மயிலுக்கு சஜித் தேவையில்லை, சஜிதுக்கே மயில் தேவை..! - Sri Lanka Muslim

மயிலுக்கு சஜித் தேவையில்லை, சஜிதுக்கே மயில் தேவை..!

Contributors

அண்மையில் சஜித் அ.இ.ம.கா பற்றி கூறிய கருத்துக்கள் இலேசாக கடந்து செல்ல கூடியதல்ல. அ.இ.ம.காவுக்கும், தங்களுக்குமிடையில் எந்தவிதமான சம்பந்தமுமில்லை என்ற வகையில் கருத்துரைத்திருந்தார். இரு கட்சிகளும் எந்தவித ஒப்பந்தமும் செய்யவில்லை என தெளிவாக கூறியுமிருந்தார். சஜிதுக்காக உழைத்த ஒரு மிக முக்கிய கட்சியை நோக்கி இவ்வாறு அவர் கூறியிருப்பது, சஜிதின் முதிர்ச்சியற்ற, இனவாத, சிலருக்கு கட்டுப்பட்ட அரசியலின் வெளிப்பாடு என்றே கூற தோன்றுகிறது.

தற்போது அ.இ.ம.கா மொட்டு அணிக்கு எதிரான அரசியலில் உறுதியாக இருக்கின்றது. இந் நிலையில் இரண்டாவது பெரிய தேசிய கட்சியாக உள்ள சஜித் தலைமையிலான ஐ.ம.சவோடும் முரண்பட்டுக்கொண்டால், தேசிய அரசியலை எவ்வாறு முன்னெடுப்பது என்ற வினா எழலாம். இவ் வினாவும் ஒரு வகையில் நியாயம் தானே! இவ்விரு கட்சிகள் தவிர்ந்து இலங்கையில் தேசிய கட்சிகளாக சு.க, ஐ.தே.க, ஜே.வி.பி ஆகிய கட்சிகள் உள்ளன. இவற்றோடு இணைந்து முஸ்லிம் அரசியலை முன்னெடுப்பது கடினம். அ.இ.ம.காவின் தேசிய அரசியல் சூனியமாகுமா போன்ற சிந்தனைகள் எழுவது தவிர்க்க முடியாதவைகள் தான்.

இலங்கையின் இரண்டாவது தேசிய கட்சியாக சஜிதின் ஐ.ம.ச உள்ள போதும், அது எத்தனை நாளைக்கு என்பது கேள்விக்குறியான விடயம். ஒரு பரந்துபட்ட கூட்டணியை அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் களமிறங்கியுள்ளன. சஜிதை தூக்கிவிட்ட சம்பிக்க,ராஜித ஆகியோர் தனி வழி பயணத்தை ஆரம்பித்துள்ளனர். ஐ.ம.சவின் முதுகெலும்பாக கருதப்படும் ஹரீனே பரந்துபட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைப்பதன் பிரதான நபராக உள்ளார். ஐ.ம.சவின் பிரதான பங்காளி கட்சிகளான மு.கா, த.தே.கூ, ஜ.ம.மு ஆகிய கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் உடன்பாடு கண்டுள்ளன. இவற்றை வைத்து நோக்கினால் சஜித் எதிர்காலத்தில் இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை இழப்பார் என்பதை ஐயமுற கூறமுடியும். இதன் பிறகு எதிர்க்கட்சிகளின் கூட்டணியாக இன்னுமொரு சக்தி உருவாகும். அதில் சஜிதும் ஒருவராக இருப்பார். இக் கூட்டணி வெற்றி பெறுமாக இருந்தால், சில வேளை மீண்டும் ஐ.தே.கவும், சு.கவும் பலம்பெறவும் சாத்தியங்கள் உள்ளன. தேசிய அரசியலில் சஜிதுக்கே அ.இ.ம.கா தேவை, அ.இ.ம.காவுக்கு சஜித் தேவையில்லை என்பதே தற்போதைய கள யதார்த்தம்.

அ.இ.ம.கா தலைவரின் கைதுக்கு பாதுகாப்பு பிரிவினர் சில காரணங்களை கூறினாலும், வேறு சில விடயங்களை அடிப்படையாக கொண்டே கைது நடைபெற்றதாக கூறப்படுவது யாவரும் அறிந்ததே! இதில் மிக முக்கியமான காரணங்களாக அலசப்படுவதில் ஒன்று தான், அ.இ.ம.கா தலைவர் தற்போது முயற்சிக்கப்படும் பரந்துபட்ட கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க அதிக வாய்ப்புள்ள ஒருவரை சந்தித்து பேசியதாகும். இது தற்போதைய ஆளும் அரசுக்கு அதிக சவாலான விடயம் என்பதோடு, இது சஜிதின் அரசியல் அஸ்திவாரத்தையே அசைத்து பார்க்க கூடியது. இப்போது சஜித் ஏன் அ.இ.ம.காவை நோக்கி அவ்வாறு கூறினார் என்பது புரிகிறதா? இதனை சஜித் இப்படி கையாள நினைப்பதே முதிர்ச்சியற்ற அரசியல் போக்கு. இந் நிலை எடுக்க மனோவுக்கு கட்டுப்பட்ட அரசியல் போக்கே பிரதான காரணம். இருவரையும் சமாளிக்கும் முதிர்ச்சி அவரிடமில்லை.

இந்த கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஐ.தே.கவின் தலைவர் ரணில் மிக முக்கிய கதா பாத்திரம் வகிக்கின்றார். அண்மையில் அவர் அ.இ.ம.கா தலைவரின் கைதுக்கு எதிராக பாரிய விரிவுரையையே பாராளுமன்றத்தில் அமைத்திருந்தார். நீதி கோரி சர்வதேசம் செல்லப் போவதாகவும் எச்சரித்திருந்தார். அ.இ.ம.கா தலைவருக்கு ஆதரவாக பேசினால் சிங்கள மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என்பது வெளிப்படையான விடயம். இப்படி இருக்கையில் நீண்ட நேரம் ஒதுக்கி அவர் பேசுகிறார் என்றால் ஏதும் இருக்க வேண்டுமல்லவா? சோழியன் குடும்பி சும்மா ஆடுமா? பரந்துபட்ட கூட்டணி அமைப்பதில் அ.இ.ம.கா தலைவரின் முக்கியத்துவத்தை அறிய இதுவே போதுமானது. இப்போது அ.இ.ம.கா தலைவர் மீது சஜிதின் கோபம் புரிகிறதா? சஜிதை வைத்துக்கொண்டு தாலாட்டு பாடுவதில் வேலையில்லையே?

தொடரும்….

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Web Design by Srilanka Muslims Web Team