட
ஆரும் இல்லை.

இப்போது
இறப்பவர்க்கு
இதுவுமில்லை.
மின்சாரம் சுட்டெரிக்க
மிஞ்சுவது
கொஞ்சம் சாம்பலே.

எதிர்த் திசையில்
இருக்கும்
AMW கம்பனி
இறக்குமதி செய்த கார்களை
இறக்கும் வரை மதிப்புடன்
இவர்களும் ஓடினார்கள்.
இறப்பு
இருப்பைக் காலியாக்க
கார்கள்
கைமாறிப் போக
யாருமில்லா இடத்தில்
AMW க்கு எதிர்த் திசையில்
இருக்கிறார்கள் கல்லறைகளில்

மறுபுறமுள்ள
மலர்ச்சாலைகள்
மற்றுமொரு
மரணத்திற்காய்
காத்திருக்க
இந்த
மயானம்
மெளனமாய் உறும
இடையிலுள்ள பாதையில்
எத்தனையோ பேர் ஓடுகிறார்கள்.
என்றோ ஒரு நாள்
இங்கோ
இது போன்ற
இன்னுமோர் இடத்துக்கோ
எடுத்து வரப் படுவோம்
என்பதை மறந்து….

பணத்தைத் தேடி
பறந்து திரிந்த பலரும்
சினத்தால் அடுத்தவரை
சிதைத்தவர்கள் பலரும்
நினைத்த காரியத்தை
நிறைவேற்றிய சிலரும்
மனிதனாய் வாழ்ந்து
மரணித்த பலரும்
கனத்த இதயங்களுடன்
காலங்க கழித்த பலரும்
இந்தக்
கனத்தயில்
கண் மூடிக் கிடக்கிறார்கள்…!

Web Design by The Design Lanka