மனித மாமிசத்தை புசிக்காதீர்கள் » Sri Lanka Muslim

மனித மாமிசத்தை புசிக்காதீர்கள்

islam

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

As-Shk TM Mufaris Rashadi


மனித மாமிசத்தைப் புசித்தல் என்ற சொல்லை திருக்குர்ஆன் பிறரது உள்ளம் வேதனையடையும் விதமாக பேசப்படும் வார்த்தைகளை குறிப்பதற்கே பயன்படுத்துகிறது.

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:-
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள் அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள்.இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

சமூகத்தில் சர்வ சாதாரணமாக பெரும் அறிஞர்கள் முதற்கொண்டு சாதாரண பாமரர்கள் வரை தெரிந்தோ தெரியாமலோ இந்த பாவத்தின் வலையில் சிக்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

புறம் பேசுதல் என்ற இந்த பாவத்தை சுன்னா எப்படி வரைவிலக்கணப்படுத்துகிறது என்பதனை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

ஹராம், ஹலாலை பேணி நடத்தல் என்பது வாழ்வின் எல்லா பகுதிகளிலும் கடைபிடிக்க வேண்டிய அம்சமாகும், குறிப்பாக பிறரது மானத்தோடு விளையாடுகின்ற விடயத்தில் மிகவும் கவனமாக நாம் நடந்து கொள்ள வேண்டும்.
புறம் பேசுதல் என்பது அல்லாஹ்விடத்தில் மிக மோசமான விடயமாக இருந்தும் மக்கள் இது விடயத்தில் அலட்சியமாகவே நடந்து கொள்கிறார்கள், இது பற்றிய பாரதூரமான எச்சரிக்கைகளை பின்வரும் நபிமொழிகளின் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

“ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் போது, “உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே! முஸ்லிம்களைப் பற்றியும் புறம் பேசாதீர்கள்; அவர்களது குறைகளை ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திரிகின்றாரோ, அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான்” என கூறினார்கள் (நூல்: அஹ்மத்)

வட்டியில் எழுபத்திரண்டு வகைகள் உள்ளன. அவற்றில் மிகக் குறைந்தது ஒருவன் தன் தாயிடம் உடலுறவு கொள்வதற்குச் சமமானதாகும். வட்டியிலேயே மிகக் கொடுமையானது தன் சகோதரனுடைய மானம் மரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துவதாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: (ஸில்ஸிலத்துல் ஸஹீஹா 1871)

புறம் பேசுவதன் மூலமாக இம்மையிலும் மறுமையிலும் பல மோசமான விளைவுகளையும் தண்டனைகளையும் நாம் சந்திக்க நேரிடுகிறது, அந்த வகையில் பின்வரும் நபி மொழி மறுமையின் முதல் தங்குமிடமான கப்றில் வழங்கப்படும் இப்பாவத்திற்கான தண்டனை பற்றி தெளிவு படுத்துகிறது.

‘நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்ற போது ‘இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விடயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்’ என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என கேட்கப்பட்ட போது ‘அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புஹாரி.

இப்பாவத்தின் மூலம் மறுமையில் கிடைக்கின்ற பயங்கரமான தண்டனையைப் பற்றி நபிமொழிகளில் பார்க்கும் போது பின்வரும் இச்செய்தி நமக்கு இதன் பாரதூரத்தை உணர்த்துகிறது.

மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது “ஜிப்ரீலே, அவர்கள் யார்” என்று கேட்டேன். “இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள்” என்று விளக்கமளித்தார்கள்.” அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்;: அஹ்மது.

புறம் பேசித்திரிவதன் மூலம் நாம் மறுமையில் தண்டிக்கப்படுகின்ற அதே வேளை நாம் யாரைப்பற்றி புறம் பேசினோமோ அவருக்கு நாம் எமது நன்மைகளை கொடுக்க வேண்டிய ஒரு துரதிஷ்ட நிலையும் நமக்கு ஏற்படும் என்பதையும் நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.) (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல் புஹாரி 2317.

புறம் பேசுதல் எனும் கொடிய பாவத்தை விட்டும் நமது நாவுகளை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும், அதே போன்று நாம் அமர்திருக்கின்ற ஒரு சபையில் நம்முடைய சகோதர, சகோதரியைப் பற்றிப் புறம் பேசப்படுமானால், நாமும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாவத்தில் சிக்கி உழலாமல் எந்த சகோதர, சகோதரியைப் பற்றிப் பேசப்படுகிறதோ அவருடைய கண்ணியத்தைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.

உண்மையான முஸ்லிமிற்கு நபிகளார் கொடுத்த வரைவிலக்கணத்துக்கு அமைய நமது வாழ்க்கையை ஒழுங்குபடுத்த முயற்சிக்க வேண்டும். சுவனம் செல்வதற்கு நமது அமல்கள் மாத்திரம் போதாது நமது நாவுகளையும் பேணிக் கொள்ள வேண்டும் அப்படி பேணிக் கொள்கின்ற மனிதர்களுக்கே சுவனம் நுழைவதற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது என்பதனை நாம் புரிந்து செயல்பட வேண்டும்.

“எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்ககியுடையவர்கள் தன் அண்டைவீட்டாருக்கு கெடுதல் செய்யாதீர்கள்; அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்ககியுடையவர்கள் விருந்தினரை உபசரியுங்கள்; அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்ககியுடையவர்கள் நல்லதையே பேசுங்கள் அல்லது (தேவையற்ற பேச்சுக்கள்,பொய் மற்றும் புறம் பேசுதல் ஆகியவற்றிலிருந்து நீங்கி) மௌனமாய் இருங்கள். புஹாரி.

நபி (ஸல்) கூறி­னார்கள்: எவ­ரது நாவு மற்றும் கையின் தொல்­லை­க­ளி­ல­ருந்து பிற முஸ்­லிம்கள் பாது காப்புப் பெறு­கி­றார்­களோ, அவரே (உண்­மை­யான) முஸ்லிமாவார். எவர் அல்லாஹ் தடை­விதித்­த­வற்­றி­லி­ருந்து வில­கிக்­கொண்­டாரோ அவரே முஹாஜிர் (துறந்­தவர்) ஆவார்.
(அறிவிப்பவர்: அப்­துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(ஆதாரம்: புஹாரி)

எல்லா சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்விற்கு அஞ்சி அவனது கருணையையும் மன்னிப்பையும் இலக்காக கொண்டு நாம் சிரமப்பட்டு செய்கின்ற அமல்களை யாரும் யாருக்கும் எவ்வகையிலும் உதவ முடியாத அந்நாளில் பிறருக்கு நிர்ப்பந்தமாக கொடுக்கின்ற அந்த துர்ப்பாக்கிய நிலையிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முயற்சிப்போமாக! (விடிவெள்ளி)

islam

Web Design by The Design Lanka