மனித உரிமைகள் தொடர்பில் எந்த நாடும் இலங்கையை அச்சுறுத்தவில்லை - Sri Lanka Muslim

மனித உரிமைகள் தொடர்பில் எந்த நாடும் இலங்கையை அச்சுறுத்தவில்லை

Contributors

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து அதன் எந்தவொரு நட்புறவு நாடும் அசாங்கத்துக்கு எச் சரிக்கை விடுக்கவில்லையென வெளி விவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார்.

ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வில் இலங்கைக்கு எதிராக ஏதேனும் தீர்மானம் கொண்டுவரப்படலாமென இலங்கையின் நட்புறவு நாடுகள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையெனவும் அவர் கூறினார்.

மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கெதிராக எத்தகைய சவால்கள் வந்தாலும் அதனை சமாளிக்க நாம் தயாராகவேயுள்ளோம். அமர்வுகளின்போது அரசாங்கம் என்ற வகையில் எம்மிடையே எழுப்பக்கூடிய வினாக்களை அவற்றுக்கான விடைகளை தயார்படுத்தி வருகின்றோம்.

மோதல்களுக்குப் பின்னர் மிக குறுகிய காலத்திற்குள்ளாகவே அபிவிருத்தி மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கச் செயற்பாடுகள் கட்டியெழுப்பப்படுகின்றன. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த முன்னாள் எல். ரீ. ரீ. ஈ. உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக் கப்பட்டு சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டு ள்ளனர். இவ்வாறாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்றச் செயற்பாடுகளை விளக்கமளிப்பது குறித்து நாம் தீர்க்கமாக ஆராய்ந்துள்ளோமெனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் எந்தவொரு நாட்டிடமிருந்தோ எமக்கு அழுத்தமோ அச்சுறுத்தலோ ஏற்படுத்தப்படவில்லை. ஜெனீவா கூட்டத் தொடரிற்கு சமுகமளிப்பதற்கு முன்னதாக அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் கொழும்பிலும் ஜெனீவாவிலுமுள்ள அனைத்து வெளிநாட்டு தூதுவர்களையும் நேரில் சந்தித்து இலங்கை அரசாங்கத்தின் அரசியல் மற்றும் அபிவிருத்தி நிலைமை தொடர்பில் விளக்கமளிப்பார்.

அத்துடன் எமது முன்னேற்றச் செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கையினை எமது தூதரகம் மற்றும் உயர்ஸ்தானிகராலயமூடாக அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கச் செய்வோம். இதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் தொடர்பிலான முன்னேற்றச் செயற்பாடுகள் குறித்து உலக நாடுகள் தெளிவான விளக்கத்தினை பெற்றுக் கொள்ளக்கூடியதாகவிருக்குமெனவும் அவர் கூறினார்.(thinakaran)

Web Design by Srilanka Muslims Web Team