மகனின் பரீட்சை தோல்வியை விருந்துடன் கொண்டாடிய தந்தை » Sri Lanka Muslim

மகனின் பரீட்சை தோல்வியை விருந்துடன் கொண்டாடிய தந்தை

201805161000042466_Son-fails-Class-10-Exam-Father-celebrates-with-a-grand-party_SECVPF

Contributors
author image

Editorial Team

மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் டிலி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்திரகுமார் வியாஸ். கட்டிட காண்டிராக்டர். இவரது மகன் அன்சு.

இவர், 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். இதன் முடிவு நேற்று வெளியானது. அதில், அன்சு தோல்வி அடைந்தார்.

இதையறிந்த அன்சு மனவேதனை அடைந்தார். தனது தந்தை என்ன சொல்வாரோ? என்ற கவலையுடன் தந்தையை சந்திக்க சென்றார்.

அப்போது தந்தை சுரேந்திரகுமார் எந்த உணர்வையும் காட்டிக்கொள்ளவில்லை. மகனை கட்டித்தழுவி அவருக்கு இனிப்பு ஊட்டினார். தந்தையின் செயல்பாடு அன்சுவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சுரேந்திரகுமார் இதோடு விடவில்லை. மகனின் பரீட்சை தோல்வியை கொண்டாட முடிவு செய்தார். இதற்காக அன்சுவுடன் படித்த மாணவர்கள், பக்கத்து வீட்டினர், உறவினர்கள் என பலரையும் தனது வீட்டுக்கு அழைத்தார். அங்கு இசை நிகழ்ச்சியுடன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி தடபுடல் விருந்தும் அளித்தார்.

சுரேந்திர குமாரின் இந்த செயல்பாட்டை பார்த்து அனைவரும் வியந்தனர்.

பரீட்சைக்காக எனது மகன் கடுமையாக உழைத்தான். சிறப்பாக எழுதினான். ஆனாலும், தோல்வி அடைந்து இருக்கிறான். அவனது தோல்வியை நான் பெரிய வி‌ஷயமாக எடுத்து கொள்ளவில்லை.

அதே நேரத்தில் அவனை இன்னும் உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன்.

பரீட்சையில் தோல்வி அடையும் அனைத்து மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் நான் ஒரு வி‌ஷயத்தை சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

பள்ளியில் நடைபெறும் அரசு பரீட்சை என்பது மாணவரின் கடைசி பரீட்சை அல்ல. வாழ்க்கையில் தொடர்ந்து எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்து கொண்டே இருக்கும். அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர் அன்சு கூறும் போது, எனது தந்தையின் விருந்து கொண்டாட்டம் என்னை அடுத்த ஆண்டு தேர்வுக்கு மிகவும் ஊக்கப்படுத்தி இருக்கிறது என்றார்

Web Design by The Design Lanka