மக்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்த வேண்டாம்! பொலிஸ் மா அதிபர் கண்டிப்பான உத்தரவு..! - Sri Lanka Muslim

மக்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்த வேண்டாம்! பொலிஸ் மா அதிபர் கண்டிப்பான உத்தரவு..!

Contributors

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கிலான கட்டுப்பாட்டு பணிகளுக்காக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில், வாகனங்கள் மற்றும் பொது மக்களை சோதனை செய்யும் போதும் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை அமுல் செய்யும் போதும் பொது மக்களை சங்கடப்படுத்தும் படியாக நடந்துகொள்வதை உடனடியாக நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு பொது மக்கள் சங்கடப்படும்படியாக சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடந்து கொள்வது, ஊடகங்களில் வெளியாகியுள்ள பல காணொளிகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனூடாக குறித்த நபர்களின் கெளரவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் சமூகத்தில் சங்கடப்படும் நிலைமை தோன்றுவதாகவும் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இவ்வாறு பொது மக்களை சங்கடப்படுத்தும் போது அவர்களுக்கு பொலிஸார் தொடர்பில் எதிர்மறையான எண்ணங்களே ஏற்படும் என தெரிவித்துள்ள பொலிஸ் மா அதிபர், இதன் பிறகு பொது மக்களை சங்கடப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபடுவது தொடர்பில் ஊடகங்களில் தகவல்கள் வெளியானால், குறித்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

அத்துடன், இவ்வாறான சம்பவங்கள் பதிவாகும் பொலிஸ் பிரிவுகளில், பலவீனமான மேற்பார்வை தொடர்பில் குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டம் அமுல் செய்யும் போதும் , வாகனம், பொதுமக்களை பரிசோதிக்கும் நிலைமைகளின் போதும் பொது மக்கள் சங்கடங்களுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், கட்டளை அதிகாரிகள் என பொறுப்பதிகாரிகள் அனைவருக்கும் விஷேட அறிவித்தல் ஒன்றினை விடுத்தே மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன விடுத்துள்ள அறிவிப்பு, ‘

கொரோனாதொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் பொலிஸார், வீதிச் சோதனை சாவடிகளில் வாகனம், பொது மக்களை சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்துகின்றனர்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில், தனிமைப்படுத்தல் சட்டத்தை அமுல் செய்யும் போது சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொது மக்கள் சங்கடப்படும் படியாக நடந்து கொள்ளும் காட்சிகள் அவ்வப்போது ஊடகங்களில் ஒளிபரப்பப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக சங்கடப்படும் நபர்களின் ஆத்ம கெளரவம் பாதிக்கப்படுவதுடன், அவ்வாறான செயற்பாடுகள் ஊடாக பொலிஸார் தொடர்பில் மக்கள் மத்தியில் தாக்கங்களே உருவாகும். அது பொலிஸாரின் நற்பெயருக்கும் கலங்கம் விளைவிக்கும்.

வாகனம், நபர்களை சோதனை செய்யும் நடவடிக்கைகளை தொடர வேண்டும். எனினும் பொது மக்களை குறைத்து மதிப்பிடும் அல்லது அவர்களை சங்கடப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவிக்கின்றேன். இது தொடர்பில் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் தெளிவுபடுத்தவும்.

பொது மக்களை சங்கடப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் சட்டைப் பை பதிவுப் புத்தகத்திலும் பதிவிடப்பட்டிருத்தல் வேண்டும் எனவும், இன்னும் சில விடயங்களை உள்ளடக்கியும் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார் .

Web Design by Srilanka Muslims Web Team