மட்டக்களப்பில் ஆயுதங்களுடன் சென்ற குழு வீடு புகுந்து தாக்குதல்! - Sri Lanka Muslim

மட்டக்களப்பில் ஆயுதங்களுடன் சென்ற குழு வீடு புகுந்து தாக்குதல்!

Contributors

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்றிரவு ஆயுதங்களுடன் சென்ற குழுவொன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.

நேற்றிரவு 9.35 மணியளவில் பாலமீன்மடு, புதிய எல்லை வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீதே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் இந்த தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச் சென்றதாக வீட்டின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வாள் மற்றும் பொல்லுகளுடன் வந்தவர்கள் வீட்டின் கேற்றினை உடைத்துக் கொண்டு உள் நுழைந்தபோது வீட்டின் உரிமையாளர்கள் வீட்டுக்குள் சென்று கதவினை மூடிய நிலையில் வீட்டின் முன்பாக தரித்து நின்ற மோட்டார் சைக்கிள்கள் இரண்டினை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன் வீட்டின் ஜன்னல்களை உடைத்து அதன் ஊடாக வாள்களை நீட்டி அச்சுறுதல் விடுத்ததாகவும் வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பாலமீன்மடுவில் உள்ள பொலிஸ் காவலரணில் முறையிட்டபோதும் அவர்கள் தங்களால் வர முடியாது எனவும் மட்டக்களப்பில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறையிடுமாறு கூறியதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நடைபெற்ற நீண்ட நேரத்திற்கு பொலிஸார் அப்பகுதிக்கு வரவில்லையெனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்

Web Design by Srilanka Muslims Web Team