பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர் கைக்குண்டுடன் சிக்கினார்...! - Sri Lanka Muslim

பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர் கைக்குண்டுடன் சிக்கினார்…!

Contributors

(செ.தேன்மொழி)

கிருலப்பனை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கத்தியால் குத்தி காயப்படுத்தி தப்பிச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிருலப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கிருலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகஸ்வத்த பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை போதைப் பொருள் விவகாரம் தொடர்பில், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவரை கைது செய்வதற்காக, கிருலப்பனை பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் இருவர் சென்றிருந்தனர்.

இதன்போது சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள், அவரை கைது செய்து அழைத்து வரும் நோக்கில், அவரது கைகளில் விலங்கிட முயற்சித்துள்ளனர். பின்னர், சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவரை கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காயமடைந்த, பொலிஸ் உத்தியோகத்தர் கலுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மார்பகம் மற்றும் கைப்பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்நிலையில் தப்பிச் சென்ற சந்தேக நபர், நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றில் மறைந்திருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிருலப்பனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team