மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களுக்கு எதுவித அநியாயங்களும் நடைபெற இடமளிக்கவில்லை என அமைச்சர் ஹக்கீம் கூறவில்லை - Sri Lanka Muslim

மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களுக்கு எதுவித அநியாயங்களும் நடைபெற இடமளிக்கவில்லை என அமைச்சர் ஹக்கீம் கூறவில்லை

Contributors
author image

டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்

‘அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  முஸ்லிம்களுக்கு எதுவித அநியாயங்களும் நடைபெற இடமளிக்கவில்லை’

 

என நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் பதுளை வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் உரையாற்றிய போது கூறியதாக ரிவிர என்ற சிங்கள மொழி பத்திரிகையில் எப். அஸ்லம் என்ற நிருபர் எழுதியிருந்த செய்தி முற்றிலும் பிழையானது.

 

அந்த செய்தியில் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள முற்படாது, வழமையைப் போல முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொண்டு  ஆசாத்சாலி அவசரப்பட்டு அமைச்சர் ஹக்கீம் மீது குற்றம் சுமத்தியுள்ளதை மு.கா தலைவர் அமைச்சர் ஹக்கீமின்  ஊடக ஆலோசகர்  என்ற முறையிலும், அக் கூட்டத்தில் கலந்து கொண்டவன் என்ற முறையிலும் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகும்.

 

அக் கூட்டத்தில் தனியார் மற்றும் அரசாங்க தொலைக்காட்சி நிறுவனங்கள் சார்பிலும் தமிழ், சிங்கள பத்திரிகைகளின் சார்பிலும் ஊடகவியலாளர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.

 

சிங்கள மொழி பேசக் கூடிய ஊடகவியலாளர்கள் அதிகமாக இருந்த காரணத்தினால் அமைச்சர் ஹக்கீம் தமது உரை மாற்றுமொழி ஊடகங்கள் ஊடாகவும் நாட்டு மக்களை உரிய முறையில் சென்றடைய வேண்டும் என்ற காரணத்தினால் அதனை முழுக்க முழுக்க சிங்களத்திலேயே நிகழ்த்தினார்.

 

அந்த உரையில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்களை கண்டும் காணாமல் இருப்பதற்காக  அரசாங்கத்தையும், ஆட்சித் தலைமையையும் அமைச்சர் ஹக்கீம் மிகவும் காரசாரமாக விமர்சித்தார்.

 

அந்த உரையின் தமிழாக்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘வீரகேசரி’, ‘தினக்குரல்’ ஆகியவற்றில் பிரசுரமாகியிருந்தது.

இவ்வாறிருக்க, போதிய அனுபவமற்ற அந்த  இளம் ஊடகவியலாளர் அச் செய்தியை பிழையாக எழுதி  குறிப்பிட்ட சிங்களப் பத்திரிகைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

 

அந்தச் செய்தியை எழுதுவதற்கு முன்னர் அவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரவூப் ஹக்கீம் அவர்கள்  நீதியமைச்சராக இன்னும் பதவி வகிக்கிறாரா என கேட்டதிலிருந்தே அவருக்கு போதிய தெளிவு இல்லை என்பதை நான் புரிந்து கொண்டேன்.

 

பின்னர் சம்பந்தப்பட்ட பிழையான செய்தி அவர் நிருபராக இருக்கும் பத்திரிகையில் வெளியான அன்று காலையில் அவர் என்னை தொலைபேசியில்  மீண்டும் தொடர்பு கொண்டு அதனை வாசித்துக் காட்டிய போது, ஏன் இவ்வாறு பொய்யாக எழுதியுள்ளீர்கள்.

 

அமைச்சர் ஹக்கீம் அவ்வாறு ஜனாதிபதியையோ அரசாங்கத்தையோ ஆதரித்து அறவே பேசவில்லையே என நான் அவரைக் கடிந்து கொண்டேன். எனது பார்வையில் அவர் ஊடகத் துறையிலோ அரசியலிலோ போதிய அனுபவமற்றவராகவே தென்பட்டார்.

 

அவரது தந்தையார்  சிங்கள மொழி மூல சிரேஷ்ட ஊடகவியலாளரும், எனது நண்பரும் என்ற காரணத்தினால் பிரஸ்தாப செய்தியை எழுதிய நிருபருக்கு தொழில் ரீதியாக ஏதும் பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதனால் அந்தப் பத்திரிகை ஆசிரியரிடம் நான் அதுபற்றி முறையிடவில்லை.

 

ஊவா மாவட்ட தேர்தல் மிக நெருங்கி வரும் இந்த வேளையில் இரட்டை இலை சின்னத்தில் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் சார்பில்; போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றியடையும் சாத்தியக் கூறு இருப்பதால் அரசியல் சந்தர்ப்பவாதிகள் அந்தப் பொய்யான செய்தியை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த எத்தனிக்கின்றனர்.

 

டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஸ்ரீ.ல.மு.கா தலைவர் அமைச்சர்
ரவூப் ஹக்கீம் அவர்களின் ஊடக ஆலோசகர்

Web Design by Srilanka Muslims Web Team