பௌத்த வன்முறையை ஒடுக்க வேண்டும் - அரசுக்கு ரவூஃப் ஹக்கீம் வேண்டுகோள் » Sri Lanka Muslim

பௌத்த வன்முறையை ஒடுக்க வேண்டும் – அரசுக்கு ரவூஃப் ஹக்கீம் வேண்டுகோள்

HAK

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்  அமைச்சருமான ரவூஃப் ஹக்கீம் சென்னை வருகை தந்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துல்ரஹ்மான் (முன்னாள் எம்.பி.) இல்லத்தில் பிறை மேடைக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

(நன்றி Pirai Medai Tamil Fortnightly பத்திரிகை )


“இலங்கையில் மீண்டும் பௌத்த தீவிரவாதம் தலைதூக்கி சிறுபான்மை முஸ்லிம்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றனவே, அங்கு என்னதான் நடக்கிறது-?

பௌத்த இன வன்முறையாளர்களை ஸ்ரீசேனா அரசு கட்டுப்படுத்துகிறதா அல்லது அமைதி காக்கிறதா?” என செய்தி ஆசிரியர் காயல் மகபூப் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியதாவது:-

ஸ்ரீலங்காவில் ஒரு சில பௌத்த தீவிரவாத அமைப்புகள் தங்களுடைய அசம்பாவிதங்களை ஆரம்பித்திருக்கிறார்கள். தங்களுடைய அமைப்புக்களின் சார்பில் ஒருசிலர் வெளிப்படையாக இஸ்லாத்தையும், நபி பெருமானாரையும், ஏன் அல்லாஹ்வைக்கூட மிக அவதூறாக பகிரங்கமாக பேசி வருவது முஸ்லிம்களை புண்படுத்தியுள்ளது.

இந்த பின்னணியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஏறத்தாழ 20 நிறுவனங்களுக்கு தீயூட்டுகிற சம்பவங்கள் மர்மமாக நடந்துள்ளது. இவற்றின் பின்னணியில் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் பேசி தூண்டிவிடுவோரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.

இவற்றுக்கெல்லாம் தலைமை வகிக்கின்ற பௌத்த பிக்கு நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக அவரை போலீஸார் கைது செய்வதற்கு இன்னும் தாமதமாகிறது என்பது குறித்து மக்கள் மத்தியில் மோசமாக விமர்சிக்கப் பட்டு வருகிறது. சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய போலீஸார் காவி உடை தரித்தவர்களை கைது செய்ய காட்டுகிற அசமந்த போக்கு முஸ்லிம்களுக்கு மத்தியில் மாத்திரமல்ல, நாட்டில் சமாதானத்தை விரும்புகிற, மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஆதரிக்கின்ற நடுநிலையாளர்கள் எல்லோரையும் அவர்கள் எந்தமதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் மிக மோசமாக அரசை நோக்கிய விமர்சனங்கள் தொடுப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.

ஒருசில தினங்களுக்கு முன்பு ஜனாதிபதி தலைமையில் கட்சித் தலைவர்களோடும் போலீஸ்மா அதிபதி உட்பட பௌத்த மத தலைவர்கள், பிற மதங்களின் தலைவர்கள் உள்ளிட்ட ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. முஸ்லிம்களின் சார்பில் கோரிக்கைகளை ஜனாதிபதிக்கு தெளிவாக சொல்லியிருக்கிறோம்.

ஜனாதிபதியும், பிரதமரும், சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சரும் திரும்பத்திரும்ப உத்தரவாதம் கொடுத்த வருகிறார்கள். நாங்கள் சட்டம் ஒழுங்கை காப்போம் என்று உறுதி கூறுகிறார்கள்.

ஆனால், இதுவரையும் வெறுப்பூட்டக்கூடிய பேச்சுக்களை வெளிப்படையாக பேசிவருகிற எவரையும் கைது செய்யாமல் இருப்பதை மிக மோசமாக மக்கள் விமர்சித்து வருகின்றனர். இது கவலைக்குரியது மட்டுமல்ல, கண்டனத்திற்குரிய விஷயமுமாகும்.

குறிப்பாகச் சொல்லப்போனால் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மத்தியில் கடந்த அரசாங்க காலத்தில் நடந்த அசம்பாவிதங்கள் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக அவிழ்த்துவிடப்பட்ட அட்டகாச நடவடிக்கைகள் அவற்றுக்கு அன்றைய அரசு அனுசரனை இருந்ததுதான் இவ்வளவு படுமோசமான நிலைக்கு கொண்டு சென்றது என்ற அடிப்படையில், ஆட்சி மாற்றம் கொண்டு வந்தே தீர வேண்டும் என சிறுபான்மை சமூகங்கள் வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டதால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.

