மர்ஹூம் அன்வர் இஸ்மாயிலின் 15ஆவது நினைவுதினம் இன்று! - Sri Lanka Muslim

மர்ஹூம் அன்வர் இஸ்மாயிலின் 15ஆவது நினைவுதினம் இன்று!

Contributors

நீர்ப்பாசனத்துறை முன்னாள் அமைச்சரான மர்ஹூம் எம்.ஐ.அன்வர் இஸ்மாயிலின் 15ஆவது நினைவு தினம் (14) இன்றாகும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் குறுகிய காலத்தில் தனக்கென தனியான தொரு இடம்பிடித்துக் கொண்ட ஒரு இளம் தலைவராக முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி மர்ஹூம் எம்.ஐ. அன்வர் இஸ்மாயில் திகழ்ந்தார். 2007 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி அவர் மறைந்தார்.

1967.07.16 ஆம் திகதி ஆசிரியரான எம்.எம். இஸ்மாயில், மர்ஹீமா எம்.எம்.சுபைதா உம்மா தம்பதியருக்கு முதற்பிள்ளையாக சம்மாந்துறையில் அவர் பிறந்தார். 1972இல் சம்மாந்துறை தாறுல்உலூம் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்விையயும், 1977இல் உயர்கல்வியை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்திலும் பயின்று, கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடத்தில் கற்று 1993இல் சட்டத்தரணியாக வெளியேறினார்.

தனது மைத்துனரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் யூ.எல்.எம்.முகைதீன் அவர்களின் பாசறையில் பயிற்சி பெற்ற அன்வர் இஸ்மாயில் 1985இல் இலங்கையில் இனப்பிரச்சினை உக்கிரமடைந்த காலகட்டத்திலே முஸ்லிம்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் முன்னின்று உழைத்த இயக்கமான பாமிஸின் கிளை நிறுவனமான ‘மூஸா’ என்ற அமைப்பினை சம்மாந்துறையில் நிறுவி முஸ்லிம்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளை சர்வதேசமயப்படுத்தினார்.

சட்டபீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டது முதல் 1988 இல் மு.கா தலைவர் அஷ்ரஃபோடு இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மிகத் தீவிர உறுப்பினராக தன்னை மாற்றிக் கொண்டார்.

1988இல் கிழக்கில் தமிழ், முஸ்லிம் கலவரங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக பாடுபட்டார். 1990களில் எம்.எச்.எம். அஷ்ரப் பிரகடனப்படுத்திய ‘கறுப்பு வெள்ளி’ போராட்டத்தை அன்வர் இஸ்மாயில் மாணவர் சுயாதீன அமைப்பின் ஊடாக வெற்றிகரமாக முன்னெடுத்தார்.

நிறைந்த பேச்சாற்றல், வசீகரம், தைரியம், மக்களின் மனதினை ஆளுதல், அறிதல், சந்தர்ப்பத்தினை நன்றாக சரிவரப் பயன்படுத்தல், அரசியலில் மேலிடத்தில் சாதிக்கக் கூடிய மதிநுட்பம், பரந்த அரசியல் அனுபவம், விரைவில் புரிந்து கொள்ளும் ஆற்றல், சரியான நேரத்தில் சரியான முடிவு, புன்சிரிப்பு போன்ற குணங்களினால் தனக்கென்றுஆதரவாளர்களை வசீகரித்தார்.

அஷ்ரஃபின் அரசியல் பணியில் பாரியதொரு பகுதியை தனது தலையில் சுமந்து கொண்டு சம்மாந்துறையின் உத்தியோகப்பற்றற்ற பாராளுமன்ற உறுப்பினராகவே அக்காலங்களில் அவர் செயற்பட்டார்.

2000ஆம் ஆண்டு அஷ்ரஃப் மறைவின் பின்னர் 2001 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

கிழக்கு மாகாண உட்கட்டமைப்புப் பிரதி அமைச்சராகப் பதவியேற்ற அவர் பின்னர் தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2005இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக உழைத்தார். அந்த அரசாங்கத்தின் நீர்ப்பாசன அமைச்சராகக் கடமையாற்றினார்.

பல நீர்ப்பாசனத் திட்டங்களை தொடக்கி வைத்தார். மர்ஹும் அஷ்ரஃபின் மறைவுக்குப் பின்னர் அவரின் கனவை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயற்பட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்தியில் கூடிய கவனம் செலுத்தினார். அரச அரச சார்பற்ற நிறுவனங்களினதும், வெளிநாட்டு தூதுவர்களினதும் ஒத்துழைப்பைப் பெற்று அர்ப்பணிப்புடன் உழைத்தார். ‘மக்கள் மணிமனை’ அமைத்து இரவு பகலாக மக்களுக்கு சேவை செய்தார். சம்மாந்துறையின் பௌதிக அபிவிருத்தியில் இவரின் பங்களிப்பு அளப்பரியதாகும். தனது மக்களையும், மண்ணையும் நேசித்தார்.

40 ஆண்டுகள் வாழ்ந்த அன்வர் இஸ்மாயில் ஒரு சட்டத்தரணியாக, முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்காக போராடும் பாராளுமன்ற உறுப்பினராக, பிரதியமைச்சராக, அமைச்சராக குறுகிய காலம் பணியாற்றினார். சம்மாந்துறை வரலாற்றில் மட்டுமன்றி முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றிலும் அவர் மறக்க முடியாத ஆளுமை.

 

எம்.சி. அன்சார்

Web Design by Srilanka Muslims Web Team