மகா ஊடக மாநாட்டில் முகா ஹூனைஸூம் பங்கேற்பு ! ஏன் ? எதற்கு ? உண்மைத்தன்மை என்ன? » Sri Lanka Muslim

மகா ஊடக மாநாட்டில் முகா ஹூனைஸூம் பங்கேற்பு ! ஏன் ? எதற்கு ? உண்மைத்தன்மை என்ன?

Contributors
author image

A.H.M.Boomudeen

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைது முயற்சி தொடர்பில், தெளிவூட்டும் விதமாக கொழும்பில் இன்று (18) ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது.

கட்சியின் உயர்பீட உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஊடக சந்திப்பில், செயலாளர் எஸ்.சுபைர்தீன், தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பிரதித்தலைவர் என்.எம்.ஷஹீத், பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜெ.எம்.பாயிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – ஏற்பாடு செய்த மாநாட்டில் – ரவூப் ஹக்கீமை தலைவராக ஏற்று செயற்படும் – முகாவின் வன்னி மாவட்ட அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமான முன்னாள் எம்பி ஹுனைஸ் பாறூக்கும் கலந்துகொண்டார்.

ஏன் ? எதற்கு ? – ஹூனைஸ் பாறூக் கலந்துகொண்டார் என்பதுதான் அனைவரினதும் கேள்வியாக உள்ளது.

இவர் கலந்துகொண்டது – மக்கள் காங்கிரஸில் இணைந்து கொள்வதற்கு அல்ல. மாறாக – ரிஷாத் பதியுதீன் மீது தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அபத்தமானது என்ற உண்மையை உலகுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்குடன் பல எதிர்ப்புக்களையும் விமர்சனங்களையும் கடந்து இதில் பங்கு கொண்டார்.

நீதித்துறையானது ஒரு வித்தியாசமான கைதினை ஊடகங்கள் ஊடாக விடுத்து முன்னாள் அமைச்சா் றிசாத் பதியுதீன் மீது பிழையான தகவல்கள் திணிக்கப்பட்டு அவரை மக்கள் மத்தியில் ஒரு பாரிய குற்றமிழைத்தவா் போன்று காட்ட முயற்சிக்கின்றது. இதுதான் இன்றைய பேசு பொருள்.

றிசாத் பதியுதீன் – வா்த்தக கைத்தொழில் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் புத்தளத்தில் இடம் பெயா்ந்தவா்களுக்கான ஒரு ஸ்தாபணம் அவரது அமைச்சின் கீழ் இருந்தது. அம் மக்களை வன்னிக்குச் சென்று வாக்களிப்பதற்காக 11 ஆயிரம் மக்களை வன்னிக்குச் கொண்டு செல்ல – இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களை வாடகைக்கு அமர்த்துவதற்காக ,அன்றைய பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தாா்.

அதனை பிரதமா் ஏற்று அனுமதி வழங்கப்பட்டு நிதியமைச்சா் மங்கள சமரவீரவின் அனுமதியுடன் அப்பணம் அவரது அமைச்சின் ஊடாக இன்னுமொறு அரச நிறுவனமான இலங்கை போக்குவரத்துச் சபைக்கே வழங்கப்பட்டது.

மீண்டும் 6 நாட்களுக்குள் அப்பணம், பதியப்பட்ட ஒர் இடம்பெயா்ந்த அமைப்பு அதனை மீள செலுத்திவிட்டது. இதில் எவ்வாறு றிசாத் பதியுத்தீன் அரச பணத்தினை கையாடினாா் என்று கூற முடியும் ?

வன்னி மாவட்டத்தில் – சஜித் பிரேமதாஸவுக்குத்தான் முகாவும் – மகாவும் வாக்கு சேகரித்தது. முகா – ஹூனைஸூம் – மகா தலைவர் ரிஷாதும் ஒன்றாகவே வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது – ரிஷாத் பதியுதீன் , அமைச்சர் என்ற ரீதியில் – மேலே கூறப்பட்டவாறு – வாக்காளர்களை அழைத்து செல்ல பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஊடாக முயற்சி எடுத்தார். முகா ஹூனைஸ் பக்கத் துனை நின்றார். அதுதானே உண்மை.

