மத வழிபாட்டு தலங்களுக்கு நிதியமைச்சு மூலமே நிவாரணம் - கஞ்சன விஜேசேகர! - Sri Lanka Muslim

மத வழிபாட்டு தலங்களுக்கு நிதியமைச்சு மூலமே நிவாரணம் – கஞ்சன விஜேசேகர!

Contributors

மின்சார சபை, பெற்றோலியக் கூட்டத்தாபனத்துக்கு 80பில்லியன் ரூபாவை கடனாக செலுத்த வேண்டியுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  விகாரைகள் மற்றும் மதவழிபாட்டுத் தலங்களுக்கு மின்சாரத்தை விநியோகிக்க நாட்டில் பிரத்தியேகமான மின்னுற்பத்தி நிலையங்கள் கிடையாதென்பதை சுட்டிக் காட்டிய அமைச்சர், மத வழிபாட்டுத் தலங்களும் தமது மாதாந்த மின்கட்டணத்தை முகாமைத்துவம் செய்வது அவசியமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் மத வழிபாட்டுத்தலங்களுக்கு மின்கட்டணத்தில் நிவாரணம் வழங்கும் தீர்மானத்தை ஒருபோதும் மின்சக்தி எரிசக்தி அமைச்சினால் மேற்கொள்ள முடியாது.நிதியமைச்சின் மூலம் பெற்றுக் கொடுத்தால் அதனை வழங்குவதில் பின்னிற்கப்போவதில்லையென்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் அஜித் மான்னப்பெரும எம் பி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

பாராளுமன்றத்தின் ஒருமாதத்துக்கான மின்கட்டணம் 60இலட்சமாக காணப்படுவதுடன் எதிர்வரும் காலங்களில் இத்தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

ஆகவே சூரிய சக்தி மின்சார திட்டத்தை பாராளுமன்றத்திலும் செயற்படுத்துவது அவசியமாகும்.

நாடுமுழுவதுமுள்ள வைத்தியசாலைகள், அரசாங்க பாடசாலைகள் மற்றும் மாகாண கல்வி திணைக்களங்களின் கூரைகளில் சூரிய சக்தி மின்னுற்பத்தித் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மின்கட்டண அதிகரிப்பினால் நாட்டில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.2013ஆம் ஆண்டு மின்கட்டணம் அதிகரிக்கப்ட்டு 2014ஆம் ஆண்டு நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையம் ஸ்தாபிக்கப்பட்டதைத் தொடர்ந்து மின்கட்டணம் குறைக்கப்பட்டது. எனினும் 2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் மின்கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.

மின்னுற்பத்திக்கான கேள்வி மற்றும் செலவு அதிகரித்துள்ள நிலையிலும் கடந்த எட்டு வருட காலமாக மின் கட்டணம் அதிகரிக்கப்படாது மின்சார சபை பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

மின்சார சபையானது பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 80பில்லியன் ரூபாவை நிலுவையாக செலுத்த வேண்டியுள்ளது. தேசிய மற்றும் ஏனைய மின் விநியோகத்தர்களுக்கு 45பில்லியன் ரூபா கடனாக செலுத்த வேண்டியுள்ளது.

நிதி நெருக்கடி தீவிரமடைந்துள்ளதன் பின்னணியில் மாற்றுத் திட்டங்களின்றி மின்சார சபை மின்கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்குமாறு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவை வலியுறுத்தியது.வீட்டு மின்பாவனை,அரச மற்றும் அத்தியாவசிய கட்டடங்கள்,தொழிற்சாலைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் என நான்கு பிரிவுகளாக மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டன. கடந்த காலங்களில் மின்கட்டண அதிகரிப்பின் போது ஏனைய பிரிவுகளிடமிருந்து கட்டணம் அறவிடப்பட்டு அதனூடாக மத வழிபாட்டு த்தலங்களுக்கு மின்சாரத்திற்கான நிவாரண கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் தற்போது அவ்வாறு செயற்பட முடியாத நிலையே காணப்படுகிறது.

நாட்டில் 48,682மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டிடங்கள் உள்ளன.

புதிய மின்கட்டணத்திற்கமைய 36,000மத வழிபாட்டுத் தலங்களின் மின்கட்டணம் 3990ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளன.மத தலங்களுக்கு என பிரத்தியேகமாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்னுற்பத்தி நிலையங்கள் ஏதும் நாட்டில் கிடையாது,ஆகவே மத தலங்கள் தமது மாத மின்கட்டணத்தை முகாமைத்துவம் செய்துக்கொள்ள வேண்டும்.

11 ஆயிரம் மத தலங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

லோரன்ஸ் செல்வநாயகம் 

Web Design by Srilanka Muslims Web Team