மசூத் அஸாரை ஐ.நா. பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு சீனா ஆதரவு அளிக்கும் - மத்திய உள்துறை அமைச்சர் » Sri Lanka Muslim

மசூத் அஸாரை ஐ.நா. பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு சீனா ஆதரவு அளிக்கும் – மத்திய உள்துறை அமைச்சர்

rajnath

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

புதுடெல்லி,
ஜெய்ஷ்-ஏ-முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை ஐ.நா. மூலம் பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு சீனா ஆதரவு அளிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் பயங்கரவாதிகள் பட்டியலில் மசூத் அஸாரின் பெயரை இடம் பெறச் செய்யும் விவகாரத்தில், இந்தியாவின் முயற்சிக்கு சீனா ஆதரவு அளிக்கும் என்று நம்புகிறோம் என்றார் அவர். மசூத் அஸாரை பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா கடந்த வெள்ளிக்கிழமை கொண்டு வந்த தீர்மானத்தை தனது “வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி சீனா முறியடித்தது.

இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் கருத்தொற்றுமை எட்டப்படாததால் அந்தத் தீர்மானத்தை எதிர்த்ததாக சீனா தெரிவித்தது.இந்த நிலையில், பயங்கரவாத விவகாரத்தில் சீனா இரட்டை வேடம் போடுவதாக இந்தியா குற்றம் சாட்டியது.15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில், சீனாவைத் தவிர ஏனைய 14 உறுப்பு நாடுகளும் இந்தியாவின் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட மசூத் அஸார், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டால், அவருக்கு எதிரான சொத்து முடக்கம், பயணத் தடை உள்ளிட்ட தடைகளை பாகிஸ்தான் உள்ளிட்ட ஐ.நா. உறுப்பு நாடுகள் விதிக்க வேண்டியிருக்கும்.

Web Design by The Design Lanka