மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்பதற்காக உறுதியான ஆதாரம் இல்லாமல் யாரையும் சிறையில் வைக்க முடியாது - ரிஷாட்டின் மைத்துனரை விடுதலை செய்த நீதி மன்றம்..! - Sri Lanka Muslim

மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்பதற்காக உறுதியான ஆதாரம் இல்லாமல் யாரையும் சிறையில் வைக்க முடியாது – ரிஷாட்டின் மைத்துனரை விடுதலை செய்த நீதி மன்றம்..!

Contributors

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு பணிப் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, ரிஷாட்டின் மைத்துனர் கிதர் மொஹம்மட் சிஹாப்தீன் இஸ்மத் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் அவரை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீராகல உத்தரவிட்டார்.

பீ 54059/21 எனும் 16 வயதான வீட்டுப் பணிப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை குறித்த வழக்கு விசாரணை இன்று (16) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

இதன்போதே, உறுதியான எந்த சான்றுகளும் இல்லாத ஒரு விடயத்துக்காக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்பதை வைத்து ஒருவரை விளக்கமறியலில் வைக்க முடியாது. என அறிவித்தே கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீராகல சந்தேக நபரை 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்தார்.

அத்துடன் சந்தேக நபரின் கடவுச் சீட்டை மன்றில் கையளிக்கவும், பிணையில் இருக்கும்போது எந்தவகையிலும் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக் கூடாது எனவும் நீதிவான் உத்தரவிட்டார்.

கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு வழக்கு தொடர்பில், பொலிஸார் சார்பில் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தின் வழக்கு நெறிப்படுத்தல் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் விஜித்த ராஜபக்க்ஷ (23072) நீதிமன்றில் ஆஜரானார்.

இவ்வழக்கில் ஒரே சந்தேக நபரான கிதர் மொஹம்மட் சிஹாப்தீன் இஸ்மத் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் உள்ளிட்டவர்களுடன் சிரேஷ்ட சட்டத்தரணி ஹேமந்த கமகே மன்றில் ஆஜரானார்.

இதன்போது நீதிமன்றுக்கு மேலதிக விசாரணை அறிக்கையையும், கொழும்பு சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரி முன்னெடுத்த சட்ட மருத்துவ பரிசோதனை படிவமும் நீதிவானின் அவதானத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த விவகாரத்தில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக, வாக்குமூலம் அளித்துள்ள யுவதி, தான் எந்த திகதியில் எங்கு வைத்து துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளிப்படுத்தியிராத போதும், கால எல்லையை வைத்து வழக்கு தொடுக்க முடியும் என பொலிஸார் நீதிமன்றுக்கு சுட்டிக்காட்டினர்.

அதனால் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாகவும் இச்சம்பவத்தை மையப்படுத்தி பாரிய ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் இடம்பெறும் நிலையில், சந்தேக நபருக்கு பிணையளித்தால் பொது மக்களிடையே குழப்பம் ஏற்படலாம் எனவும் குறிப்பிட்ட பொலிஸார், பிணை சட்டத்தின் 14 ஆம் அத்தியாயத்துக்கு அமைய சந்தேக நபருக்கு பிணையளிக்கக் கூடாது என வாதிட்டனர்.

இதன்போது சிரேஷ்ட சட்டவைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் முன்வைத்துள்ள சட்ட மருத்துவ பரிசோதனை படிவத்தை பரீட்சித்த நீதிவான் புத்திக ஸ்ரீராகல, அப்படிவத்தில் உள்ள விடயங்களும், பொலிஸார் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கும் இடையே பரஸ்பர வேறுபாடுகள் இருப்பதை திறந்த நீதிமன்றில் சுட்டிக்காட்டினார். பாலியல் பலாத்காரம் தொடர்பிலான விடயங்கள் குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளபோதும் சட்ட மருத்துவ பரிசோதனை படிவத்தில் அதற்கான சான்றுகள் இல்லை என்பதை நீதிவான் குறிப்பிட்டார்.

இந்நிலையில், சந்தேக நபர் சார்பில் மன்றில் வாதிட்ட சிரேஷ்ட சட்டத்தரணி ஹேமந்த கமகே, இந்த வழக்குடன் தொடர்புபட்ட விடயம் எந்த முறைப்பாடுகளும் இன்றி ஆரம்பிக்கப்பட்டதாகவும், பல ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிறிதொரு விவகாரத்தில் அளித்த வாக்குமூலம் ஒன்றை அடிப்படையாக கொண்டே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் வழக்கை முன்கொண்டு செல்ல முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் திறந்த நீதிமன்றில் தனது தீர்மானத்தை அறிவித்த நீதிவான் புத்திக ஸ்ரீராகல, ஒருவரை உறுதியான சான்றுகள் இன்றி வெறுமனே முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமறியலில் வைப்பது நியாயமற்றது என சுட்டிக்காட்டினார்.

மேலதிக வழக்கு விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

இன்ஷா அல்லாஹ்!
வரும் நாட்களில் நல்லது நடக்கும் என்கின்ற பலமான நம்பிக்கை பிறந்துள்ளது. பிரார்த்தனைகள் என்றுமே வீண்போகாது தொடர்ந்து பிரார்த்திப்போம்…

Web Design by Srilanka Muslims Web Team