மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை! - வைகோ அறிவிப்பு. - Sri Lanka Muslim

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை! – வைகோ அறிவிப்பு.

Contributors

மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். விருதுநகர் மக்களவை தொகுதியில் அடங்கிய அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள செட்டிக்குறிச்சியில் மக்களவை தேர்தலுக்கான தனது முதல் கட்ட பிரசாரத்தை புதன்கிழமை தொடங்கி வைத்து வைகோ பேசியதாவது: விருதுநகர் மக்களவை தொகுதியில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடுகிறது. மக்களவைத் தேர்தலில் அதிமுக-திமுகவுடன் கூட்டணி கிடையாது.

தேர்தலின்போது சில அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்க முன்வருவார்கள். ஆனால் மக்கள் வாக்குகளை நல்லவர்களுக்கு போட வேண்டும். வாக்களிக்க பணம் பெறுவோரை சிறையில் அடைக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அர்த்தமற்ற பேச்சு.தமிழகத்தில் மதுவிலைக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரி நடைபயணம் மேற்கொண்டேன்.

மதுவால் இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது. அதை தடுக்கும் நோக்கத்தோடு விழிப்புணர்வு ஏற்படுத்த நடை பயணம் மேற்கொண்டேன். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தி விருதுநகரில் உண்ணாவிரதம் இருந்துள்ளேன். இதுபோன்று மக்கள் பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்தி வருகிறேன். ஏற்கெனவே நான் இத்தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்து பொதுமக்களுக்கு சேவையாற்றியுள்ளேன். மீண்டும் ஒருமுறை சேவையாற்ற வாய்ப்பு தாருங்கள் என்றார் வைகோ.

சிதம்பராபுரம், சின்னராம நாயக்கன்பட்டி, வாழ்வாங்கி உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வைகோ பிரசாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team