ஆனால், இப்போது – குற்றம் சுமத்தப்பட்டுள்ளது ரிஷாத் பதியுதீனுக்கு மாத்திரமே. காரணம் :- குற்றச்சாட்டு – திட்டமிட்டு சோடிக்கப்பட்டது என்றாலும் ரிஷாத் பதியுதீன் மீதுதான் குற்றம் சுமத்தப்படும். அதுதானே வாஸ்தவம்.

எனவே , அந்த அடிப்படையில்தான் – சம்பவம் தொடர்பில் பூரணமாக அறிந்த – துனை நின்ற ஹூனைஸ் பாறூக்கும் இன்றைய மக்கள் காங்கிரஸ் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு மறைக்கப்பட்ட உண்மைகளை ஊடகங்கள் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

முகா தலைவர் ஹக்கீமின் – அனுமதியின்றி அவர் கலந்து கொண்டிருக்கப் போவதுமில்லை.

ஆக , இது ரிஷாத் பதியுதீனின் – தனிப்பட்ட பிரச்சினை இல்லை. இது சமுகப் பிரச்சினை என்ற நோக்குடனேயே ஹூனைஸூம் அதில் கலந்து கொண்டார் என்பதுடன், முகா கட்சித் தலைமையும் இதற்கு இணங்கியுள்ளது.

முகாவுக்கு வாக்களிக்கும் அதே சமுகத்தைத்தான் – வாக்களிக்க , ரிஷாத் அழைத்துச் சென்றிருந்தார். அதனால்தான் – ரிஷாத் பதியுதீனின் – இந்த செயற்பாடு சமுக நோக்கம் கொண்டது என சமூக மட்டத்தில் உள்ள அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நிதர்சனமான உண்மைகள் இவ்வாறு இருக்க, அரசியல் களத்தில் என்ன நடக்கின்றது என்பதை கொஞ்சம் கூட அறியாத முகா உள்ளூர் பிரதிநிதிகள் சிலர், ரிசாத் பதியுதீன் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து இனவாதிகளை திருப்திப்படுத்தி மிகவும் மோசமாக சமூக வாயில்கள் ஊடாக எழுதி வருகின்றனர். இந்தச் செயற்பாடு – சமூகச் செயற்பாட்டாளர்களால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது.

இது அரசியல் செய்யும் காலம் அல்ல. சமூகத்துக்காக முன்னின்று அச் சமூகத்தின் பிரதிநிதியாக பல உரிமைகளை பெற்றுக் கொடுத்து, அம்மக்கள் வாக்களிப்பதற்காக பல பிரயத்தனங்களை செய்து 11,000 முஸ்லிம்களை புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு அழைத்துக் கொண்டு சென்ற ஒரு தலைமையின் மீது சுமத்தப்பட்டுள்ள போலிக்குற்றச்சாட்டுக்களை ரிஷாட் பதியுதீன் எனும் தனி நபருக்கு உரியது என ஒதுக்கி விட முடியாது. அவ்வாறு ஒதுக்கி விடாமல் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கான பகுதியாகவே பார்க்க வேண்டியுள்ளது.

ரிஷாட் பதியுதீன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முஸ்லிம்களாகிய நாம் ஒன்றிணைந்து மறுப்பு தெரிவிப்பதுடன் அவருக்கு பக்கபலமாகவும் ஆதரவாகவும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காகவும் ஒன்றித்து குரல் கொடுத்து செயற்படும் தருணமே இதுவாகும்.

கரணம் தப்பினால் மரணம்.
நாளை நமக்கும் வரலாம்..

Web Design by Srilanka Muslims Web Team