மன்னாரில் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் சோளச் செய்கைக்கு அமைச்சர் ரிஷாத் முயற்சி - Sri Lanka Muslim

மன்னாரில் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் சோளச் செய்கைக்கு அமைச்சர் ரிஷாத் முயற்சி

Contributors

-இர்ஷாத் றஹ்மத்துல்லா-

மன்னார் மாவட்ட விவசாயிகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் மன்னார் அரசாங்க அதிபர் செயலகத்தில் கூட்டம் ஒன்று இடம் பெற்றது.தற்போது மாவட்டத்தில் காணப்படும் வரட்சி நிலை தொடர்பிலும்,கடந்த காலத்தில் ஏற்பட்ட விவசாய நிலங்களின் பாதிப்பு தொடர்பிலும் அதிகாரிகள் இங்கு எடுத்துரைத்தனர்.

குறிப்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் உதவிகள் தொடர்பிலும்,மேலும் அந்த அமைச்சின் மூலம் விவசாயிகளுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் கவனம் செலுத்தனார். குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் விவசாயிகள் நெல்லினையே அதிகமாக பயிரிடுவதால்,நீர் பெற்றுக் கொள்ள முடியாத காலத்தில் அவர்கள் மாற்று உற்பத்திகளை செய்வதற்கு வழிகளை ஏற்படுத்தி கொடுப்பது அதிகாரிகளின் கடமையென இங்கு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதே வேளை மன்னார் மாவட்டத்தில் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் சோளச் செய்கையினை மேற்கொள்ளும் வகையில் வடமத்திய மாகாண அதிகாரிகளுடன் தொடர்பு  கொண்டு அதனை மன்னாரில் மேற்கொள்வது தொடர்பில் விவசாய திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாயிகளை அறிவுறுத்துவதற்கான ஏற்பாடுகளையும் உடன் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு ஏற்படுத்தினார்.

ஏனைய மாவட்டங்களில் சோளச் செய்கை சிற்நத முறையில் முன்னெடுக்கப்படுவதனுடன்,விவசாயிகள் 2 இலட்சம் ரூபா வரை இலாபம் பெறுவது தொடர்பிலும் அமைச்சர் அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார்.எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவது தொடர்பிலும்,வங்கிகளில் அவர்கள் பெற்ற கடன் தொடர்பில் உரிய வங்கிகளுடன் அரசாங்க அதிபர் தலைமையில் சந்திப்பினை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் இதன் போது பேசப்பட்டது.

மன்னார் அரசாங்க அதிபர் தேசப் பிரிய,பிரதேச செயலாளர்கள்,விவசாய மற்றும் நீர்ப்பாசன திணைக்கள பிரதி நிதிகள்,அமைச்சரின் மன்னார் இணைப்பாள் எம்.முனவ்வர் உட்பட பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

 

Web Design by Srilanka Muslims Web Team