மட்டக்களப்பு - ஒலுவில் வரையான புகையிரத சேவை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதிக்கு மகஜர் - Sri Lanka Muslim

மட்டக்களப்பு – ஒலுவில் வரையான புகையிரத சேவை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதிக்கு மகஜர்

Contributors
author image

S.Ashraff Khan

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு வரையுள்ள புகையிரத சேவையை பொத்துவில் வரை நீடிப்பதற்கான செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆவன செய்யும்படியும் முதற்கட்டமாக மட்டக்களப்பு – ஒலுவில் வரையான புகையிரத சேவை ஆரம்பிக்குமாறும் கோரி சாய்ந்தமருது சுபீட்சம் நற்பணி மன்றத்தினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மகஜர்  ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 

அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் எம்.ஐ.எம். அன்ஸார், செயலாளர் ஏ.ஆர். அஷ்பாக் அஹமட் ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பிவைத்துள்ள அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

திரு ரணசிங்க பிரேமதாக அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ஏ.ஆர். மன்சூரின் வேண்டுகோளுக்கிணங்க ஈரான் அரசினால் மட்டக்களப்பு – பொத்துவில் வரையான புகையிரதப்பாதை வரைபடம் தயாரிக்கப்பட்டு புகையிரதப்பாதை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த வேளையில் திடீரென் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், பல வருடங்களாக நாட்டை அச்சுறுத்திய யுத்தம் என்பன இந்த அபிவிருத்தி நடவடிக்கையை முன்னெடுக்கத் தடையாக இருந்தன. தற்போது ஜனாதிபதியால் கொடூர யுத்தம்  முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் புகையிரத பாதை அமைப்பதில் எவ்வித தடையும் இல்லை.

 

2014 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி இயற்கை அனர்த்தத்தின் பிற்பாடு கிழக்கு மாகாணத்தில் கடற்கரையிலிருந்து 65 மீற்றர் எல்லைக்குள் கட்டிடங்கள் அமைக்கவோ, குடியிருக்கவோ முடியாதென்று வர்த்தமானி ஊடாக அரசினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

தேவை ஏற்படும் பட்சத்தில் கடற்கரையை அன்மித்து இருக்கும் இந்த 65 மீற்றர் எல்லைக்குள் புகையிரதப்பாதைகளை அமைக்கலாம். இக்குறிப்பிட்ட அரச எல்லையில் உள்ள காணிகளுக்காக நஷ்டஈடு கொடுக்க வேண்டிய தேவையில்லை. இப்புகையிரதப்பாதை மட்டக்களப்பிலிருந்து ஒலுவில் வரையாவது அமைப்பதற்கு மஹிந்த சிந்தனை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உட்படுத்தி இப்பிரதேச மக்களின் மிக நீண்டகாலத் தேவையினை பூர்த்தி செய்ய வேண்டும்.

 

அம்பாரை மாவட்டத்தில் ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டு 2013.09.01 ஆம் திகதி ஜனாதிபதியால் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளது. இம்மீன்பிடித்துறைமுகம் டென்மார்க் அரசின் 46.1 மில்லியன் யூரோ கடனுதவித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது எமது பிரதேச அபிவிருத்தியிலும் நாட்டின் பொருளாதார வர்த்தகத்துறையிலும் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்துமென நம்பப்படுகிறது.

 

அத்துடன் படித்த இளைஞர் யுவதிகள், வேலையற்ற பட்டதாரிகள் உட்பட துறைமுக நிர்மாணப்பணிக்காக காணிகளை இழந்தவர்களின் பிள்ளைகளுக்கும் தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இத்துறைமுகம் செயற்பட்டுவரும் வேளையில் புகையிரதம் மூலம் பொருட்கள் பண்டங்களை ஏற்றி இறக்கவும் இலகுவாக அமைவதுடன், இளைஞர் யுவதிகளுக்கு இத்திணைக்களத்தில் வேலைவாய்ப்புக்களும் கிடைக்கும்.

 

கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் வாழ்கின்றார்கள்.  இவர்கள் அரச, அரச சார்பற்ற அலுவலகங்களிலும் கடமை புரிகின்றார்கள், கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள். தொழில் நிமிர்த்தம் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் கிழக்குக்கு வருகின்றார்கள். மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு பிரயாணம் அதிகமானோர் அம்பாரை மாவட்ட மக்கள் என அறியக்கூடியதாக உள்ளது. குறிப்பாக ஹிங்குரான, இங்கினியாகல, பொத்துவில், பாணம, லஹூகல, அறுகம்பை, போன்ற சுமார் 200 கிலோ மீற்றர் தூரத்தில் வசிப்பவர்களும் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு வந்து பிரயாணங்களை மேற்கொள்கின்றனர்.

 

எமது கிழக்குப் பிரதேசத்தில்  இசை நடனக்கல்லூரி (கல்லடி), தென்கிழக்கு பல்கலைக்கழகம் (ஒலுவில்), ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை (அட்டாளைச்சேனை), தொழில் நுட்பக் கல்லூரிகள், கல்வியியற்கல்லூரிகள், மேலும் பிரபல்யமான பாடசாலைகளும் அமைந்துள்ளன. இப்பிரதேசத்தில் கல்வி பயிலும் மாணவர்களும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும், விரிவுரையாளர்களும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர்.

 

அத்துடன் ஏனைய வெளிமாவட்ட உயர் அதிகாரிகளும் இப்பிரதேசத்திற்கு வந்து கடமை புரிகின்றனர். இவர்களின் போக்குவரத்திற்கு புகையிரத சேவை மிகவும் பிரயோசனமாக இருப்பதுடன், தேவையேற்படும் பட்சத்தில் அவர்களது புகையிரத ஆணைச்சீட்டினைக் கொடுத்து சிரமமின்றி ஆசனங்களை பதிவுசெய்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.

 

மேலும் காத்தான்குடி, களுவாங்சிகுடி, கல்முனை, அம்பாரை, அக்கரைப்பற்று, பொத்துவில் என்பன வியாபார நகரங்களாகும். இங்கு பொருட்கள், பண்டங்களை ஏற்றி இறக்குவதற்கு புகையிரதத்தைப் பயன்படுத்துவதன் மூலமாக வியாபாரிகளும், பொதுமக்களும் நன்மையடைவதுடன், புகையிரதத் திணைக்களமும் பெரும் இலாபத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும். தற்போது யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் சுற்றுலாப் பிரயாணிகளைக்கவர்ந்துள்ள பொத்துவில் உல்லை, அறுகம்பை போன்ற  பிரதேசங்களுக்கு புகையிரதம் வருமாக இருந்தால் அதிக வருமானம் திணைக்களத்திற்கு கிடைக்கும்.

 

இந்நிலையில் வடக்கு பிரதேசத்தில் எதிர்வரும்  செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் யாழ் தேவி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிய முடிகிறது.

 

ஆகவே, கடந்தகால யுத்தம், இதர காரணங்களால் தடைப்பட்டிருந்த மட்டக்களப்பு – பொத்துவில் புகையிரத சேவையினை குறைந்தது முதற்கட்டமாக மட்டக்களப்பு முதல் ஒலுவில் வரையுமாவது ஆரம்பிப்பது தொடர்பாக தமது கவனத்தை செலுத்தும்படி இப்பிரதேச பொதுமக்கள் சார்பாக  கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team