பொலிஸ் விசாரணையில் கொல்லப்பட்ட கருப்பினத்தவரின் குடும்பத்துக்கு 27 மில்லியன் டொலர் நிவாரணம் - Sri Lanka Muslim

பொலிஸ் விசாரணையில் கொல்லப்பட்ட கருப்பினத்தவரின் குடும்பத்துக்கு 27 மில்லியன் டொலர் நிவாரணம்

Contributors

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டை பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் கால் முட்டியால் அழுத்தியதில் மூச்சுவிட முடியாமல் திணறி அவர் உயிரிழந்தார். இதனால்

இன வெறிக்கு எதிராக நடந்த போராட்டம் அமெரிக்காவையே உலுக்கியது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபொலிஸ் நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட்.

லொரி சாரதியான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25ம் திகதி மினியாபோலீஸ் நகரில் உள்ள ஒரு கடைக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.‌

அப்போது அவர் வழங்கிய பணத்தில் 20 டொலர் கள்ளநோட்டு இருந்ததாக கடையின் ஊழியர் பொலிசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் தலைமையில் 4 பொலிஸார் அங்கு விரைந்தனர்.‌

பின்னர் அவர்கள் முறைப்பாடு தொடர்பாக விசாரிக்க அழைத்தபோது பிளாய்ட் பொலிஸ் வாகனத்தில் ஏற மறுத்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் ஜார்ஜ் பிளாய்ட்டை தரையில் கிடத்தி அவர் கழுத்தை கால் முட்டியால் அழுத்தினார். என்னால் மூச்சுவிட முடியவில்லை எழுந்திருங்கள் என ஜார்ஜ் பிளாய்ட் கெஞ்சிய போதும் விடவில்லை. சிறிது நேரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்தார்.

ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தில் பொலிஸ் அதிகாரி கால் முட்டியை வைத்து அழுத்தியது, இதனால் அவர் மூச்சுவிட முடியாமல் திணறி உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.

இதனைத் தொடர்ந்து ஜார்ஜ் பிளாய்டின் சாவுக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. இன வெறிக்கு எதிராகவும் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும் நடந்த இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவையே உலுக்கியது.

இதற்கிடையே ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் உட்பட 4 பொலிஸார் மற்றும் மினியாபோலீஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து டெரிக் சாவின் உட்பட 4 பொலிஸாரும் பணி நீக்கம் செய்யப்பட்டு, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். டெரிக் சாவின் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இதில் டெரிக் சாவின் மீதான விசாரணை மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வாரம் தொடங்கியது.‌

அப்போது குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுத்த டெரிக் சாவின் தனது பொலிஸ் பயிற்சியை முறையாக பின்பற்றியதாக கூறினார். அதனைத் தொடர்ந்து நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.‌

இந்த வழக்கில் டெரிக் சாவின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 65 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் மினியாபொலிஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்துக்கு 27 மில்லியன் டொலர் நிவாரணமாக வழங்க மினியாபொலிஸ் நகர அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இது குறித்து ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்தின் சட்டத்தரணி பெஞ்சமீன் கிரம்ப் கூறுகையில், “அமெரிக்க வரலாற்றில் ஒரு தவறான மரணத்துக்கான வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒதுக்கப்படும் மிகப்பெரிய நிவாரணம் இது” என்றார்.

ஜார்ஜ் பிளாய்டின் சகோதரி பிரிட்ஜெட் பிளாய்ட் கூறுகையில், “எனது சகோதரர் ஜார்ஜ் பிளாய்டின் நீதிக்கான பயணத்தின் இந்தப் பகுதி சுமுகமாக தீர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி” என தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team