மக்களுக்காகவே கட்சி, கட்சிக்காகவே தலைமை என்கின்ற நிலைமை கொண்டுவரப்பட வேண்டும் » Sri Lanka Muslim

மக்களுக்காகவே கட்சி, கட்சிக்காகவே தலைமை என்கின்ற நிலைமை கொண்டுவரப்பட வேண்டும்

DSC_6296

Contributors
author image

M.J.M.சஜீத்

ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்திலும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தேர்தல் கேட்டுவிட்டு, யானைக்கு அளிக்கப்படும் வாக்குகள் எமது சமூகத்தை அடிமையாக்கும், ரணில் விக்ரமசிங்கவை நம்ப முடியாது என்று மயில் சின்னத்திலே தேர்தல் கேட்கின்ற இடங்களிலே மாத்திரம் பேசிக்கொண்டு திரிகின்ற ஒரு புதுமையான நடனத்தை இன்று முழு முஸ்லிம் சமூதாயமும் பார்த்துக்கொண்டிருக்கிறது என தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

தேசிய காங்கிரசின் வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஜஃபர் ஜே.பியை ஆதரித்து யூ.கே.றஹிம் ஜே.பி தலைமையில் அட்டாளைச்சேனை இக்ரஃ வட்டாரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அம்பாரையில் உரையாற்றுகின் போது இந்த யானைக்கு வாக்குப்போட்டு வாக்குகளை அநியாயமாக்க வேண்டாம்  என்கிறார். ஆனால்  ஓட்டமாவடி, வாழைச்சேனையில் யானையில் போட்டியிடுகின்றார். அத்துடன், வட மாகாணத்திலே வன்னி, மன்னார் போன்ற இடங்களிலும் யானை சின்னத்தில் போட்டியிடுகின்றார். அவர் இப்போது புதுமையான கதைகளை கூறி நடனமாடுகின்றார். இவ்வாறான துரோகங்களை தேசிய காங்கிரஸ் ஒருபோதும் செய்ததில்லை.

கடந்த காலங்களில் ஞானசார தேரரை வைத்து சில பிரச்சினைகள் உருவாக்கப்பட்டது. இன்றைக்கு இந்துவாதம், பௌத்த வாதம் இரண்டும் ஒன்றுதான் என்கின்றதொரு நிலைமையை தோற்றுவித்ததன் ஊடாக முஸ்லிம் சமூதாயம்  இன்று குறி வைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவைகளை செய்வதற்கு காரணமாக இருந்த ஐக்கிய தேசிய கட்சியும், ரணில் விக்ரமசிங்கவும், அவரோடு நமது கட்சிகள், தலைமைகள் என்று நாம் எதிர்பார்த்து குறிப்பிடுகின்ற நாடகக்காரர்கள் அவருடைய அந்த சூழ்ச்சியிலே அங்கம் வகித்துக்கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக இன்றைக்கு ரணில் விக்ரமசிங்கவுடைய ஆட்சி தொலைய வேண்டும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரிந்திருக்கின்ற கட்சிகளை ஒற்றுமைப்படுத்தி முறையான ஆட்சியை கொண்டுசெல்வதற்காக இன்று களத்திலே குதித்திருக்கிறார்கள். எங்களுக்கு ஒரே நாடு என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது. எப்பொழும் ரணில் விக்ரமசிங்கவும், அவருக்கு கூட இருக்கின்றவர்களும், இந்த நாட்டை ஆதரிக்கவுமில்லை, நாட்டின் மீது அன்பு வைக்கவுமில்லை. இந்த நாட்டைக் காட்டிக்கொடுத்து இந்த நாட்டினுடைய மத்திய வங்கியை கொள்ளையடித்தவர்கள் என்கின்ற ஒரு நிலைமை இன்று வெளியாகியிருக்கின்றது.

பாராளுமன்றத்திலே சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற வரலாற்று ரீதியிான புதிய யாப்பு மாற்றம் அதிகாரங்களை பகிர்கின்ற விடயம் தொடர்பாக முஸ்லிம் சமூகம் எவ்வாறு முன்னோக்கி செல்ல வேண்டும். எமது இளைஞர்களின் கைகளில் எவ்வாறான பொறுப்புக்களை கையளிக்க வேண்டும் என்கின்ற அடிப்படையிலேதான் நாங்கள் குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரிடம் இருந்து அந்தக்கட்சியை அவரிடத்திலே இருந்து எடுக்க முடியாது என்கின்ற தருனம் வந்த போது தான் கட்சி முக்கியமானதல்ல, சமூகமே முக்கியமானது. தலைமைக்காக கட்சியும், கட்சிக்காக மக்கள் வாழ வேண்டும் என்கின்ற நியதி மாற்றியமைக்கப்பட வேண்டும். மக்களுக்காகவே கட்சி, கட்சிக்காகவே தலைமை என்கின்ற நிலைமை கொண்டுவரப்பட வேண்டும். என்பதற்காகவே நாங்கள் போராடி தேசிய காங்கிரசை உருவாக்கி எமது சமூகத்திற்கு பணி செய்ய வேண்டுமென நினைத்தோம்.

மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆணைகளினால் எங்களுக்கு கிடைத்த பதவிகளை சாறாகப் பிழிந்து இந்த கிழக்கு பிராந்தியம் முழுவதும் மூவின மக்களும் நன்மையடையக்கூடிய வகையில் பல்வேறு வகையிலும் பணிகளைச் செய்துள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka