போதைப்பொருள் கடத்தலைத்தடுக்க இராணுவத்தினரின் காவலரண் : சோதனை தீவிரம்..! - Sri Lanka Muslim

போதைப்பொருள் கடத்தலைத்தடுக்க இராணுவத்தினரின் காவலரண் : சோதனை தீவிரம்..!

Contributors

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர்ப் பகுதியிலுள்ள அல்லிமூலைக்கருகில் புதிய நிரந்திர சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (17) மதியம் திடீரென அப்பகுதிக்கு வந்த சுமார் 15க்கும் அதிகமான இராணுவத்தினர் நிந்தவூர்ப் பகுதியிலுள்ள அல்லிமூலை சந்திக்கருகே நிரந்திர சோதனைச் சாவடியொன்றை அமைத்து சோதனை நடவடிக்கையைத் தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இப்பகுதியில் இடம்பெறுகின்ற போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்காக இம்முகாம் அமைக்கப்பட்டுள்ளதுடன், இடையிடையே அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணி ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இது தவிர, இரவு வேளையில் ஐவர் கொண்ட இராணுவத்தினரின் குழுவொன்று மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றது.

மேலும், இவர்கள் பகல், இரவு வேளைகளில் வீதிகளில் செல்லும் சந்தேகத்திற்கிடமானவர்கள், வாகனங்களை இடைமறித்து சோதனை செய்து, குறித்த பிரதேசத்தத்தில் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா அனர்த்தத்தின் பின்னர் மாவட்டத்தில் இடம்பெற்று வரும் கஞ்சா கடத்தல்கள், அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வு போன்ற சம்பவங்களை முறியடிப்பதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தவிர, கொரோனா சுகாதார நடைமுறைகளை கண்கானித்தல், முகக்கவசம் அணியாதோரை வழிப்படுத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு விடயங்களில் கவனஞ் செலுத்துமுகமாகவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை, கல்முனை, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஆகிய பகுதிகளிலிருந்து இச்சந்தியினூடாகப் பயணம் செய்பவர்கள் பரிசோதனை செய்யப்பட்டும் வாகனங்களின் இலக்கத்தகடு பதியப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team