போர்ட் சிட்டி வாக்கெடுப்பு - முஸ்லிம் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன..? - Sri Lanka Muslim

போர்ட் சிட்டி வாக்கெடுப்பு – முஸ்லிம் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன..?

Contributors

– முகம்மத் இக்பால் –

இந்தியாவை சுற்றி சீனா தனது முத்துமாலை திட்டத்திற்காக தன்னைவிட்டு விலகமுடியாதவாறு இலங்கையை தனது வலையில் வீழ்த்தியுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள சர்வதேச விமான நிலையம், நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம், பெருந்தெருக்கள், ஹோட்டல்கள் என பல்வேறு உட்கட்டமைப்பு கட்டுமானங்கள் சீனாவின் முதலீட்டில் நடந்துள்ளன.   

சிங்கராஜ வனத்தில் மூன்று கங்கைகளை மறித்து நீர்த்தேக்கங்களை அமைத்தல், போன்றவற்றுடன் வடக்கில் நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளை சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்தல் என்ற போர்வையில் சீனாவின் Sinosar-Etechwin நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.

மேலும் மதுகம பகுதியில் பாரிய டயர் தொழிற்சாலையும் மற்றும் வாகனங்களை பொருத்தும் தொழிற்சாலையும் சீனாவினால் இலங்கையில் நிறுவப்பட உள்ளது.  

இவ்வாறு சத்தமின்றி இலங்கையை சீனா தனது பூரண கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளது. இந்த நிலையில் கொழும்பு துறைமுக நகர் விவகாரம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டால், முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்ன ? சமூகத்துக்காக எதனை சாதிக்கலாம் அல்லது எந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று சந்தர்ப்பத்தை பயன்படுத்தாமல், புதிதாக நாட்டுப்பற்று பற்றி பேசுவது புரியாத புதிராக உள்ளது.

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்றும், ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற போர்வையில் முஸ்லிம் சமூகம் இரண்டாம்தர பிரஜைகளாக கையாளப்படுவதுடன், நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றுகின்ற முஸ்லிம் வர்த்தகர்கள் ஓரம்கட்டப்படுவதுடன் முஸ்லிம்களின் பொருளாதாரம் சரிவடைந்துள்ளது.

ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் நாங்கள் ஆட்சியாளர்கள் மீது முற்றாக நம்பிக்கை இழந்ததுடன், பதினொரு இஸ்லாமிய இயக்கங்களை தடை செய்து ஏராளமான பள்ளிவாசல்கள் மூடப்பட்டு அவர்களது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும் புர்கா தடை அச்சுறுத்தல் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணி சுவீகரிப்பு என ஏராளமான பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டுள்ளோம்.

இன்று துறைமுக நகர் விவகாரமானது முஸ்லிம்களை பாதிக்கின்றதான தோற்றப்பாடு தற்போது காண்பிக்கப்படுகின்றது. ஆனால் நேரடியாக முஸ்லிம் மக்களை பாதிக்கின்ற சட்டமூலங்களான 18, 20 மற்றும் மாகாணசபைகள் திருத்த சட்டம், உள்ளூராட்சிமன்ற திருத்த சட்டம், திவிநெகும ஆகியவற்றிற்கு முஸ்லிம் தலைமகளும், உறுப்பினர்களும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு வழங்கியபோது வாய்மூடி மௌனியாக இருந்துவிட்டு இதனை மட்டும் நுணுக்கமாக ஆராய்வதுதான் ஆச்சர்யமாக உள்ளது.

தலைவர் அஸ்ரப் அவர்கள் சமூகத்துக்காக பேரம்பேசும் அரசியலை செய்து காண்பித்தார். ஆனால் அவரது மறைவுக்கு பின்பு பேரம்பேசும் சந்தர்ப்பங்கள் இருந்தும் அமைச்சர், பிரதி அமைச்சர், திணைக்கள தலைவர்கள், இணைப்பாளர்கள் மற்றும் ஏனைய சொகுசுகளும், பதவிகளும் கோடிக்கணக்கில் பணமும் பேரம் பேசப்பட்டதே வரலாறு.

துறைமுக நகர் வாக்கெடுப்பின்போது நாங்கள் அதனை எதிர்பதா அல்லது ஆதரிப்பதா அல்லது நடுநிலை வகிப்பதா என்பது பற்றி ஆழமாக ஆராய்ந்து தீர்மானித்திருக்க வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் எதையாவது தீர்க்க முடியுமா என்று பொறுப்புள்ள முஸ்லிம் தலைமைகளால் முயற்சித்திருக்க வேண்டும்.

அவ்வாறான முயற்சிகள் எதுவும் வெற்றியளிக்காவிட்டால் அதன்பின்பு எதிர்ப்பதா அல்லது நடுநிலை வகிப்பதா என்று தீர்மானிக்கலாம்.

நாங்கள் சமூகம் பற்றி சிந்திக்காமல், தங்களின் தனிப்பட்ட அரசியல் சுய விருப்பு வெறுப்புக்கு ஏற்ப மக்களை திசைதிருப்பி செயல்பட்டால், கடந்த இருபது வருடங்கள் எமது சமூகத்தை ரணிலிடம் குத்தகைக்கு விட்டதுபோன்று, இனிவரும் காலங்கள் சஜித் பிரேமதாசாவிடம் குத்தகைக்கு விடப்பட்டு எமது தனித்துவத்தை இழந்துவிடும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை.

Web Design by Srilanka Muslims Web Team