பௌத்த அரசை அமைக்கும் நேரம் நெருங்கிவிட்டது - பொதுபலசேனா - Sri Lanka Muslim

பௌத்த அரசை அமைக்கும் நேரம் நெருங்கிவிட்டது – பொதுபலசேனா

Contributors
author image

Editorial Team

பௌத்த அரசை அமைப்பதற்காக நேரம் நெருங்கியுள்ளது. பௌத்த கொள்கைக்கமைய இலங்கையில் சிங்கள பௌத்த மக்களின் ஒத்துழைப்பில் அரசாங்கம் பௌத்த அரசொன்றை அமைக்காவிடின் அப்பொறுப்பை பொதுபலசேனா நிறைவேற்றுமென பொதுபலசேனா அமைப்பின் இணைப்பாளர் டிலந்த விதானகே தெரிவித்தார்.

 

கிருலப்பனையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துவெளியிட்ட டிலந்த விதானகே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

 

பொதுபலசேனா அமைப்பின் இரண்டாண்டு பூர்த்தியை முன்னிட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் பொது மாநாடொன்று நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் சிங்கள பௌத்த அரசொன்றை கட்டியெழுப்புவதற்கான கொள்கைத் திட்டமொன்று வெளியிடப்படவுள்ளது. இலங்கையிலுள்ள பல பௌத்த அமைப்புகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளன. அத்துடன்  சிங்கள மக்களை ஒன்றிணைத்து அவர்களது கௌரவத்தை கட்டியெழுப்பி அதிகாரத்தினை சிங்கள பௌத்த மக்களுக்கு பகிர்ந்தளிப்பது குறித்த செயற்றிட்டத்தினையே எமது கொள்கையாக நாம் கொண்டு செயற்படவுள்ளோம்.

 

நடைபெற்ற ஊவா தேர்தலில் பௌத்த மக்கள் விழித்துக் கொண்டிருப்பது தெளிவாக தெரிகின்றது. பௌத்த மதத்துக்கும் சிங்கள இனத்துக்கும் செயற்படும் வேட்பாளர்களையே மக்கள் தெரிவு செய்துள்ளனர். பௌத்த மதத்திற்கு எதிராக செயற்பட்டவர்களையும் பிக்குகளுக்கு புறங்கூறியவர்களையும் மக்கள் இம்முறை தேர்தலில் வெளியேற்றியுள்ளனர்.

 

மக்களின் இந்தத் தெளிவு சிங்கள பௌத்த அரசை கட்டியெழுப்புமென நாம் நம்புகின்றோம் எனத் தெரிவித்தார்.

 

 இது தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட ஹத்தே ஞானசார பின்வருமாறு தெரிவித்தார்.

 

இலங்கையில் பௌத்த மத அடிப்படையிலான கல்வி, சுகாதாரத் துறைகள் கட்டியெழுப்பப்பட வேண்டும். பௌத்த அரசை நிர்மாணிப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டது. அரசாங்கம் பௌத்த மக்களின் ஒத்துழைப்புடன் இதனை முன்னெடுக்காவிடின் நாம் இதனை முன்னெடுப்போம் எனத் தெரிவித்தார்.(TL)

Web Design by Srilanka Muslims Web Team