போலி சமூக வலைத்தளப் பக்கங்களை தோற்கடிக்க அநுரகுமார அழைப்பு..! - Sri Lanka Muslim

போலி சமூக வலைத்தளப் பக்கங்களை தோற்கடிக்க அநுரகுமார அழைப்பு..!

Contributors

ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தவோ பயமுறுத்தவோ, ஜனாதிபதிக்கு உரிமை இல்லை என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புரிந்துகொள்ள வேண்டுமெனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர திஸாநாயக்க எம்.பி, ஊடகச் சுதந்திரம் என்பது, ஜனாதிபதி ஒருவரின் அனுமதிப்பத்திரம் அல்ல; அது ஜனாதிபதியால் வழங்கப்பட வேண்டிய சிறப்புச் சலுகையாகும் என்றார். 

  ‘ஊடகங்களுக்குப் பாடம் கற்பிக்கவும் தெரியும்; கற்பிக்கும் முறையும் தெரியும்’ என்கிறார். எந்த எண்ணத்தில் இருந்துகொண்டு, இதை ஜனாதிபதி அறிவிக்கிறார்’ எனவும், அநுர திஸாநாயக்க எம்.பி கேள்வி எழுப்பினார்.

கட்சியின் தலைமையகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், ‘வாரம் முழுவதும் அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, ஜனாதிபதி கிராமத்துடன் என்ற தனது வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக, மக்களின் பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதற்குப் பதிலாக, அவர் முகம் கொடுத்துள்ள பிரச்சினை குறித்தே இந்நிகழ்வுகளில் பேசுகிறார்’ எனக் குற்றஞ்சாட்டினார்.

நுவரெலியா, வலப்பனையில், ஜனாதிபதியின் கிராமத்துடன் வேலைத்திட்டம் நேற்று முன்தினம் (19) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, ஊடக நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களையும் இலக்கு வைத்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், ஜே.வி.பி குறித்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன என்றார். 

‘இது என்னிடம் ஆகாது. 14 மாதங்களில் ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை’ என ஜனாதிபதி தெரிவிப்பதன் மூலம், அவருக்கு அச்சுறுத்தல் விடுக்க உரிமையுள்ளதாகக் காட்டிக்கொள்கிறார்’ என்றார்.

ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களுக்கு பயம் நிறைந்த பாடங்கள் கடந்த காலங்களில் கற்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த யுகம் மாறிவிட்டது. ஜே.வி.பியின் சுற்றாடல் ஆர்வலர்கள் என்ற பெயரில் பதிவிடப்படும் விடயம், அது உண்மையான பேஸ்புக் கணக்கா அல்லது போலியானதா என்பதைக்கூட கண்டுபிடிக்க முடியாதளவுக்கு, ஜனாதிபதியின் நிலை மாறிவிட்டது. இந்தப் போலி பேஸ்புக் கணக்குக் குறித்து அறிந்துகொள்ள, ஜனாதிபதி மற்றும் அவரது ஊடகப் பிரிவுக்கும் முடியாமல் போய்விட்டது’ என்றார்.

‘ஜனாதிபதியின் இந்தப் பரிதாப நிலையை, 69 இலட்சம் மக்கள் எதிர்பார்க்கவில்லை. போலிக் கணக்கு ஒன்றை மேற்கோள் காட்டி உரையாற்றும் நிலைக்கு ஜனாதிபதி வந்துவிட்டார். எனவே, ஜே.வி.பியின்  பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த போலி பேஸ்புக் கணக்குக் குறித்து ஆராய, குற்ற விசாரணைத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கணக்கு யாரால் உருவாக்கப்பட்டது. யார் நிதியுதவி செய்தது என்பதை ஆராய்ந்து, பொலிஸார் ஜனாதிபதிக்கு அறிவிக்க வேண்டும்’ என்றார்.

‘அதை மூடி மறைத்தால், அது அவரது முகாமிலுள்ளவர்களே உருவாகியிருக்கலாம் என்ற எமது சந்தேகத்தை உறுதிப்படுத்திவிடும். எனவே, விரைவாக விசாரணை செய்து, இது குறித்து சமூகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். அத்துடன், தமது அரசியல் நோக்கங்களை அவர் நினைத்த இடங்களில் பேசப் பயன்படுத்தும் இந்தப் போலி பேஸ்புக் கொள்கையை தோற்கடிக்க வேண்டும்’ என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team