மருதமுனை அப்துல் சத்தார் எழுதிய “மருதாபுரி” சரித்திர நாவல் நூல் வெளியீடு » Sri Lanka Muslim

மருதமுனை அப்துல் சத்தார் எழுதிய “மருதாபுரி” சரித்திர நாவல் நூல் வெளியீடு

m66

Contributors
author image

P.M.M.A.காதர்

மருதமுனையைச் சேர்ந்த ஏ.ஆர்.அப்துல் சத்தார் எழுதிய ‘மருதாபுரி’ சரித்திர நாவல் நூல் வெளியீடு சனிக்கிழமை(19-11-2016)மாலை மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எம்.ஏ.சமது தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் கலந்த கொண்டார். கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர்,விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம்,சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தென்கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுவுரையாளர் எம்.எம்.பாசில் நூல் அறிமுகவுரையையும்,ஆசிரியர் ஜெஸ்மி எம்.மூஸா நயத்தல் உரையையும்,வசந்தம் தொலைக் காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளரும், தயாரிப்பாளருமான எஸ்.எம்.எம்.முஸர்ரப் விஷேட உரையையும் நிகழ்த்தினார்கள்.

கல்முனை பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முகர்ரப் நூலின் முதற் பிரதியை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரிடமிருந்து பெற்றுக் கொண்டார். பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம்,ஆசிரியர் எம்.எம்.விஜிலி ஆகியோர் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்கள்.

நூல் அறிமுகம் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம்.பாசில் உரை
கடல் நமக்கே சொந்தமென எந்தக்கரையுமே உரிமை கொண்டாட முடியாது கடல் இருக்கும் வரைதான் கரைகளும் இருக்கும் அதேபோல் தமிழ் தமக்கு மட்டுமே சொந்தமென யாரும் நினைக்க முடியாது.தமிழ் தழைக்கும் வரைதான் தமிழ் பேசும் மக்களும் தழைக்கலாம் தலைமுறைகளும் செழிக்கலாம் என்ற செய்தியோடு மருதமுனை சத்தாரின் ‘மருதாபுரி’என்னும் மகாபுரியில் சங்கமித்திருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது.

இப்போது இலங்கை முஸ்லிம்கள் இன்று பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்குள் உட்பட்டிருக்கின்றார்கள் எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற சிங்கள சமூகமும்,தமிழ் சமூகமும் தங்களுக்குரிய தங்களுடைய வரலாற்றை விஞ்ஞான பூர்வமான அடிப்படையிலே நிருபித்துக் காட்டி பல ஆய்வுகளைச் செய்திருக்கின்றார்கள்.

கலாநிதி சுக்ரியும்,பேராசிரியர் அனஸூம் செய்திருக்கின்ற சில ஆய்வு முறைகளுக்கு அப்பால் ஒரு விஞ்ஞானத் தன்மைவாய்ந்த ஆய்வினை வெளிப்படுத்தி எங்களுடைய வரலாற்றும் பாரம்பரியத்தை,இந்த நாட்டிலே நாங்களும் எவ்வாறு வந்திருக்கின்றோம் எவ்வாறு குடியேறியிருக்கின்றோம் எவ்வாறு வாழ்ந்திருக்கின்றோம் எவ்வாறு வாழ்கின்றோம் எத்தனை வருட வரலாற்றைக் கொண்டிருக்கின்றோம் என்கின்ற வரலாற்றுப் பாரம்பரியத்தை விஞ்ஞானத்தன்மை வாய்ந்த ஆய்வுத்தன்மை ஒன்றின் ஊடாக வெளிக்கொண்டு வரமுடியாத பலயீனமான சமூகமாக இந்த நாட்டிலே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

காத்தான்குடியைச் சேர்ந்த் பேராசிரியர் அமீர் அலி அண்மையில் அவுஸ்திரேலியா நாட்டில் இருந்து வருகைதந்திருந்தார்; அவர் இலங்கையின் பொருளாதாரத்தை வரைந்தவர்.புரூனே நாட்டின் பொருளாதாரத்தையும் முழு நாட்டினுடைய வரலாற்றையும் எழுதியவர் 76 வயதில் அவர் வந்து சொல்லுகின்றார் இது எனக்கு ஆரம்பத்தில் விளங்கவில்லை இது இப்போதுதான் விளங்குகின்றது எம்முடைய வரலாற்றை விஞ்ஙான பூர்வமான முறையில் எழுதிவிடுங்கள் அதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று சொன்னார்.

சித்திலெப்பை ரிச்சட் போரம் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நாங்களும் ஒன்றிணைந்த அடிப்படையிலே இப்படியான கைங்கரியம் ஒன்றைச் செய்வதற்காக முற்பட்டிருக்கின்ற இந்த வேளையில்தான் மருதமுனை சத்தார் உண்மையான கதைகளையும் தன்னுடைய கற்பனைகளையும் சேர்த்து மருதமுனையினுடைய வரலாற்றை ‘மருதாபுரி’ நாவலை வெளிக் கொண்டுவந்திருக்கின்றார் என்பது வரவேற்கத்தக்கதாகும்.

நூல் நயவுரை ஆசிரியர் ஜெஸ்மி எம். மூஸா
இலக்கியத்தை ஜனரஞ்சகப்படுத்த முடியாத மக்களிடம் கொண்ட செல்ல முடியாத ஒரு காலகட்டத்தில் மருதமுனையில் மருதூர் வாணரயைப்போன்ற பலர் இந்தப் பிரதேசத்திலே இலக்கியங்களை யாரையும் எதிர்பார்க்காமல் செய்து கொண்டிருந்த போது சிறிய ஓரு கூட்டத்தினர்தான் அதற்கு ஆதரவு வழங்கியிருந்தார்கள். புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களுக்கு மருதமுனை கூடி எடுத்த வரலாற்று நிகழ்விலே ரமீஸ் அப்துல்லா உரையாற்றுகின்ற போது ஒரு சிலர் மட்டும் தான் அந்த அரங்கிலே இருந்தார்கள் என்பது மிகமுக்கியமான விடையம் இப்படி இருந்த இலக்கியத்தினுடைய நகர்வு இன்று மாற்றமடைந்திருக்கின்றது.

