மத்திய பிரதேச மாநிலத்தில் தீவிரமாக நடைபெறும் முஸ்லிம் வேட்டை! - Sri Lanka Muslim

மத்திய பிரதேச மாநிலத்தில் தீவிரமாக நடைபெறும் முஸ்லிம் வேட்டை!

Contributors

புதுடெல்லி: மத்திய பிரதேச போலீஸ் முஸ்லிம் இளைஞர்களை அதிகமாக தீவிரவாத வழக்குகளில் கைது செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் 85 வழக்குகளில் 200 பேர் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யு.ஏ.பி.ஏ.) கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேஷன் (Jamia Teachers’ Solidarity Association – JTSA) தயாரித்துள்ள ‘கில்ட் பை அசோசியேஷன்: யு.ஏ.பி.ஏ. கேஸஸ் ஃப்ரம் மத்திய பிரதேஷ்’ (Guilt By Association: UAPA Cases From Madhya Pradesh) என்ற அறிக்கை கூறுகிறது.

இவ்வழக்குகளில் பெரும்பாலானவை தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில் சுமத்தப்பட்டவை. ஆனால், “சிறுபான்மை வேட்டை மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் ம.பி. முதல்வராக இருக்கும்போதே துவங்கிவிட்டது” என்று ஜாமிஆ டீச்சர்ஸ் அசோசியேஷனின் அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தூரில் இருந்து கைது செய்யப்பட்ட முஹம்மது இம்ரான் என்ற இளைஞர் அனுபவித்த துயரங்கள் அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது. முதலில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டபோதும், மேலும் பல வழக்குகளை போலீஸ் இம்ரான் மீது சுமத்தியது.

10 ஆண்டுகளாக சட்ட ரீதியான போராட்டம் நடத்தி இம்ரான் விடுதலையானார். தேசப் பாதுகாப்புக்கு சவாலாக விளங்கும் நூலை வைத்திருந்தார்; தடை செய்யப்பட்ட இயக்கமான ‘சிமி’க்காக போஸ்டர் ஒட்டினார் உள்ளிட்ட குற்றங்கள் அவர் மீது சாட்டப்பட்டன.

தைனிக் ஜாக்ரன், நயா துன்யா, உருது பத்திரிகையான தெஹ்ரீக் ஆகிய பத்திரிகைகளில் வெளியான செய்திகளையும்,கட்டுரைகளையும் கூட ஆதாரமாக போலீஸ் குற்றப் பத்திரிகையில் சேர்த்தது.

குர்ஆன் வசனங்கள் அடங்கிய போஸ்டர்களும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டன. இது போல விசித்திரமான பல வழிகளையும் முஸ்லிம் வேட்டைக்காக போலீஸ் உபயோகித்ததாக அறிக்கை கூறுகிறது.

2008-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ‘சிமி’ உறுப்பினர்கள் என்று குற்றம் சாட்டி 13 இளைஞர்களை போலீஸ் கைது செய்தது. இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட இதே நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு அனைத்து மாவட்ட போலீஸ் தலைவர்களுக்கும் எஸ்.எஸ்.பி. கடிதம் எழுதியது.

ஒரு மாதத்திற்குள் 18 மாவட்ட போலீஸ், இந்தக் கடிதத்தின் பெயரால் வழக்கு பதிவு செய்தது. ஆறு மாதத்திற்குள் இதர நான்கு மாவட்ட போலீசும் வழக்கு பதிவு செய்தன. பத்தாண்டுகளில் போலீஸ் பதிவு செய்த பல எஃப்.ஐ.ஆர்.களும் ஒரே போல உள்ளன.

2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போலீஸ் பதிவு செய்த 2 வழக்குகள் இதற்கு உதாரணமாகும். இரண்டு மாறுபட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டவர்கள் ஒரே நபர்களாவர்.

இவர்கள் எவ்வாறு இரு இடங்களில் ஒரே நேரத்தில் இரண்டு குற்றங்களை செய்திருக்க முடியும் என்ற எஃப்.ஐ.ஆரில் காணப்பட்ட முரண்பாட்டை கூட விசாரணை நீதிமன்றம் பரிசோதிக்கவில்லை.

2001-ஆம் ஆண்டும், 2008-ஆம் ஆண்டும் பதிவு செய்த இதர இரண்டு வழக்குகளிலும் எஃப்.ஐ.ஆரில் ஒரு வரி கூட வித்தியாசமில்லை. இவ்விரண்டு வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை பேருந்து நிலையத்தில் இருந்து கைது செய்துள்ளனர்.

‘சிமி’க்காக முழக்கமிட்டார்கள் என்று குற்றச்சாட்டு

இவ்வழக்கில் சாட்சிகளை ஆஜர் படுத்த போலீசால் முடியவில்லை. ஜாமிஆ டீச்சர்ஸ் அசோசியேஷனின் அறிக்கைக்கு போலீஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வழக்குகளை நீதிமன்றங்கள் பரிசோதித்தன என்றும், போலீசுக்கு எதிராக விமர்சனங்களை வெளியிடவில்லை என்றும் டி.ஜி.பி. நந்தன் துபே கூறுகிறார்.

போலீஸின் கூற்றுக்களை ஜாமிஆ டீச்சர்ஸ் அசோசியேஷனின் நிர்வாகி மனீஷா சேத்தி விமர்சிக்கிறார். மத்திய பிரதேச நீதிமன்றம் பல தடவை போலீசை விமர்சித்துள்ளது என்றும் நிரபராதிகள் என்று நிரூபணமானதை தொடர்ந்து பல வருடங்களுக்கு பிறகு அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாகவும் மனீஷா சேத்தி கூறுகிறார்.

 

Web Design by Srilanka Muslims Web Team