மலசலகூட 90 % கழிவுகள் நிலத்தடி நீருடன் கலக்கிறது - நடவடிக்கை எடுக்காவிடில் 15 வருடங்களில் குடிநீர் கிடைக்காது - வாசுதேவ..! » Sri Lanka Muslim

மலசலகூட 90 % கழிவுகள் நிலத்தடி நீருடன் கலக்கிறது – நடவடிக்கை எடுக்காவிடில் 15 வருடங்களில் குடிநீர் கிடைக்காது – வாசுதேவ..!

Contributors
author image

Editorial Team

மலசல கூடங்களின் 90 வீதமான கழிவுகள் நிலத்தடி நீரில் கலப்பதையடுத்து எமது குடிநீர் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்க நேர்ந்துள்ளதாகவும் அதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மலசல கூடங்களின் கழிவுகள் நேரடியாக நீருடன் கலப்பதால் நிலத்தடி நீரின் தரமும் தன்மையும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள அவர் அதற்கான தீர்வை விரைவில் பெற்றுக்கொள்வது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதற்கான தீர்வை விரைவில் பெற்றுக்கொடுக்காவிட்டால் எமது குடிநீர் பெரும் பிரச்சினைக்கு உள்ளாகிவிடும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேசிய மலசலகூட கழிவுகள் முகாமைத்துவம் தொடர்பான கொள்கை தயாரிப்பது சம்பந்தமான செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,..

தற்போது எமது ஆராய்ச்சியின் முடிவுகளுக்கு இணங்க மலசல கூடங்களின் கழிவுகள் நேரடியாக நிலத்தடி நீரோடு கலக்கின்றன. அதற்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் நாம் பாரிய வேலைத் திட்டமொன்றை தற்போது ஆரம்பித்துள்ளோம்.

அது தொடர்பில் தேசிய கொள்கை ஒன்றை தயாரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கிணங்க எதிர்காலத்தில் வீடுகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் ஆகியவற்றின் நிர்மாண நடவடிக்கைகளின்போது கழிவுகளை அகற்றுவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நாம் அறிமுகம் செய்து வைக்கவுள்ளோம். நாட்டில் அனைவருமே இது தொடர்பில் தெளிவுபெறவேண்டும் இல்லாவிட்டால் இன்னும் சுமார் 15 வருடங்களில் எமக்கு சுத்தமான குடிநீர் இல்லாமல் போய்விடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஷம்ஸ் பாஹிம்

Web Design by The Design Lanka