மக்கள் சேவகன் ஏ.ஆர். மன்சூர் மறைந்து இன்றுடன் ஐந்து வருடங்கள்! - Sri Lanka Muslim

மக்கள் சேவகன் ஏ.ஆர். மன்சூர் மறைந்து இன்றுடன் ஐந்து வருடங்கள்!

Contributors

கல்முனை பிரதேச மக்கள் சேவகன் முன்னாள் அமைச்சர் கலாநிதி ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் காலமான தினம் இன்றாகும். அப்துல் றஸாக் தம்பதியருக்கு இளையவராக 1933.05.30 அன்று ஏ.ஆர்.மன்சூர் பிறந்தார்.

 • 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் கல்முனை பிரதேசத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவராகவும், முதன் முதலில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவராகவும் 1943 ஆம் ஆண்டு பெருமையை சேர்த்தவர் மன்சூர்.
 • மேலதிக கல்வியை காத்தான்குடி முஸ்லிம் கல்லூரியில் 1944 ஆம் ஆண்டு தொடர்ந்தார்.
 • 1945 ஆம் ஆண்டு கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் இணைந்து ஆங்கிலக் கல்வியை கற்கத் தொடங்கினார். 1947 ஆம் ஆண்டு மட்டுநகர் சிவானந்தா வித்தியாலயத்தில் இணைந்து கொண்டார். 1948 தொடக்கம் 1952 வரையான காலப்பகுதியில் மட்டுநகர் அரசினர் கல்லூரியில் இணைந்தார். அக்காலத்தில் தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற்ற ஆசிரியராக இருந்த புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளையிடம் தமிழ் கற்றார்.
 • 1953 தொடக்கம் 1954 வரையான காலப்பகுதியில் கொழும்பு சேன் ஜோசப் கல்லூரியில் சேர்ந்து உயர்தர தராதரப்பத்திர பரீட்சையில் சித்தியடைந்தார்.
 • 1955 தொடக்கம் 1958 வரையான காலப்பகுதியில் கொழும்பு சட்டக்கல்லூரியில் இணைந்து கற்றார். இக்காலப்பகுதியில் கட்டக் கல்லூரியின் தூதுக்குழுக்களில் பங்கு பற்றி பாக்கிஸ்தான் நாடு சென்றார். 1958 காலப்பகுதியில் சட்டக்கல்லூரியில் சித்தி பெற்று உயர்நீதிமன்ற சட்டத்தரணியானார்.
 • 1958 முதல் 1961 வரை பிரபல சட்டத்தரணியான ஜி.ஜி. பொன்னம்பலம் QC , இஸ்ஸதீன் மொஹமட் QC, ஏ.சீ.எம். அமீர் QC, முன்னாள் பிரதம நீதியரசர் என்.டீ.என். சமரக்கோன் ஆகியோருடன் கனிஷ்ட சட்டத்தரணியாக தொழில் புரிந்து வந்தார்.
 • 1958 கல்முனை தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சரும், வன்னிமையுமான கேற் முதலியார் எம்.எஸ். காரியப்பர் அவர்களின் மூன்றாவது புதல்வியான ஸொஹறா காரியப்பரை திருமணம் செய்து கொண்டார். 1959ம் ஆண்டு மகள் மின்ஹா மன்சூர் பிறந்தார்.
 • 1964 ஆம் ஆண்டு மன்சூர் கல்முனை பட்டின சபைத் தேர்தலில் போட்டியிட்டார்.
 • 1970 இல் கல்முனை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
 • 1977 ஆம் ஆண்டு கல்முனை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு 5547 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு, பாராளுமன்றத்தின் கணக்குக்குழு, நெடுஞ்சாலைகள் ஆலோசனைக் குழு, போக்குவரத்துச் சபை ஆலோசனைக்குழு, கைத்தொழில் விஞ்ஞான அபிவிருத்தி ஆலோசனைக் குழு, கல்வி ஆலோசனை குழு, பிரதேச அபிவிருத்தி ஆலோசனைக் குழு என்பனவற்றில் இடம்பெற்றதோடு பேராதனைப் பல்கலைக்கழக செனட் சபை அங்கத்தவராகவும் நியமனம் பெற்றார் .
 • 1979 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்ட அமைச்சராகவும் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
 • 1989 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் இடம்பெற்று பாராளுமன்ற உறுப்பினராகவும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முதலாவது முஸ்லிம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும், வர்த்தக, வாணிபத்துறை அமைச்சராகவும் நியமனம் பெற்றார்.
 • 2003 ஆம் ஆண்டு குவைத் நாட்டின் இலங்கைத் தூதுவராகப் பதவி வகித்தார். இக்காலத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு குவைத் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் எட்டு கட்டடங்கள் கிடைத்துள்ளன.
 • ஏ.ஆர். மன்சூருக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 10 ஆவது பட்டமளிப்பு விழாவின் போது கடந்த 2016.03.20 ஆம் திகதி கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கல்முனை பொது நூலகம் மற்றும் ஏனைய நூலக அபிவிருத்திகள் பாடசாலைகளுக்காக பௌதீக வளங்கள், கல்முனை பொதுச்சந்தை, கல்முனை நீதிமன்றக் கட்டடத் தொகுதி, கல்முனை நிருவாகக் கட்டடத் தொகுதி, கல்முனை நீர் வழங்கல் திட்டம், கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை நிர்மாணம் மற்றும் வைத்தியசாலைகள் அபிவிருத்தி, கல்முனை தொலைத் தொடர்பு பரிவர்த்தன நிலையம், இலங்கை மின்சார சபை பொறியியலாளர் காரியாலயம், கல்முனை இலங்கை வங்கி கட்டடம், கல்முனை நகர மண்டபம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் பஸ் நிலையமும், பஸ் தரிப்பிடமும், வீடமைப்புத் திட்டங்கள் போன்ற பல அபிவிருத்திப் பணிகள் இன்றும் அவரது பணிகளில் காலத்தால் அழியாதவைகளாக காணப்படுகின்றன.

தனது தந்தையின் பணியைத் தொடர்வதில் அன்னாரின் புதல்வியும் சட்டத்தரணியுமான மர்யம் நளீம்டீன் (அவுஸ்திரேலியா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர்) பெரும் தொண்டாற்றி வருகின்றார். மன்சூர் அவர்கள் மறைந்து இன்றுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்றன.

 

-எஸ். அஷ்ரப்கான்

Web Design by Srilanka Muslims Web Team