மாற்றத்தால் வந்திருக்கிற புதிய ஆட்சி இந்த நடவடிக்கைகள் மீண்டும் தொடர அனுமதிப்பது என்பது எவ்வளவுதான் ஆட்சியாளர்கள் அதற்கு அனுசரனை வழங்கவில்லை என்று சொன்னால்கூட இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு குற்றம் புரிபவர்கள் கைதாக வேண்டும் என்பது அவசியமாகிறது. ஆனால், அது நடைமுறையில் நடக்காமலிருப்பது என்பதை தொடர்ந்து சிறுபான்மை சமூகங்கள் இந்த அரசுக்கு எதிராக செய்து வரும் விமர்சனங்கள் நாளுக்குநாள் கூடி வருகிறது.

ஆட்சியின் பங்காளர்களாக இருக்கிற எங்களுக்கு மேலும் இதன் அழுத்தம் பாதிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே நாங்களும் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என வலியுறுத்தி வருகிறோம்.

அண்மையில் வெளிநாட்டு தூதுவர்கள் பலரும் பள்ளிவாயிலில் கூடி அரசாங்கத்திற்கு ஏற்றுமதி சலுகை வழங்குவதற்காக யூனியன் எடுத்த தீர்மானம் இவ்வாறு அராஜகங்கள் தொடர்ந்தால் மீளாய்வு செய்யப்படலாம் என்ற அச்சுறுத்தலையும் விடுக்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

நாட்டிலே ஒரு சுபிட்சமான பொருளாதார சூழல் வருவதற்கு யுத்தம் முடிவாகியிருக்கும் பின்னணியில் மீண்டும் இவ்வாறான தேவையற்ற கலவர சூழல் ஏற்படுவதை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்மையில் ஜனாதிபதி நடத்திய கூட்டத்தில் நான் இன்னொரு விஷயத்தையும் வலியுறுத்தி சொல்லியிருக்கிறேன். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களால் பௌத்த புராதன அடையாள சின்னங்கள் இருப்பதாகவும் அவற்றை முஸ்லிம்கள் வேண்டுமென்றே அழிப்பதாகவும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள் இந்த தீவிரவாத மதவாத அமைப்புக்களுக்கு பிரச்சாரம் செய்ய ஏதுவாக அமைகிறது.

எனவே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகிற வடகிழக்கு பிரதேசங்களில் தொல்பொருள் ஆய்வு என்ற தோரணையில், வனபரிபாலன இலாகா வனங்கள் காப்பு என்ற தோரணையில் பலவித அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகிற சூழலில் வனபரிபாலன தினைக்களம், தொல்பொருள் பாதுகாப்பு தினை க்களம், வனவிலங்கு தினைக்களம் ஆகியவற்றை பாராளுமன்ற தெரிவுகுழுமுன் அழைத்து இவற்றின் உண்மைத்தன்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைத்தேன்.

முஸ்லிம்களின் மதரஸாக்கள் கல்வி நிறுவனங்களில் தீவிரவாதம் போதிக்கப்படுகிறது என்று உலகளாவிய அளவில் விஷமத்தனமான பிரச்சாரம் பரப்பப்படுகிறது. அப்பிரச்சாரம் இலங்கையிலும் செய்யப்படுகிறது.

முஸ்லிம்களின் நடை உடை தனித்த கலாச்சாரம் பர்தா முறை போன்றவைகளில் கலாச்சார ரீதியான ஒவ்வாமை சர்ச்சைக்குரிய விஷயங்களாக குறிப்பாக சிங்கள மொழி ஊடகங்களில் அடிக்கடி அலசப்படுகிற விஷயமாவது சங்கடங்களை ஏற்படுத்துகிறது.

முஸ்லிம் தனியார் சட்டம் சம்பந்தமான ஒரு பிரச்சனையையும் இப்போது ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த விஷயங்கள் இந்தியாவில் இருக்கிற முஸ்லிம்களுக்கு மத்தியிலும் பெரும் பிரச்சனையாக உள்ளது.

எல்லாவற்றிற்கும் பின்னாலே ஒரேவிதமான சில சக்திகளுடைய ஒருங்கிணைப்பு இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

எனவே இந்திய முஸ்லிம்கள் இலங்கை முஸ்லிம்கள் தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் இருக்கிற முஸ்லிம் தலைவர்களுக்கு மத்தியில் பரஸ்பரம் கருத்து பரிமாற்றங்கள் தேவை.

முஸ்லிம்கள் வாழுகிற ஒவ்வொரு நாட்டிலும் பெரும்பான்மை சமூகங்களோடு சரியான புரிதல்களை ஏற்படுத்துவதற்கும் பிழையான விஷம கருத்துக்களை பரப்புவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் சாத்தியப்படும் வகையில் முன்னெடுப்பதற்கு சில அலசல்களை செய்ய வேண்டியது அவசியம்.
இவ்வாறு ரவூஃப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

Web Design by The Design Lanka