மங்கள சமரவீர அரசியலிலிருந்து ஓய்வுபெற்றதே இலங்கை ஜெனீவாவில் தோற்கக் காரணம்..! - Sri Lanka Muslim

மங்கள சமரவீர அரசியலிலிருந்து ஓய்வுபெற்றதே இலங்கை ஜெனீவாவில் தோற்கக் காரணம்..!

Contributors
author image

Editorial Team

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர செயற்பாட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றமையே ஜெனிவாவில் இலங்கை தோற்க காரணமென British Tamil Conservatives அமைப்பின் தலைவர் கலாநிதி அர்ஜுன சிவானந்தன் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக இருந்திருந்தால் இந்த பிரேரணையை ஒருபோதும் வெற்றி கொண்டிருக்க முடியாது என்றார். குறைந்தது மங்கள சமரவீர செயற்பாட்டு அரசியலில் இருந்திருந்தால் நடுநிலை வகித்த பல நாடுகளை இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்திருப்பார் என்று அவர் குறிப்பிட்டார்.

2016ம் ஆண்டு தொடக்கம் இவ்வாறானதொரு பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள புலம்பெயர் சமுகம் முயற்சித்த போதும் மங்கள சமரவீரவின் செயற்பாடுகளால் அந்த இலக்கை அடைய முடியாது போனதாக அவர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்கள் முன்வைக்கும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் மங்கள சமரவீர தனது தனிப்பட்ட தொடர்புகளை பயன்படுத்தி பதில் அளித்து வந்ததாக அவர் கூறினார்.

அதனால் மங்கள சமரவீர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதை புலம்பெயர் தமிழர்கள் தமக்கு கிடைத்த வெற்றியாக கருதுவதாக கலாநிதி அர்ஜுன சிவானந்தன் குறிப்பிட்டார். அதற்கு அவர்கள் நன்றி கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய இலங்கை அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் எவருக்கும் சர்வதேச ரீதியில் சுமுகமாக ராஜதந்திர உறவு இல்லை எனவும் அதனால் மங்கள சமரவீர முன்னெடுத்த செயற்பாடுகளுக்கு அருகில் கூட அவர்களால் செல்ல முடியவில்லை என கூறிய கலாநிதி அர்ஜுன சிவானந்தன், அது புலம்பெயர் தமிழர்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team