மக்களை நல்வழியில் நடத்த 225 எம்.பிக்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - பிரதமர் - Sri Lanka Muslim

மக்களை நல்வழியில் நடத்த 225 எம்.பிக்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – பிரதமர்

Contributors

பாராளுமன்றத்தினுள் குரோதம், பொறாமை போன்ற மனப்பான்மைகளை விடுத்து மக்களை நல்வழியில் வழிநடத்தக்கூடிய நல்ல மனிதர்களாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த உயரிய சபையில் செயற்பட வேண்டும் என பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள 2 கோடியே 7 இலட்சம் மக்களையும் மத, கலாசார பண்பாட்டுடன் வாழ்வதற்கு இந்த உயரிய சபையிலுள்ள 225 உறுப்பினர்களும் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

புத்தசாசன மற்றும் மத விவகாரங்கள் உட்பட தெரிவுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட 10 சிரேஷ்ட அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சகல இன மக்களும் தத்தமது மதங்களை அனுஷ்டிக்கும் விதத்தில் இந்த நாட்டில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்த சிந்தனையூடாக நாட்டிலுள்ள இந்து, பெளத்த, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சகலரும் தத்தமது மதங்களை அனுஷ்டிக்க சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மதமும் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அதன்படி மனிதன் வாழவேண்டும்.

பத்திரிகைகளில் உள்ளவற்றை இந்த சபையில் வாசித்துக் காட்டிவிட்டு அதனை வைத்துக்கொண்டு குரோத மனப்பான்மையுடன் பொறாமை குணத்துடன் செயற்படக்கூடாது. இந்த உயரிய சபைக்கு மதிப்பளிக்க வேண்டும். மதங்கள் எங்களை அவ்வாறு வழி நடத்தவில்லை. நாம் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும். நாட்டில் தற்போது 70.2 வீத பெளத்தர்களும், 12.6 வீத இந்துக்களும், 9.7 வீத இஸ்லாமியர்களும், 6.1 வீத கத்தோலிக்கர்களும் வேறு கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் 1.3 வீதமும் உள்ளனர். இவர்கள் தமது மதங்களை அனுஷ்டிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

 

இந்த வரவு செலவு திட்டத்தின் ஊடாக 4,571 மில்லியன் ரூபா ஒதுக்கப் பட்டுள்ளது. இதன் ஊடாக மதங்களின், மத வழிபாட்டுத் தலங்கள் மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. அதேபோன்று வடக்கு, கிழக்கு பகுதிகளில் யுத்தம் காரணமாக சேதமடைந்த இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம், பெளத்த வழிபாட்டுத் தலங்களை புனரமைக்கும் வேலைகளும் நடத்தப்படு கின்றன. நாட்டில் பெளத்த தர்மத்திற்கு அமைவாகவும் தேசத்தின் ஒற்றுமைக்காகவும் செயற்படுகின்ற அதேவேளை சிலர் எதிராகவும் செயற்படுகின்றனர்.

சில காவி உடை தரித்தவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர். இதனை நாம் பொருட்படுத்தக்கூடாது. காவி உடை தரித்த நல்லவர்கள் தர்மத்தை பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களை நாம் பின்பற்றுவோம், ஏனையோரை புறக்கணிப்போம் என்றும் பிரதமர் டி. எம். ஜயரட்ண தெரிவித்தார். (thinakaran)

Web Design by Srilanka Muslims Web Team