பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி - அமெரிக்காவில் பரபரப்பு - Sri Lanka Muslim

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி – அமெரிக்காவில் பரபரப்பு

Contributors

அமெரிக்காவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஒகியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் நேற்று முன்தினம் மாலை கத்திக்குத்து சம்பவம் நடப்பதாக பொலிஸாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த மாகியா பிரையன்ட் என்கிற 16 வயது கருப்பின சிறுமி கொல்லப்பட்டாள்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கறுப்பின சிறுமியை பொலிஸார் எதற்காக சுட்டு கொன்றனர் என்கிற உண்மை வெளிவரவில்லை.

விரிவான விசாரணைக்கு பிறகு உண்மை என்ன என்பது தெரியவரும் என கொலம்பஸ் நகர மேயர் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு மே மாதம் மினசோட்டா மாகாணம் மினியாப்பொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்கின்ற ஆப்பிரிக்க அமெரிக்கரின் கழுத்தில் பொலிஸ் அதிகாரி டெரெக் சாவின் கால் முட்டியை வைத்து அழுத்தி கொன்ற வழக்கில் டெரெக் சாவினை குற்றவாளி என கூறி நீதிமன்றம் தீர்ப்பளித்த அரை மணி நேரத்திற்குள்ளாக கருப்பின சிறுமி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கருப்பின சிறுமியை பொலிஸார் சுட்டுக் கொன்றதை கண்டித்து கொலம்பஸ் நகரில் பெரும் போராட்டம் வெடித்தது. அந்த நகரில் உள்ள பொலிஸ் தலைமையகம் மற்றும் பொலிஸ் நிலையங்கள் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team