இந்த மாற்றம் எங்கிருந்து வந்திருக்கின்றது என்றால் இலக்கியத் தோடு அரசியல் பிணைகின்றது இலக்கியத்தோடு வர்த்தகம் பிணைகின்றது இலக்கியத்தோடு இலக்கியத்திற்கு அப்பால் இருக்கின்ற துறைசார்ந்தவர்கள் இலக்கியத் தோடு ஒன்றிணைய முனைகின்றார்கள்.இதற்கு முகப்புத்தகம் போன்ற ஊடகங்களின் வருகையும் அதன் தாக்கத்திற்குட்படுகின்ற திறனும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்பது எனது பார்வையாகும்.அந்த வகையில் நாங்கள் இந்த இலக்கிய மாற்றத்திற்குள் நின்று கொண்டுதான் மருதமுனை சத்தார் ஹாஜியாரையும் நாங்கள் பார்க்க வேண்டியிருக்கின்றது.இந்த வகையில் தான் ‘மருதாபுரி’ என்ற இந்த நாவலை வெளிக்கொண்டு வந்திருக்கின்றார்.

நூவல் துறையினுடைய வளர்ச்சியிலே ஐந்து வருடங்களை பின்னோக்கிச் சென்று ஒரு சரித்திர அல்லது வரலாற்று நாவல் என்கின்ற தடத்தை சத்தார் ஹாஜியாருடைய’மருதாபுரி’பதித்திருக்கின்றது இந்த இலக்கியம் பல்வேறு மாற்றங்களைப் பெற்று புதிய புதிய விடையங்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்ற ஒரு யுகத்திலே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.நண்பர் சாஜித் அக்கரைப்பற்றில் இருந்து பஞ்சபூதம் என்கின்ற ஒரு நூலை வெளியிட்டு அது நாவல் என்று சொல்லி நாவலுக்குள்ளே மிக முக்கியமான கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புகின்ற இந்தக் காலத்திலேதான் சத்தார் ஹாஜியார் ஐந்த வருடங்களுக்குப் பின்னர் இந்த ‘மருதாபுரி’ என்ற நாவலைத் தந்திருக்கின்றார். இது சரித்திர நாவலா இல்லையா என்ற கேள்விகளுக்கு அப்பால் பார்க்க வேண்டியிருக்கின்றது.

மருதமுனை சம்பந்தமாக அதன் வரலாற்றியல் சம்பந்தமாக இதுவரை எழுதப்பட்டிருக்கின்ற பல் வேறு விடையங்களைப்பற்றிய ஒரு தேடலை அவர் செய்திருக்கின்றார்.இந்தத் தேடல் எப்படி செய்யப்பட்டிருக்கின்றது என்று சொன்னால் ஏற்கனவே இந்த மருதமுனையினுடைய வரலாறு என்று புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் எழுதியிருக்கின்ற விடையம்,மான்புறும் மருதமுனை என்ற நூலில் ஆசிரியர் மூஸா எழுதியிருக்கின்ற மண்ணின் மைந்தர்கள் என்ற கட்டுரை,மருதமுனை மஜீதீனுடைய எனது கிராமத்தைத் தேடுகின்றேன் என்கின்ற பல்வேறு படைப்புக்களிலே சொல்லப்பட்ட விடையங்களையும் சத்தார் ஹஜியார் அறிந்த விடையங்களையும் கேள்விப்பட்ட அம்சங்களையும் கொண்ட ஒரு தொகுப்பு மருதாபுரி என்கின்ற நாவலாக வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

இந்த நூலை நாங்கள் பார்க்கின்றபோது இந்த நூலுக்குள் இருக்கின்ற விடையங்கள் என்பது உண்மையா பொய்யா என்கின்ற ஒரு விடையம் இருக்கின்றது.இலங்கையிலே சரித்திரங்களைப்பற்றிக் கூறுகின்றவர்கள் ஊர்களுடைய வரலாறுகளைப்பற்றி கூறுகின்றவர்கள் முக்குவர்கள் என்றும்,திமிலர்கள் என்றும்,பட்னானியர்; என்ற வரை முறைகளையெல்லாம் சொல்வார்கள்.சம்மாந்துறையினுடைய வரலாற்றைப்பற்றி றாசிக் எழுதிய நூலிலே சம்மாந்துறையிலே இருந்துதான் அது ஆரம்பிக்கிறது என்று அவர் சொல்லுகின்றார்.

நற்பிட்டிமுனை வரலாறு என்று நூல் வேறு ஒரு வடிவத்திலே சொல்லப்படுகின்றது. மருதமுனையினுடைய வரலாற்றின் பின்புலங்களை நாங்கள் பார்க்கின்றபோது புத்தளத்திலே இருந்து வந்த சீரபாத குலத்தினுடைய சீர்பாதேவியின் வரலாற்றின் மூலமாக வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு ஊரும் தங்களுடைய வரலாற்றை எழுதுகின்றபோது ஏற்படுகின்ற புனைவுகள் வரலாறுகளுடைய உண்மைத் தன்மையை அறிய முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு எங்களைத் தள்ளியிருக்கிறது.

m m-jpg2-jpg3 m-jpg2-jpg3-jpg5 m-jpg2-jpg3-jpg5-jpg6 m66

Web Design by The Design Lanka