பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை - பிரதமர்..! - Sri Lanka Muslim

பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை – பிரதமர்..!

Contributors
author image

Editorial Team

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை விரைவில் தீர்க்க, அரசாங்கமொன்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளையும் உள்ளடக்கிய கூட்டுத்திட்டமொன்றை உருவாக்க வேண்டும். இதற்கு அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புக்களையும் நாம் எதிர்ப்பார்க்கிறோம்.

இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் அரிசியை இறக்குமதி செய்து, குறைந்த விலையின் கீழ் மக்களுக்கு வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அத்தோடு, சீனி, கோதுமை, பருப்பு, பெரிய வெங்காயம், கடலை, காய்ந்த மிளகு, கடுகு போன்ற 112 பொருட்களை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவுத்திட்டமொன்றையும் நாம் ஆரம்பித்துள்ளோம்.

தோட்டத்தொழிலாளர் குடும்பங்களுக்கு 15 கிலோ கோதுமை மாவை 80 ரூபா சலுகைத் தொகையில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

புதிய வரவு- செலவுத்திட்டத்தின் ஊடாக மேலும் பல சலுகைகளை வழங்கவும் நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்.

எரிபொருள் வரிசை தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். அடுத்தவாரமளவில் உணவுப்பாதுகாப்புக்குழுவானது நாடாளுமன்றுக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளது.

இந்த அறிக்கை கிடைத்தவுடன் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் ஏனைய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளோம்.

ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியத்திடம் நாம் நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்த்துள்ளோம்.

இவ்வாறு தீர்வினை எதிர்ப்பார்த்தே நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் எந்தப் பக்கத்தில் இருந்தாலும் நாட்டுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப டொலர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

தற்போது டொலர் கையிருப்பானது பூச்சியமாகவே காணப்படுகிறது. இதனைக்கட்டியெழுப்புவது சுலபமான விடயமல்ல.

எரிபொருள் கூட்டுத்தாபனமானது 800 மில்லியன் டொலர் கடன் சுமையில் உள்ளது. இதனை செலுத்தாவிட்டால் சர்வதேசத்திடமிருந்து எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாது போய்விடும்.

இவற்றுக்கானத் தீர்வை அரசியல் கட்சிகள் முன்வைத்தால் நாடாளுமன்றில் விவாதிக்க நாம் தயாராகவே இருக்கிறோம். விமர்சனங்களைவிட தீர்வையே நாம் எதிர்ப்பார்க்கிறோம்.- எனத் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team